வியாழன், 9 ஜனவரி, 2020

ஈரானுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார்.. அமெரிக்கா திடீர் அறிவிப்பு


Velmurugan P -tamil.oneindia.com: நியூயார்க்: ஈரானுடன் எந்த விதமான நிபந்தனையும் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்த தாங்கள் தயாராக இருப்பதாக ஐநாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஈரான் ராணுவத் தளபதி காசெம் சுலைமானியை அமெரிக்க வான்வெளி தாக்குதல் மூலம் வெள்ளிக்கிழமை கொலை செய்தது. இந்த சம்பவத்தால் ஈரானில் பெரும் கொந்தளிப்பான நிலை ஏற்பட்டுள்ளது. பழிக்கு பழிவாங்குவோம் என ஈரான் சபதம் எடுத்துள்ளது. இந்நிலையில் ஈராக்கில் உள்ள 5 ஆயிரம் அமெரிக்க படை வீரர்களை குறிவைத்து கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் ஏவுகணையை ஈரான் வீசியது. இதில் 80 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்ததாக ஈரான் கூறியது. ஆனால் அமெரிக்காவோ யாரும் சாகவில்லை. ஆனால் தாக்குதல் நடந்தது உண்மை தான். சிறிய சேதம் ஏற்பட்டது என்றது
இந்த சூழலில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்தது. எந்த நேரமும் இரு நாடுகளும் மோதிக்கொள்ளும் அபாயம் எழுந்தது. இந்த சூழ்நிலையில் தான் அமெரிக்கா, ஐநா சபைக்கு கடிதம் எழுதியுள்ளது. அமெரிக்கா தனது கடிதத்தில் தற்காப்புக்காகவே ஈரான் ராணுவ தளபதி காசெம் சுலைமானியை கொன்றதாக கூறியுள்ளது.

 எந்த ஒரு நாடும் தங்கள் தற்காப்பு கருதி நடவடிக்கை எடுக்க ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் பிரிவு 51 வழிவகை செய்வதாகவும், அதன் அடிப்படையிலேயே தாங்கள் செயல்பட்டதாகவும், சுலைமானியை கொன்றதை நியாயப்படுத்தி அமெரிக்கா அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
ஐநாவுக்கான அமெரிக்க தூதர் கெல்லி கிராப்ட் எழுதியுள்ள அந்த கடிதத்தில் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், ஈரான் மேல் நடவடிக்கை எடுக்காமல் இருக்கவும் ஈரானுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தயாராக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது மத்திய கிழக்கு நாடுகள் பகுதியில் உள்ள தங்கள் நாட்டு ஊழியர்கள் மற்றும் அவர்களின் நலனை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை அமெரிக்கா எடுக்கும் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
< இதனிடையே ஈரான் ஐநாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், பிரிவு 51ன் கீழ் தான் நாங்களும் அமெரிக்க நிலைகள் மீது தற்காப்புக்காகவே தாக்குதல் நடத்தினோம். போரை அல்லது விரும்பத்தகாத நிகழ்வுகளை விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளது.

ஐநா சபை பிரிவு 51 இன் கீழ், நாடுகள், தற்காப்பு உரிமையைப் பயன்படுத்துவதில் எடுக்கப்பட்ட எந்தவொரு நடவடிக்கைகளையும் 15 உறுப்பினர்களைக் கொண்ட ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு "உடனடியாக அறிக்கை" செய்ய வேண்டும் என்பது விதி. அதன்படியே அமெரிக்கா மற்றும் ஈரான் பதில் அளித்துள்ளன. சிரியாவில் ஐஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை நியாயப்படுத்த அமெரிக்கா 51 வது பிரிவைப் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக