வெள்ளி, 31 ஜனவரி, 2020

BBC : இந்தியாவில் கொரோனா வைரஸ்: சீனாவில் இருந்து வந்த கேரள மாணவர் .. வீடியோ


கொரோனா வைரஸ் பாதிப்பின் மையப்புள்ளியாக விளங்கும் வுஹான் நகரத்தில் இருந்து கேரளா திரும்பிய பெண்ணுக்கு வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து அவரது மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. பரிசோதனையின் முடிவில் அப்பெண்ணுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் மக்கள் யாரும் அஞ்ச வேண்டாம் என்று கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே ஷைலஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "மொத்தம் 20 பேருடைய மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. அதில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் திருச்சூரில் உள்ள அரசு மருத்துவமனையில் தனிமையில் வைக்கப்பட்டுள்ளார். அப்பெண் அபாயகரமான நிலையில் இல்லை. அவரது உடல்நிலை சீராகவே இருக்கிறது" என்று தெரிவித்தார்.

மேலும் சீனாவில் இருந்து கேரளா திரும்பும் மாணவர்கள் மாநில சுகாதாரத்துறையிடம் தங்கள் வருகையை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார். சீனாவில் இருந்து கேரளா திரும்புகிறவர்கள் தனியே தங்க வைக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் வைரஸ் பாதிப்பு அறிகுறிகளுடன் தென்படும் நோயாளிகளை பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே. ஷைலஜா தெரிவித்தார்.
இது தொடர்பான சிகிச்சையை மேற்கொள்ள கேரளா சுகாதாரத்துறை தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சீனாவின் வுஹான் மாகாணத்தில் முதன்முதலில் கண்டறியப்பட்ட நோவல் கொரோனா வைரஸின் தாக்கம், படிப்படியாக அந்நாடு முழுவதும் மட்டுமின்றி அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவிய நிலையில் தற்போது முதல் முறையாக இந்தியாவிலும் அதன் தாக்கம் உறுதிசெய்யப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக