சனி, 11 ஜனவரி, 2020

சேட்டிலைட்டில் சிக்கிய 2 சிக்னல்!'- ஏவுகணை ....உக்ரைன் விமானம் வீழ்ந்த பின்னணி என்ன?

`இரவு நேரத்தில் ஏவுகணை; சேட்டிலைட்டில் சிக்கிய 2 சிக்னல்!'- உக்ரைன் விமானம் வீழ்ந்த பின்னணி என்ன?vikatan.com தெஹ்ரான் விமான நிலையம் அருகே விழுந்து நொறுங்கிய உக்ரைன் விமானம்மீது இரான் ஏவுகணைத் தாக்குதல் நிகழ்த்தியிருக்கலாம் என கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் குற்றம் சாட்டியிருக்கின்றன. இரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இமாம் கொமெய்னி சர்வதேச விமான நிலையத்திலிருந்து 170 பயணிகளுடன் உக்ரைன் தலைநகர் கிய்வ் நோக்கிப் புறப்பட்ட போயிங் 737-800 ரக உக்ரைன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கியது. இதில், விமானத்தில் பயணித்த பயணிகள் ஒருவர் கூட உயிர்பிழைக்கவில்லை. இந்த நிலையில், உக்ரைன் விமானம்மீது இரான் ஏவுகணைத் தாக்குதல் நிகழ்த்தியிருப்பதாக கனடா மற்றும் அமெரிக்க அதிகாரிகள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். ஆதாரமாக சில குறிப்புகளையும் முன் வைக்கின்றனர். இரான் வான்வெளியில் இரவு நேரத்தில் ஏவுகணை செலுத்தப்பட்ட ஒருசில நிமிடங்களில் ஒரு வெடிப்பு சத்தம் கேட்கிறது. அதேநேரம், விமானம் தீப்பிடித்த நிலையில் பறந்துகொண்டிருந்தது என்று கூறி, 'நியூயார்க் டைம்ஸ்' வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதேபோல், குறிப்பிட்ட அதே நேரத்தில் ஏவுகணைகள் ஏவப்பட்டதற்கான இரு அகச்சிவப்புக் கதிர் சிக்னலும், அதன்பின் வெடிப்பு ஒன்று நிகழ்ந்ததற்கான சிக்னலும் அமெரிக்க செயற்கைகோள் ஒன்றுக்குக் கிடைத்துள்ளதாக சி.பி.எஸ் நியூஸ் தெரிவித்துள்ளது.

இந்தத் தகவலை அமெரிக்க புலனாய்வுத் துறைமூலம் தங்களுக்குக் கிடைத்ததாகவும் சி.பி.எஸ் நியூஸ் கூறியுள்ளது. மேலும், ரஷ்யத் தயாரிப்பான 'தோர் எம்-1' ஏவுகணைமூலம் உக்ரைன் விமானம் வீழ்த்தப்பட்டிருக்கலாம் என அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் கருதுகிறது.

இதனை மையமாக வைத்துதான் கனடா, அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள், இரான் மீது குற்றம் சுமத்தியுள்ளன. இதுகுறித்துப் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, `உக்ரைன் விமானம்மீது இரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியிருக்கலாம் எனப் பல்வேறு உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன. நிலத்திலிருந்து செலுத்தப்படும் ஏவுகணைமூலம் இந்த விமானம் வீழ்த்தப்பட்டது என்று எனக்குப் பல்வேறு உளவு அமைப்புகளிலிருந்து தகவல் கிடைத்துள்ளது.
தாக்கும் நோக்கம் இல்லாமல், தவறுதலாக இரான் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம்" என்று கூறியுள்ளார். ஆனால், இதை சுத்தமாக மறுத்துள்ள இரான், திட்டமிட்டே அமெரிக்கா `பெரிய பொய்யை'ப் பரப்பிவருகிறது. விமானம் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்படவில்லை என்று இரானின் சிவில் விமான போக்குவரத்து தலைவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக