ஞாயிறு, 19 ஜனவரி, 2020

பாலபாரதியை துப்பாக்கியை காட்டி மிரட்டிய சுங்க சாவடி ஊழியர்கள்... முன்னாள் கம்யுனிஸ்டு எம் எல் ஏ..

ex mla Balabharathi accusationநக்கீரன் : துப்பாக்கியைக் காட்டி மிரட்டல் விடுத்தார்கள்" - கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு...! கரூர் மாவட்ட சுங்க சாவடி ஊழியர்கள் தன்னை துப்பாக்கியைக் காட்டி மிரட்டினார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்(சிபிஎம்) பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திருச்சியில் இருந்து சிபிஎம் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி இன்று மாலை அவரது காரில் ஈரோடு வந்தார். அப்போது, கரூர் மாவட்ட டோல்கேட்டில் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் துப்பாக்கியுடன் மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து பாலபாரதி ஈரோட்டில் இன்று இரவு செய்தியாளர்களிடம் கூறுகையில்,"திருச்சியில் இருந்து கரூர் செல்லக்கூடிய மணவாசி சுங்கசாவடி உள்ளது. அங்கு எனது கார் வந்தவுடன், எனது அனுமதி சீட்டினை காட்டியபோது, ஊழியர்கள் அனுமதிக்க மறுத்தனர்.அதோடு எங்களது டிரைவரிடம் அவர்கள் மரியாதைக்குறைவாக பேசினார்கள்.


இதைத்தொடர்ந்து எனது டிரைவர் காரை எடுக்கமுடியாது என கூறினார். அப்போது, சுங்கச்சாவடி அலுவலகத்தில் இருந்து இரட்டைக்குழல் துப்பாக்கியுடன் வந்த ஒருவர்  எனது கார் முன் நின்றார். அது ஏதோ மிரட்டல் தொணியில் இருந்தது. அந்த துப்பாக்கியுடன் வந்தவர் கன்மேன் என கூறினர். அவர் பணத்தை எடுத்து செல்லும் போது மட்டுமே பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஆனால், சுங்க வரி செய்யும் இடத்திற்கு வருகிறார். இதற்கு முறையாக அனுமதி பெற்றுள்ளனரா? என்பதும் தெரியவில்லை.

சுங்கசாவடிகளில் சமூக விரோதிகள் பயங்கர ஆயுதங்களுடன் உட்கார வைத்துள்ளனர். யாராவது கேள்வி கேட்டால் பணத்தை கொள்ளையடிக்க வந்ததாக சுட்டு கொன்றுவிடுவார்கள் என நினைக்கிறேன். தமிழக அரசின் கட்டுப்பாட்டிற்குள் இந்த சுங்கசாவடிகள் உள்ளனவா?, இச்சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட கலெக்டரிடம் சிபிஎம் கட்சி சார்பில் புகார் அளிப்போம். தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நுழைய பல்வேறு சுங்க கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. வடமாநிலங்களில் பெரும்பாலான சுங்கசாவடிகள் இல்லை. கேரளாவிலும் இல்லை. எனவே, தமிழக அரசும் சுங்கசாவடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கிறோம்." என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக