புதன், 15 ஜனவரி, 2020

ஜல்லிகட்டு சீறும் 700 காளைகள்.. களமிறங்கிய 730 வீரர்கள்.. அவனியாபுரம் ... வீடியோ ஜல்லிக்கட்டு!


/tamil.oneindia.com : சென்னை: தமிழர் பண்டிகையான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு,
மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி மிக சிறப்பாக நடந்து வருகிறது. தமிழர் பண்டிகையாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. எல்லா மதத்தினரும் இயற்கையை போற்றி இந்த பொங்கல் பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.
தமிழர் மரபுகளை நினைவு கூறுவதும், பாரம்பரியத்தை நினைவு கூறுவதும், பழமையை நினைவு கூறுவதும் இந்த பண்டிகையின் முக்கிய நோக்கம் ஆகும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளில் உரிய அனுமதியுடன், மாபெரும் பாதுகாப்புடன் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் பாராமபாரியமான மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது.
இதனால் அவனியாபுரம் பகுதியில் மாபெரும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த போட்டி நடக்கிறது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் கண்காணிப்பில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் அசம்பாவிதத்தை தவிர்க்கும் வகையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வீரர்களுக்கும், மாடுகளுக்கும் உதவும் வகையில் மருத்துவர்கள், கால் நடை மருத்துவர்கள் அங்கு உள்ளனர்.


5க்கும் ஏற்பட்ட ஆம்புலன்ஸ்கள் அங்கு இடம்பெற்றுள்ளது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் 700 காளைகளை பிடிக்க, 730 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக இவர்களின் உடல் தகுதி சோதிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது. வாடிவாசல் வழியாக சீறிவரும் காளைகளை பிடிக்க மாடுபிடி வீரர்கள் தீவரம் காட்டி வருகின்றனர். தமிழகம் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் ஜல்லிக்கட்டு போட்டியை துவங்கி வைத்தார்.

அவனியாபுரம்-திருமங்கலம் சாலையில் இதற்காக வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் உள்ளே வராமலிருக்க பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியை காண பல மாநிலங்களில் இருந்து மக்கள் தமிழகம் வந்துள்ளனர். பல நாடுகளில் இருந்தும் அவனியாபுரத்தில் மக்கள் குவிந்துள்ளனர். போட்டியில் பங்கேற்க 700 காளைகள் பதிவு செய்யப்பட்டு, டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன.

மதுரை, திண்டுக்கல், தேனி, கம்பம், திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் காளைகள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே வாடிவாசல் வழியாக அனுமதிக்கப்படும். போட்டிகளை கண்காணிக்க 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

 ஜல்லிக்கட்டு விழாவில் அமைச்சர் ஆர்.பி, உதயகுமார், எம்எம்ஏக்கள் கலெக்டர் வினய் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காளைகளை பிடிக்க ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை சுழற்சி முறையில் 75 காளையர்கள் களமிறக்கப்படுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக