வியாழன், 9 ஜனவரி, 2020

கடவுள் அறிய... மொத்த திமுகவையே உசுப்பி விட்ட மஞ்சம்பட்டி பார்வதி.. வீடியோ


மின்னம்பலம் : வார்டு உறுப்பினராகப் பதவியேற்ற பெண் ஒருவர், கலைஞரின் பெயரில் உறுதிமொழி எடுத்தது பலரையும் நெகிழச் செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கடந்த 6ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டனர். அந்த வகையில் மதுரை மாவட்டம் மதுரை மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட மஞ்சம்பட்டி ஊராட்சி 6ஆவது வார்டு உறுப்பினராக பார்வதி லிங்கம் என்பவர் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பதவியேற்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உறுதிமொழி வாசகங்களைப் பதவிப் பிரமாணம் செய்துவைக்கும் அதிகாரி சொல்லச் சொல்ல, வார்டு உறுப்பினரான பார்வதியும் சொல்கிறார். இறுதியாக, ‘கடவுள் அறிய உளமார உறுதி கூறுகிறேன்’ என்று முடிக்க வேண்டிய இடத்தில், ‘கலைஞர் அறிய உளமார உறுதி கூறுகிறேன்’ என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டார். பார்வதி தவறாகத்தான் கூறுகிறார் என்று நினைத்த அந்த அதிகாரி மறுபடியும் ‘கடவுள் அறிய’ என்று கூற, அது தவறு என்பதுபோல தலையாட்டிவிட்டு, ‘கலைஞர் அறிய’ என்றே பார்வதி பிரமாணம் எடுத்தார். இதனை அருகிலிருந்து திமுகவினர் கைதட்டி வரவேற்றனர்.

இதைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், “ஊராட்சி வார்டு உறுப்பினராகப் பதவியேற்ற சகோதரி பார்வதி, ‘கலைஞர் அறிய’ என்று சொல்லிப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட காட்சிதந்த பெருமிதத்தால், என் கண்கள் குளமாயின. கலைஞரின் உழைப்புக்கு எத்தகைய உயிர்ப்புச் சக்தி இருக்கிறது என்பதற்கு உதாரணம் இந்த சகோதரி. வாழ்த்துகள் பார்வதி” என்று பதிவிட்டுள்ளார்.
மதுரை மாவட்டத்தின் ஏதோ ஒரு மூலையிலுள்ள கிராமத்தில் வார்டு உறுப்பினராகப் பொறுப்பேற்கும் ஒரு பெண், கலைஞரின் பெயரில் பதவிப் பிரமாணம் எடுக்கிறார் என்பது, மறைந்த பிறகும் ஒரு தலைவர் மீது தொண்டர்கள் வைத்திருக்கும் அன்பையும், பற்றுதலையுமே பிரதிபலிக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலின்போது திமுகவினர் உறுதிமொழி எடுத்துக்கொண்ட பிறகுதான் கலைஞர் வாழ்க என்று முழக்கமிட்டனர்.
இப்போது கலைஞரின் பெயரிலேயே பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டது வேறு எந்தத் தலைவருக்கும் கிடைக்காத சிறப்பு என்கிறார்கள் திமுகவினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக