செவ்வாய், 28 ஜனவரி, 2020

கொரோனா வைரஸ்’- 500 இந்தியர்களை சீனாவில் இருந்து மீட்க நடவடிக்கை

‘கொரோனா வைரஸ்’ அச்சுறுத்தல்- 500 இந்தியர்களை மீட்க நடவடிக்கை maalaimalarமாலைமலர் : சீனாவில் ‘கொரோனா வைரஸ்’ அச்சுறுத்தலை தொடர்ந்து வுகான் நகரில் உள்ள 500 இந்தியர்களை மீட்க, ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 747 ரக விமானம் தயார் நிலையில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதுடெல்லி: சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பரவி வருகிறது.
குறிப்பாக இந்த வைரஸ் உருவான வுகான் நகரில் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வுகான் நகரம் அமைந்துள்ள கியூபி மாகாணம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நிலவரப்படி சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1,500 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவின் கியூபி மாகாணத்தில் பஸ், ரெயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் சுமார் 1 கோடி பேர் வசிக்கும் வுகான் நகரில் மக்களின் இயல்பு வாழ்க்கையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வுகான் நகரிலும் அதை சுற்றியுள்ள நகரங்களிலும் சுமார் 700 இந்தியர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் மருத்துவ மாணவர்கள் ஆவார்கள். தற்போது சீனாவில் புத்தாண்டு கொண்டாட்ட தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான இந்தியர்கள் தாயகத்துக்கு வந்துள்ளனர்.
வுகான் நகரில் தற்போது 300 முதல் 500 இந்தியர்கள் வரை இருப்பதாக கருதப்படுகிறது. சீனாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்தி பேசி வருகிறார்கள். சில இடங்களில் மட்டும் முகமூடி மற்றும் உணவு கிடைக்காமல் இந்தியர்கள் தவிப்பது தெரிய வந்துள்ளது.

வுகானில் உள்ள பெரும்பாலான இந்திய மருத்துவ மாணவர்கள் தொடர்ந்து தங்கள் கல்லூரி விடுதிகளில் தங்கி உள்ளனர். அவர்களில் 99 சதவீதம் பேர் இந்தியா திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் வுகானில் இருந்து வெளியேற இதுவரை சீனா அனுமதி கொடுக்கவில்லை.

இதனால் வுகானில் சிக்கி உள்ள இந்தியர்களின் தவிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

முகமூடி உறை அணிந்துள்ள சீன மக்கள்

இதையடுத்து சீனாவில் கொரோனா வைரஸ் பரவி உள்ள பகுதிகளில் இருந்து இந்தியர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். கேரள முதல்-மந்திரி உள்பட பல கட்சித் தலைவர்கள் உடனடியாக சீனாவுக்கு விமானத்தை அனுப்பி இந்தியர்களை மீட்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதற்கிடையே சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை கடந்த ஞாயிற்றுக்கிழமையே மத்திய அரசு தொடங்கி விட்டது. முதல் கட்டமாக வுகான் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள இந்தியர்கள் பற்றிய பட்டியலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தயாரித்துள்ளது.

வுகானில் உள்ள இந்தியர்கள், உடனே பீஜிங்கில் இருக்கும் இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு டுவிட்டர் உள்பட சமூக வலைத்தளங்கள் மூலம் தகவல் வெளியிடப்பட்டது.

அதன் அடிப்படையில் இந்தியாவில் இருந்து பெரிய விமானத்தை அனுப்பி, வுகானில் உள்ள இந்தியர்களை அழைத்து வர முடிவு செய்யப்பட்டது.

அதன்படி மும்பை விமான நிலையத்தில் போயிங் 747 ரக விமானத்தை ஏர் இந்தியா நிறுவனம் தயார் நிலையில் நிறுத்தியுள்ளது. இந்த விமானம் 423 இருக்கைகள் கொண்ட பிரமாண்ட விமானமாகும். 12 விமான ஊழியர்களுடன் இந்த விமானத்தில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.

மருத்துவர்கள் குழு ஒன்றும் அந்த விமானத்தில் உள்ளது. தேவையான அளவுக்கு துணி முகமூடி உறைகள், உணவுகளும் கை இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இரட்டை என்ஜின் கொண்ட இந்த விமானம் நேரடியாக வுகான் பகுதிக்கு சென்று இந்தியர்களை அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது.

நேற்று காலை 5 மணிக்கு இந்த போயிங் 747 ரக விமானம் மும்பையில் இருந்து புறப்பட்டு சீனா செல்ல தயாராக இருந்தது. ஆனால் மீட்புப் பணிக்கு இந்தியா விமானம் வருவதற்கு சீன அரசாங்கம் இதுவரை அனுமதி கொடுக்கவில்லை. இதனால் அனுமதி கிடைக்கும் வரை அந்த விமானத்தை தயார் நிலையில் வைத்திருக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

வுகான் நகர மக்களை அங்கிருந்து வெளியேற்றக்கூடாது என்று சீனா கட்டுப்படுத்தியுள்ளது. அந்த நகருக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு இருப்பதால் தான் அங்குள்ள சுமார் 500 இந்தியர்களை மீட்பதில் தாமதம் ஏற்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

மத்திய அரசும் இந்தியாவுக்குள் கொரோனா வைரஸ் வந்து விடக்கூடாது என்பதில் மிக மிக உஷாராக இருப்பதால் வுகானில் உள்ள இந்தியர்களை மீட்பதில் மிகுந்த கவனத்துடன் உள்ளது. இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் சிலருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து நேபாளத்தை எல்லையாகக்கொண்ட உத்தரபிரதேசம், பீகார், உத்தரகாண்ட, மேற்கு வங்காளம், சிக்கிம் ஆகிய 5 மாநிலங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்குள் வரும் அனைவரையும் தீவிர மருத்துவ பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்குமாறு 5 மாநிலங்களையும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக