வெள்ளி, 24 ஜனவரி, 2020

ரஜனி மீதான விசாரணைக்கு 15 நாள் அவகாசம் தேவை .. நீதிமன்றம்

''ரஜினிகாந்த் மீது போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுத்து 15 நாட்கள் முடிவதற்குள்ளாகவே நீதிமன்றத்தை அணுகியது ஏன்? புகாரின் மீது விசாரணை நடத்த போலீஸ்துறைக்கு அவகாசம் அளிக்காமல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதை ஏற்க முடியாது. சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் நீதிமன்றம் செயல்பட முடியும் . புகாரின் மீது போலீசார் விசாரணை நடத்த கால அவகாசம் வழங்கி அதில் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும்'
 தினமலர் : சென்னை: ஈ.வெ.ரா., குறித்து பேசிய நடிகர் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களை திராவிடர் விடுதலை கழகம் வாபஸ் பெற்றது.
இதனால், அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 'துக்ளக்' இதழின் 50வது ஆண்டு விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினி, 1971ல் சேலத்தில் நடந்த ஈ.வெ.ரா., நடத்திய பேரணி குறித்து பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என சிலர் வலியுறுத்தினர். ஆனால், மன்னிப்பு கேட்க முடியாது என ரஜினி தெரிவித்துவிட்டார். இந்நிலையில், ஈ.வெ.ரா., குறித்து கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் திராவிடர் விடுதலை கழகத்தின் உமாபதி என்பவர் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று(ஜன.,24) நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன் வாதாடும் போது, பத்திரிகை செய்திகளை அடிப்படையாக வைத்து ஈ.வெ.ரா., குறித்து கருத்து தெரிவித்ததாக ரஜினிகாந்த் கூறியுள்ளார். எப்படி இருந்தாலும், புகாரை வைத்து சட்ட விதிகளை பின்பற்றி முடிவெடுக்கப்படும்'' என்றார். இதனையடுத்து திராவிடர் விடுதலை கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், '' ரஜினிகாந்த் அரசியலில் ஆதாயம் அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் ஈ.வெ.ரா., பெயருக்கு களங்கம் ஏற்படுத்த அவ்வாறு பேசியதாக'' தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிபதி ராஜமாணிக்கம், ''ரஜினிகாந்த் மீது போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுத்து 15 நாட்கள் முடிவதற்குள்ளாகவே நீதிமன்றத்தை அணுகியது ஏன்? புகாரின் மீது விசாரணை நடத்த போலீஸ்துறைக்கு அவகாசம் அளிக்காமல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதை ஏற்க முடியாது. சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் நீதிமன்றம் செயல்பட முடியும் . புகாரின் மீது போலீசார் விசாரணை நடத்த கால அவகாசம் வழங்கி அதில் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும்'' என்றார். இதனை ஏற்று கொண்ட திராவிடர் விடுதலை கழக தரப்பினர், மனுக்களை திரும்ப பெறுவதாக தெரிவித்தனர். இதை ஏற்று, மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி ராஜமாணிக்கம் உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக