வெள்ளி, 24 ஜனவரி, 2020

கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்

மாணவர் தண்டபாணிகண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர் மாலைமலர் : அரசு பள்ளி மாணவர் தண்டபாணி கண்களை துணியால் கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை சரியாக கூறி அனைவரையும் அசத்தி வருகிறார். மாணவர் தண்டபாணி கண்ணை கட்டிக்கொண்டு ரூ.500 நோட்டை சரியாக கூறியபோது எடுத்த படம்.
லாலாபேட்டை : கரூர் மாவட்டம், பழையஜெயங்கொண்டம் அருகே உள்ள கோவக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால். கூலி தொழிலாளி. இவரது மகன் தண்டபாணி (வயது 13). இவர் பழையஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கண்களை துணியால் கட்டி கொண்டு சுற்றி நடப்பதை அறிந்து கொள்ளும் பயிற்சி பெற்றிருக்கிறார். இந்தநிலையில் நேற்று காலை பள்ளி வளாகத்தில் மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் தண்டபாணியின் கண்களை ஒரு துணியில் கட்டிவிட்டனர். பிறகு ஆசிரியர்கள் கைவிரலை காட்டி இது எத்தனை என்று கேட்டபோது சரியாக பதில் கூறினார். ரூபாய் நோட்டுகளின் மதிப்பு, அந்த நோட்டின் வரிசை எண்கள் போன்றவை குறித்த விவரங்களை அவர் சரியாக கூறினார். இதைக்கண்டு பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் ஆச்சரியம் அடைந்தனர்.

இதுகுறித்து மாணவர் தண்டபாணி நிருபர்களிடம் கூறுகையில், நான் இந்த பயிற்சியை 2 மாதத்தில் கற்று கொண்டேன். பயிற்சி செய்யும் முன்பு அரை மணி நேரம் உடல் பயிற்சியும், அரை மணி நேரம் தூங்கவும் வேண்டும். பிறகு என்னை சுற்றி நிற்பவர்களை பற்றி துல்லியமாக சொல்லமுடியும். பயிற்சியின்போது அசைவ உணவை தவிர்க்க வேண்டும். படிப்பில் பின்தங்கிய நான், தற்போது முதல் மாணவனாக பயின்று வருகிறேன். அரசு அனுமதித்தால் நான் கண்ணை கட்டிக்கொண்டு தேர்வு எழுத தயாராக உள்ளேன் என்றார்.

மாணவருக்கு பயிற்சி அளித்த வேல்முருகன் நிருபர்களிடம் கூறுகையில், நானும் இந்த அரசு பள்ளியில் தான் படித்தேன். தற்போது அஞ்சல் வழி கல்வி மூலம் படித்து பி.ஏ. பட்டம் பெற்றுள்ளேன். தற்போது பழையஜெயங்கொண்டத்தில் தங்கி அங்குள்ள பாம்பலாயியம்மன் கோவிலில், பூசாரியாக உள்ளேன். பல்வேறு நூல்களை படித்து வந்தேன். மூளை வளர்ச்சி, விரல்கள் சம்பந்தமான பயிற்சி, கண் விழிகளை நகர்த்துதல், தியானம் சம்பந்தமான பயிற்சியை மேற்கொண்டேன். தற்போது மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி கொடுத்து வருகிறேன். என்னுடைய ஆசை அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளித்து அவர்களை சமுதாயத்தில் திறமையானவர்களாக உருவாக்க வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக