புதன், 1 ஜனவரி, 2020

2020 : நம்பிக்கையின் ஆண்டு...

.savukkuonline.com : 2019ம் ஆண்டு, பல வருத்தங்களையும், சில மகிழ்ச்சிகளையும் அளித்துள்ளது.   கடந்த ஆண்டு மிகுந்த பரபரப்போடு தொடங்கியது.  பாராளுமன்றத் தேர்தல் வரப்போகும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.  ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைத்து சக்திகளும் எதிர்ப்பார்த்திருந்தன.   ஏனெனில் ஆட்சி முடியும் தருவாயில், வேலையின்மை 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் உச்சக் கட்டத்தை எட்டியிருந்தது.  பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்தது.   பண மதிப்பிழப்பு, மோசமான ஜி.எஸ்.டி ஆகியவற்றால் பல சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் நசிவடைந்திருந்தன.   விவசாயிகள் விளைபொருட்களின் விலை வீழ்ச்சியால் கடும் துன்பத்துக்கு ஆளாகியிருந்தனர். இந்தக் கோபங்கள் தேர்தலில் மோடிக்கு எதிராக பிரதிபலிக்கும் என்று ஏறக்குறைய பெரும்பாலானோர் எதிர்ப்பார்த்திருந்தனர்.
உத்திரப் பிரதேசத்திலும் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி இடையேயான கூட்டணி, பிஜேபிக்கு ஒரு வலுவான எதிர்ப்பை தரும் என்று நம்பப்பட்டது.  கடந்த தேர்தலைப் போல அல்லாமல் காங்கிரஸ் 2019 தேர்தலில் ஒரு வலுவான பிரச்சாரத்தை மேற்கொண்டது.  ரபேல் ஊழலை அந்த தேர்தலில் ஒரு முக்கிய விவகாரமாக ராகுல் காந்தி முன்னெடுத்தார்.
மோடி வெற்றி பெற்றாலும் கூட, முழுப் பெரும்பான்மை கிடைக்காமல் ஒரு கூட்டணி ஆட்சியே அமையும்.  கூட்டணி ஆட்சி என்பதால், பிஜேபி தனது இந்துத்துவா திட்டங்களை செயல்படுத்த முடியாது என்றும் நம்பப்பட்டது.
மோடி, அந்தத் தேர்தலை (நாடகம் போல் மாற்றினார்.) , செல்வந்தர் குடும்பத்தின் ஒரு வாரிசுக்கும், ஏழைத்தாயின் மகனான தனக்கும் இடையே நடக்கும் தர்மயுத்தம்) என்பதாக பாராளுமன்றத் தேர்தலின் வியூகத்தை மாற்றினார்.   மோடி தன்னை காவலாளி என்று அர்த்தம் தரும் சௌகிதார் என்று முன்மொழிந்தார். ராகுல் பதிலுக்கு ‘உங்கள் காவலாளி திருடன்’ என்று முழங்கினார். ராகுலின் இந்த முழக்கத்தை தனக்கு சாதகமாக மோடிக்கு மாற்றத் தெரிந்திருந்தது.  காங்கிரஸ் இஸ்லாமியர்களின் கட்சி என்ற பிம்பத்தை கட்டமைத்தார்.

தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் நடந்த புல்வாமா தாக்குதல், தேர்தலின் போக்கையே மாற்றி அமைத்தது.    வறுமை, வேலைவாய்ப்பு, விவசாயிகளின் சிக்கல் என்ற மக்களின் அன்றாட பிரச்சினைகள் அனைத்தும் பின்னுக்குத் தள்ளப்பட்டு,  தேசபக்தி என்ற பெயரில் வெறி ஊட்டப்பட்டது.   பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு, இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் காரணம் என்று ஓரு பிம்பம் கட்டமைக்கப்பட்டது.  நாடெங்கும் ஒரு கொதி நிலை உருவானது.
இரண்டே நாட்களில் பாகிஸ்தானின் எல்லை தாண்டி அங்கிருந்த தீவிரவாத முகாம்கள் தாக்கப்பட்டன என்று அரசு பெருமையுடன் அறிவித்தது.   அதிகாரப்பூர்வமான அறிக்கையாக இல்லாமல், 400 தீவிரவாதிகள் கொல்லப்பட்டார்கள் என்று செய்தி பரப்பபட்டது. இவை யாவும் பிஜேபியின் பொய் தொழிற்சாலைகள் மூலம் பரப்பப்பட்ட செய்திகளாக இருந்தன. பிஜேபி ஆதரவு பத்திரிக்கையாளர்கள், சமூக வலைத்தளங்களிலும், தொலைக்காட்சி விவாதங்களிலும், 400 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று கள்ள பூரிப்பு அடைந்தனர்.
முடி நரைத்ததால் மூத்த பத்திரிக்கையாளர் என்று அழைக்கப்படும் மாலன் நாராயணன், “40க்கு 400” என்று முகநூலில் பதிவிட்டார்.
பாகிஸ்தான் சமயோசிதமாக செயல்பட்டது.   ஒருவர் கூட கொல்லப்படவில்லை என்று அறிவித்ததோடு சர்வதேச பத்திரிக்கையாளர்களை தாக்குதல் நடந்த இடத்துக்கு அனுமதித்தது.   தாக்குதல் நடந்த இடத்தில் இருந்த கிராமத்தினரை பேட்டியெடுத்த பிபிசி உருது தொலைக்காட்சி, ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்பதை உறுதி செய்தது.   இந்தியா எல்லை தாண்டி வீசிய குண்டுகள், வெறும் மரங்களைத்தான் சேதப்படுத்தின என்பது, ஆதாரங்களோடு உலக அரங்கில் அம்பலமானது.
மாறாக, இந்தியாவின் விமானப் படை பைலட் அபிநந்தன், பாகிஸ்தானில் தவறி விழுந்து கைது செய்யப்பட்டார். அதை மோடி அரசு தனது நாடகத்தின் உச்சக்கட்ட உணர்ச்சிப்பூர்வமான காட்சியாக மாற்றியது.
இந்திய ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டு ஆறு விமானப் படை வீரர்கள் உயிரிழந்தனர்.இதற்கு இந்திய விமானப் படை வீரர்களே காரணமாக இருந்தனர் என்பதெல்லாம் வெளியாகும்போது மோடி மற்றும் அமித் ஷாவின் திரைக்கதை வசனத்தில் தேர்தலை பிஜேபி சந்தித்து முடித்திருந்தது.
இதற்கிடையில் மறைந்து நின்று தாக்கும் ஒரு குத்துச்சண்டை போட்டியினை பிஜேபி தொடங்கியது. அந்தக் குத்துச்சண்டை களத்துக்குப் பெயர் தேர்தல் பத்திரம். தேர்தல் பத்திரம் என்ற முறையை உருவாக்கி, எதிர்க்கட்சிகளுக்கு எந்த பெரு நிறுவனத்தையும் நிதி கொடுக்க விடாமல் முடக்கியது. பெரும் பகுதி நிதியை மோசடியான வழியில் பெற்று ஒரு எதிராளி ஒரு கையில்  சண்டை போடும் குத்துச் சண்டை போட்டியை பிஜேபி நடத்தியது.   தேர்தல் ஆணையம் ஏறக்குறைய பிஜேபியின் ஒரு அங்கமாகவே மாறிப் போனது.
இறுதியில் எதிர்க்கட்சிகளின் எந்த உத்தியும் வெற்றி பெறாமல், பிஜேபி ஒரு மாபெரும் வெற்றியை பெற்றது.   303 இடங்களோடு தனிப் பெரும்பான்மையை பிடித்தது.  இந்த மாபெரும் வெற்றி,  மோடிக்கும் அமித் ஷாவுக்கும் பெருந்தன்மையையும் பக்குவத்தையும் தந்திருக்க வேண்டும்.  மாறாக இந்த வெற்றி அவர்களுக்கு அகந்தையையும் இறுமாப்பையும் தந்தது.   இருவரும் ஆணவத்தின் உச்சத்துக்குச் சென்றார்கள்.
மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, ஆர்.எஸ்.எஸ்ஸின் கொள்கைகளை பசித்து வேட்டையாடும் ஒரு மிருகத்தின் தீவிரத்தோடு இருவரும் அரங்கேற்றினார்கள்  இஸ்லாமியர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி முத்தலாக் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
370 பிரிவை ரத்து செய்கிறோம் என்ற பெயரில், காஷ்மீர் உருக்குலைக்கப்பட்டது.  காஷ்மீர் முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டது.  150 நாட்களையும் கடந்து, காஷ்மீர் மக்கள் வெளியுலக தொடர்பும், இணைய சேவையுமின்றி அல்லல்பட்டு வருகின்றனர்.  காஷ்மீரில் தொழில்கள் முடங்கியுள்ளன.   அரசியல் தலைவர்கள் வீட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.    இரண்டாம், மூன்றாம் கட்டத்  தலைவர்கள்,  தடுப்புக் காவல் சட்டத்தில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.    காஷ்மீரில் ஊடகங்கள் முழுக்க முடக்கப்பட்டன.   அரசின் செய்திக் குறிப்புக்களை மட்டும் வெளியிடும் நிலைக்கு ஊடகங்கள் தள்ளப்பட்டன.

இந்த அநீதியான நடவடிக்கைக்கு எதிராக போராட்டத்தில் குதித்த காஷ்மீர் மக்கள் கடும் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். சிறுவர்கள் பெல்லெட் குண்டுகளால் சுடப்பட்டார்கள்.   நாம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே காஷ்மீர் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டது.    வெளிநாட்டு ஊடகங்கள், இணைய சேவையே இல்லா நிலையிலும், காஷ்மீரின் உண்மை நிலையை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டின.  ஆனால் இங்கு பெரும்பாலான இந்திய ஊடகங்கள், மோடியின் அதிரடி நடவடிக்கையை கொண்டாடின.   காஷ்மீர் மக்களின் அழுகுரலை ஊடகங்கள் பதிவு செய்யத் தவறின.  காஷ்மீர் விவகாரத்தில் அரசு எடுத்த முடிவை எதிர்த்து கண்ணன் கோபிநாதன், சசிகாந்த் செந்தில் என்ற இரண்டு இளம் ஐஏஎஸ் அதிகாரிகள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தார்கள்.
பொருளாதாரம் நாளுக்கு நாள் மிக மோசமாகி வருவதை, பல்வேறு பொருளாதார நிபுணர்களும், உலக வங்கியும், க்ரெடிட் நிறுவனங்களும் சுட்டிக்காட்டியும், மோடியோ, பொருளாதாரத்தை பற்றி எவ்வித அறிவும் இல்லாத நிர்மலா சீத்தாரமனோ,  அமித் ஷாவோ துளியும் கவலைப்படுவதாக தெரியவில்லை. மாறாக, பொருளாதார சிக்கலில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பும் அத்தனை வேலைகளையும் செய்து வருகிறார்கள்.
வங்கிகளின் நிலை படு பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.  வாராக்கடன்களின் அளவு விண்ணை தொட்டுக் கொண்டிருக்கிறது.   சிறு கடன் பெற்ற விவசாயிகள் வங்கிகளால் கழுத்து நெறிக்கப்படுகிறார்கள்.  ஆனால், ஆயிரக்கணக்கான கோடிகளை பெற்று வங்கிகளை ஏமாற்றிய பெரும் கொள்ளைக்காரர்கள், வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள்.
அரசின் ஊழல்களையும் செயல்படாத தன்மையையும், மதரீதியான நடவடிக்கைகளையும் அம்பலப்படுத்த வேண்டிய ஊடகங்கள், அரசின் ஊதுகுழலாக மாறிப் போயின.   அரசின் பொய்களை உண்மை போல உரத்துக் கூறின.
பொருளாதாரம் மிக மோசமான சரிவை சந்தித்துக் கொண்டிருப்பது குறித்து சிறிதும் கவலையில்லாமல், அரசு அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது குறித்து தம்பட்டம் அடித்தது.   ஒரு அரசு செயலிழக்கும் போதும், தடம் மாறும்போதும், அதைக் கண்டித்து சீர்படுத்த வேண்டிய நீதிமன்றங்கள், குறிப்பாக உச்சநீதிமன்றம், அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை பாதுகாக்க வேண்டிய உச்சநீதிமன்றம், பிஜேபியின் ஒரு கட்டளைக் குரலாக மாறிப் போய், அரசு செய்பவை அனைத்தையும், அங்கீரிக்கும் ஒரு நிறுவனமாக மாறிப் போனது.
அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளான சமத்துவம், வாழும் உரிமை ஆகியவை ஒரு மாநிலத்தின் மக்களுக்கே மறுக்கப்பட்டபோது, அது குறித்து உச்சநீதிமன்றம் கவலைப்படவில்லை.   கண் முன்னால், லட்சக்கணக்கான மக்கள் இணைய வசதி இன்றி, அடிப்படை வசதிகள் இன்றி, முள் கம்பிகளுக்குள் அடைத்து வைப்பதை பற்றி உச்சநீதிமன்றம் கவலைப்படவில்லை.  ஆனால் 500 ஆண்டுகளுக்கு முன்னால் இடிக்கப்பட்ட ஒரு கோவிலைப் பற்றி 40 நாட்கள் இடைவிடாது தொடர் விசாரணை நடத்தியது.
தொங்கு சட்டசபை நடக்கும் மாநிலங்களிலும், எம்.எல்.ஏக்கள் கட்சித் தாவல் செய்யும் மாநிலங்களிலும் ஏற்படும் சிக்கல்கள் தொடர்பான வழக்குகளை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்துக்கு தோன்றவில்லை.  இந்நாடு இன்று சந்தித்து வரும் வீழ்ச்சிகளிலேயே மிக மோசமான வீழ்ச்சி நீதித்துறையின் வீழ்ச்சியே.    உலக நாடுகள் வியந்து பாராட்டும் வகையில் இருந்த இந்தியாவின் உச்சநீதிமன்றம், இன்று ஆளும்கட்சி சொல்பவற்றை கேட்டு தலையாட்டும் பொம்மையாக மாறிப் போயுள்ளது உள்ளபடியே வருத்தமளிக்கும் விஷயம்.
ஆனால் இந்த ஆண்டு, வெறும் வேதனைகளை அளிக்கும் ஆண்டாக மட்டும் இல்லை.   பிஜேபி அரசு, குடிமக்கள் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, என்று முழுக்க முழுக்க இஸ்லாமியர்களுக்கு எதிராகவே ஒரு சட்டத்தை கொண்டு வந்தது.  இந்த சட்டம் இஸ்லாமியர்களை தனிமைப்படுத்தும் என்று மோடி அமித் ஷா என்ற இரண்டு நாஜிக்களும் நினைத்தனர்.   மாறாக, இந்த கொடுங்கோல் சட்டம், மக்களை இணைத்தது.   இளைஞர்களை வீதிக்கு அழைத்து வந்தது.    அஸ்ஸாமில் தொடங்கிய போராட்டம், நாடு முழுக்க பரவியது.
பல்கலைக்கழகங்கள் போராட்டத்தால் தகித்தன.   மாணவர்கள், குறிப்பாக பெண்கள், போராட்டத்தின் முன் வரிசைக்கு வந்தனர்.   இளைஞர்களுக்கு சமூக அக்கறை கிடையாது.  அவர்கள் சமூக வலைத்தளங்களிலும், வாட்ஸப்பிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்த பலருக்கு இந்த இளைஞர்களின் எழுச்சி வியப்பை அளித்தது.
பிஜேபி அரசு, போராட்டத்தை இரும்புக் கரத்தால் ஒடுக்க முனைந்தது.   பிஜேபி ஆளும் மாநிலங்களில் நடந்த போராட்டங்கள் வன்முறையில் முடிந்தன.   உத்தரப் பிரதேச காவல் துறை, காட்டுமிராண்டிகளை போல நடந்து கொண்டது.    20க்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.   இறந்த அனைவருமே இஸ்லாமியர்கள்.  இஸ்லாமியர்களின் வீடுகள் சூறையாடப்பட்டன.   அவர்களின் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன.
இஸ்லாமியர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.  அவர்களை எளிதாக ஒடுக்கி விடலாம் என்று நினைத்த நாஜி இரட்டையர்களுக்கு, போராட்டங்களை இந்துக்கள் முன்னெடுத்தது அதிர்ச்சியை தந்திருக்கும்.  அரசியல் அமைப்பு சட்டத்தை திருத்தாமல், குறுக்கு வழியில் இந்தியாவை இந்து நாடாக உருவாக்க நாஜி இரட்டையர்கள் எடுத்த முயற்சியை இந்தியாவின் இளைஞர்கள் தங்கள் ஒருங்கிணைந்த போராட்டத்தால் தடுத்து நிறுத்தி வருகிறார்கள்.
மூத்த பத்திரிக்கையாளர், ஆர்.கே.ராதாகிருஷ்ணன் அவர்கள், சென்ற வருட நிகழ்வுகளையும், இந்த ஆண்டின் போக்கையும் கணித்து இவ்வாறு கூறினார்.
“2019 ஆண்டு முடிந்த விதம், 2020ம் ஆண்டின் மீது நம்பிக்கை அளிக்கிறது.  இந்தியாவின் இளைஞர்கள் சுதந்திரம் எளிதாக கிடைத்து விடாது என்பதை உணர்ந்துள்ளனர்.   சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்.  சுதந்திரத்தை காக்க போராட வேண்டும்.  தேவைப்பட்டால் சுதந்திரத்துக்காக வீதிகளில் இறங்கி போராட வேண்டும் என்பதை இளைஞர்கள் உணர்ந்துள்ளனர்.
இந்தியாவின் பன்முகத்தன்மையை பாதுகாப்பது நமது கடமை என்பதையும், இந்தியா என்ற கருத்தாக்கம் பாதுகாக்கபட வேண்டும் என்பதையும் இளைஞர்கள் உணர்ந்துள்ளனர்.
இந்தப் போராட்டங்களின் மூலம், இளைஞர்கள், இந்தியாவின் அரசியல்வாதிகளுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் ஒரு செய்தியை உரத்து சொல்லியுள்ளனர். அவர்கள் எது செய்தாலும்,  அதைக் கேள்வி கேட்க ஆளில்லை என்ற இறுமாப்போடு அவர்கள் இனியும் இருக்க இயலாது என்பதை வலுவாக பதிவு செய்துள்ளனர்.
இவ்விளைஞர்கள் எதிர்க்கட்சிகளுக்கும் ஒரு செய்தியை உரைத்துள்ளனர்.   மக்களின் உரிமைகளை பாதுகாக்க, மக்கள் நலனை பாதுகாக்க எதிர்க்கட்சிகள் களத்துக்கு வரத் தவறினால், அவர்களுக்காக காத்திராமல், இளைஞர்களும், பொதுமக்களும் போராட்டத்தை முன்னெடுப்பார்கள்.  மக்களுக்காக வீதிக்கு வராத எதிர்க்கட்சிகள் நிராகரிக்கப்படுவார்கள் என்பதும் உணர்த்தப்பட்டுள்ளது.   2020 சிறப்பான ஆண்டாக அமையும்” என்று ஆர்.கே.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.
அரசியல் விமர்சகர் சுமந்த் ராமன் பேசுகையில், “இந்த புத்தாண்டில் அமைதி நிலவ வேண்டும் என்று விரும்புகிறேன். சகோதரத்துவம் நிலவ வேண்டும். இது நாள் வரை அன்போடும் சகோதரத்துவத்தோடும்தான் இருந்தோம்.   அது மீண்டும் வர வேண்டும்.
அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூறியுள்ள பாகுபாடற்ற சகோதரத்துவம் 2020ம் ஆண்டில் வர வேண்டும் என்பதே எனது வாழ்த்து.   பெருவாரியான இளைஞர்களின் போராட்டங்கள் மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது.  இனிய புத்தாண்டாக அனைவருக்கும் அமையட்டும்” என்று கூறினார்.
காஷ்மீரில், பிஜேபி அரசின் நிலைபாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தன் பதவியை ராஜினாமா செய்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில், தனது புத்தாண்டு வாழ்த்துக்களாக இவ்வாறு கூறினார்.
“2020 ஆண்டு, எளிமையான மக்கள் வீதிகளில் இறங்கி போராடும் மனதை மகிழ வைக்கும் படங்களோடு விடிகிறது.   ஒரு தேசத்தின் பின்னணியில், அரசும் அதிகாரமும் இருப்பதில்லை.  ஒரு தேசத்தின் பின்னணியில் இருப்பது அதன் மக்களும், அவர்களின் விழுமியங்களும், நம்பிக்கைகளுமே என்பதை அரசுகளும், சாம்ராஜ்யங்களும் உணரும் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள்.  இந்த உண்மையை உணரும் தேசத்தில்தான் ஜனநாயகம் தழைக்கும்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
70 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியாவில் உண்மையான ஜனநாயகம் செயல்படத் தொடங்கியுள்ளது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.மணி தன் புத்தாண்டு வாழ்த்துகளாக இவ்வாறு கூறினார்.
“தற்போதைய சூழல் அவநம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இருந்தாலும், ஒவ்வொரு மேகத்தின் பின்னாலும் ஒரு நம்பிக்கை கீற்று உள்ளது என்பதை மறந்து விடக் கூடாது.   இந்தியா அதன் முன்னால் உள்ள சவால்களை எதிர்கொள்ளும்.  போராடும்.  இறுதியில் பெரும் வெற்றியை அடையும்.
இந்திய வரலாறு போராட்டங்களால் நிறைந்தது.  பல தருணங்களில் இந்தியா கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது.  கடுமையான சோதனைகளை சந்தித்துள்ளது.  ஆனால் இறுதியில் இந்தியாவே வெற்றியடைந்தது.
இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மை, இன்று அதிகாரத்தில் உள்ள மதவாத சக்திகளை எதிர்த்து போராடி, அவற்றை பின்தள்ளி மீண்டும் வளர்ச்சிப் பாதையில் வீறுநடை போடும்.
நாம் அனைவரும் நமது அற்ப வேற்றுமைகளையும், கருத்து வேறுபாடுகளையும் மறந்து ஒன்றாக இணைந்து, இன்று அதிக பலத்தோடு உள்ள இந்த பெரும்பான்மை மதவாத  சக்திகளுக்கு எதிராக ஒரு வலுவான போரை தொடுத்து,  அவற்றை பின்தள்ளி வீழ்த்துவோம் என்பதே, இந்த புத்தாண்டில் நான் சொல்லும் செய்தி” என்றார்.
பத்திரிகையாளர் மணி கூறியது போல, பல்வேறு சோதனைகளை பல நூற்றாண்டுகளாக சந்தித்த இந்தியா இறுதியில், பன்முகத்தன்மை கொண்ட ஒரு அற்புதமான நாடாகத்தான் இருந்து வந்திருக்கிறது.
சாதாரணமான எளிய மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களுக்கு அச்சுறுத்தல் வருகையில் துவக்குகளையும், தகரிகளையும் கண்டு அஞ்சியதில்லை.   அடக்குமுறைகளையும் அராஜகங்களையும் கண்டு பின்வாங்கியதில்லை.    உலக வரலாற்றில் இதற்கான சான்றுகள் கொட்டிக் கிடக்கின்றன.   இன்றைய பிஜேபி அரசும், மோடியும் அமித் ஷாவும், வரலாற்றில் சர்வாதிகாரிகளும், கொடுங்கோலர்களும் கடைபிடித்த அதே முறையைத்தான் கையாண்டு வருகிறார்கள்.   காவல் துறை, ராணுவம், துணை ராணுவப் படைகளின் மூலம், மக்கள் எழுச்சியை அடக்கி விடலாம் என்று மனப்பால் குடிக்கிறார்கள்.   வரலாறு இப்படியான அடக்குமுறை சர்வாதிகாரிகளுக்கு என்ன பாடத்தை தந்ததோ, அதே பாடத்தை இன்றைய ஆட்சியாளர்களுக்கும் வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்தியாவின் பன்முகத் தன்மையை மாற்ற கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பாசிச சக்திகளை வீழ்த்தி இந்தியா மீண்டும் உயிர்ப்போடு எழும்.  எழ வேண்டும் என்பதே சவுக்கு சொல்லும் புத்தாண்டு செய்தி.
புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்களே.

FacebookTwitterWhatsAppTelegram

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக