திங்கள், 6 ஜனவரி, 2020

தாக்கப்பட்ட மாணவர்களுக்கு உலக மாணவர்கள் ஆதரவு!

தாக்கப்பட்ட மாணவர்களுக்கு உலக மாணவர்கள் ஆதரவு!minnamblam : ஜேஎன்யுவில் தாக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாக ஆக்ஸ்போர்ட், கொலம்பியா பல்கலைக் கழகத்திலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நேற்று மாலை முகமூடி அணிந்தபடி புகுந்த மர்ம நபர்கள் கண்ணில் கண்ட மாணவர்கள், பேராசிரியர்களை எல்லாம் கண்மூடித் தனமாகத் தாக்கினர். இதில் பல்கலைக் கழக மாணவர் தலைவர் அயிஷ் கோஷ் உள்ளிட்ட 30 மாணவர்கள் காயமடைந்து, எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

ஜேஎன்யு மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு எதிராக பாண்டிச்சேரி பல்கலைக் கழகம், பெங்களூரு பல்கலைக் கழகம், யுனிவர்சிட்டி ஆப் ஐதராபாத், அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழக மாணவர்கள் நேற்று இரவு முதல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோலவே தாக்கிய குண்டர்களை கைது செய்ய வேண்டுமென டெல்லி பல்கலைக் கழகம், பஞ்சாப் பல்கலைக் கழக மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இதுதொடர்பாக பாண்டிச்சேரி பல்கலைக் கழக மாணவி ரைசா, “இன்று அவர்களுக்கு நடந்தது நாளை நமக்கு நடக்காது என்பதற்கு என்ன நிச்சயம். வன்முறை எந்த வடிவத்தில் வந்தாலும் அதனை எதிர்க்க வேண்டும். நாங்கள் எங்கள் ஜேஎன்யு நண்பர்களுக்கு ஆதரவாக நிற்கிறோம்” என்று கூறினார்.
மும்பையிலுள்ள இந்தியா கேட் பகுதியில் திரண்ட அப்பகுதியிலுள்ள பல்வேறு கல்லூரி மாணவர்கள், மெழுகுவர்த்தி ஏந்தி, ஜேஎன்யு மாணவர்களுக்கு ஆதரவாக அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபோலவே புனே திரைப்படக் கல்லூரி மாணவர்களும் கைகளில் தீப்பந்தம் ஏந்தி முழக்கமிட்டனர். கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக் கழக மாணவர்கள், கண்டன வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை பல்கலைக் கழக மாணவர்கள், பல்கலைக் கழக வளாகத்தில் கூடி ஜேஎன்யு மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிராக பதாகைகள் ஏந்தி முழக்கமிட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அவர்களை நேரில் சந்தித்த திமுக எம்.பி கனிமொழி தனது ஆதரவைத் தெரிவித்தார். தஞ்சை சரபோஜி கல்லூரி மாணவர்கள் வகுப்பைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் இந்தியா மட்டுமல்லாமல் உலகெங்கிலும் எதிரொலிக்கத் துவங்கியுள்ளது. லண்டனிலுள்ள ஆக்ஸ்போர்டு, சோயாஸ் பல்கலைக் கழக மாணவர்களும், கொலம்பியா பல்கலைக் கழக மாணவர்களும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பல்கலைக் கழக வளாகத்திற்குள் மாணவர்கள் பாதுகாப்பு தொடர்பான போஸ்டர்களை ஒட்டியதோடு, பேரணிகளும் நடத்தப்பட்டன.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஜேஎன்யு மாணவர் தலைவர் அயிஷ் கோஷ், “ஜேஎன்யு பல்கலைக் கழக துணை வேந்தரை உடனடியாக நீக்க வேண்டுமென நாங்கள் வலியுறுத்துகிறோம். ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஏபிவிபி குண்டர்களால் திட்டமிடப்பட்டு நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ் ஆதரவு பேராசிரியர்கள் மற்றும் ஏபிவிபி அமைப்பினரால் கடந்த 4-5 நாட்களாக வன்முறைக்கு ஊக்குவிக்கப்பட்டுவந்தது” என்று தெரிவித்தார்.
மேலும், “மாணவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் ஒவ்வொரு இரும்புக் கம்பிக்கும் பதில் விவாதம் மற்றும் கலந்துரையாடல் மூலம் திருப்பித் தரப்படும். ஜேன்யு கலாச்சாரம் எப்போதும் அழிக்கப்படாது. ஜேஎன்யு ஜனநாயகக் கலாச்சாரத்தை நிலைநிறுத்தும்” என்று குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக