ஞாயிறு, 5 ஜனவரி, 2020

டெல்லி ஜே என் யூ. மாணவர்கள், பேராசிரியர்கள் மீது BJP ரவுடிகள் தாக்குதல்; விடுதி சூறையாடல்!' -கலவர பூமியான

vikatan.com - ராம் பிரசாத் : டெல்லி ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் புகுந்து மாணவர்கள் மற்றும் பேராசியர்களை ஏ.பி.வி.பி அமைப்பினர் முகமூடி அணிந்து தாக்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் போர்க்களமாக காட்சியளிக்கிறது. பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமைந்துள்ள விடுதிகள் சூரையாடப்பட்டுள்ளன. இடதுசாரி மற்றும் வலதுசாரி அமைப்பினர்களுக்கு இடையே மோதலே இந்த நிலைக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இரு பிரிவினரும் ஒருவருக்கொருவர் மாறி மாறி குற்றஞ்சாட்டுகின்றனர். பா.ஜ.க மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) சனிக்கிழமை அதிகாலை பெண்கள் தங்கும் சபர்மதி விடுதியில் புகுந்து தாக்குதல் நடந்தியதாக ஜே.என்.யூ மாணவர் அமைப்பு குற்றஞ்சாட்டுகிறது. அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினருடன் பல்கலைக்கழக பாதுகாவலர்களும் முகமூடி அணிந்து தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இடதுசாரிகள் மாணவர்கள் தாக்குதல் நடத்தியதாக அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பு குற்றஞ்சாட்டுகிறது. பல்கலைக்கழக வளாகம் முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஜே.என்.யூ மாணவர் அமைப்பு தலைவர் அய்ஷி கோஷ் தன் முகநூல் பக்கத்தில் நேற்று நடந்த தாக்குதல் குறித்து விவரித்துள்ளார். ``பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் உதவியாளர்கள் கைகளில் குச்சிகளையும், கற்களையும் கொண்டு தாக்குதல் நடத்துகின்றனர். இதில் மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். என் கண்முன்னே மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது” எனக் கூறியுள்ளார். மாணவ செயற்பாட்டாளராக பிரியதர்ஷினி பேசுகையில், ``எங்களது போராட்டத்தை பற்றியும் எங்களது பிரச்னைகளையும் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம்.

 பல்கலைக்கழக துணைவேந்தரால் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாவலர்களின் அராஜகங்கள் உங்களுக்கு தெரியாது. ஒவ்வொரு நாளும் இவர்கள் மாணவிகளிடம் மோசமாக நடந்து கொள்கிறார்கள். ஆண்களைக் கையாளுவதை போல் கையாளுகின்றனர். மோசமான மற்றும் கீழ்த்தரமான வார்த்தைகளால் பேசுகின்றனர். எங்களை அவமானப்படுத்துகிறார்கள். அடித்துத் துன்புறுத்துகிறார்கள்.

இந்த பாதுகாப்பை பெற எங்கள் துணைவேந்தர் சுமார் 17 கோடி ரூபாயை செலவிட்டுள்ளார். இந்த பணத்தில் பாதியை அவர் எங்களது கல்விக்காக செலவிட்டிருந்தால் நாங்கள் இன்று போராடிக்கொண்டிருக்க மாட்டோம். நாங்கள் 70 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம்'' என்றார். இன்று மாலை 6.30 மணியளவில் ஒரு கும்பல் மீண்டும் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளது. ஜே.என்.யூ மாணவர் அமைப்பு தலைவரான அய்ஷி கோஷ் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். செய்தியாளர்களிடம் பேசிய அய்ஷி கோஷ், ``முகமூடி அணிந்த நபர்களால் நான் கொடூரமாகத் தாக்கப்பட்டேன். என் முகத்தில் ரத்தம் வழிகிறது'' என்றார். தாக்குதல் குறித்து பேராசிரியர் அதுல் சூத் கூறும்போது,

``அந்த கும்பல் விடுதிக்குள் கற்களை வீசினர். விடுதிகளுக்குள் நுழைந்து இங்கிருந்த பொருள்களை எல்லாம் அடித்து நொறுக்கினர். சிறிய கற்கள் எல்லாம் இல்லை; எல்லாம் பெரிய பெரிய கற்கள். எங்களது மண்டையை உடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வீசப்பட்டது. நான் வெளியில் வந்து பார்த்தபோது வாகனங்கள் எல்லாம் அடித்து நொறுக்கப்பட்டிருந்தது'' என்றார்
ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில், மாணவர்கள் தங்கும் விடுதிக்கான விதிமுறைகளில் மாற்றங்களைக் கொண்டுவர கடந்தாண்டு நிர்வாகம் முடிவெடுத்தது. இதுதொடர்பாக முன்வரைவு ஒன்றையும் வெளியிட்டு, மாணவர்களிடம் கருத்துகளைக் கேட்டிருந்தது. இதில், விடுதிக்கான கட்டணத்தை எக்கச்சக்கமாக உயர்த்தியிருந்தது. இதனால் வெளியான முன்வரைவுக்கு மாணவர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதுதொடர்பாக பல்கலைக்கழக துணை வேந்தரைச் சந்திக்க முடிவுசெய்தனர்

துணைவேந்தரைச் சந்திக்க முடியாததால் அவரது அறைக்கு மாணவர்கள் பூட்டு போட்டனர். இந்தச் சூழலில், மாணவர்கள் போராட்டத்தைக் கையில் எடுத்தனர். சுமார் 70 நாள்களுக்கு மேலாக ஜேஎன்யூ மாணவர்கள் விடுதி கட்டண உயர்வு, தேர்வு கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தைக் கைவிடுமாறு மாணவர்களை ஏ.பி.வி.பி அமைப்பு எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், மாணவர்கள் போராட்டத்தைக் கைவிடாத நிலையில், அவர்கள் மீது இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. ஜே.என்.யூ மாணவர்கள் மீதான இந்தத் தாக்குதல் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக