வெள்ளி, 10 ஜனவரி, 2020

சசிகலா மீண்டும் கைது? . சசிகலாவின் 15,000 கோடி ரூபாய் ஹாங்காங், தாய்லாந்து மற்றும் விமான நிறுவனங்களில் முதலீடு....


மின்னம்பலம் : மொபைல் டேட்டாவை ஆன் செய்ததும் வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.
“பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு வரும் பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி வந்தால் சிறையில் முழுதாக மூன்று ஆண்டுகள் முடிகின்றன. ஏற்கனவே இதே வழக்கில் ஜெயலலிதாவோடு சிறையில் இருந்த நாட்கள், சிறை விதிகளின்படியான சலுகைகள் என்று கணக்குப் போட்டால்கூட இந்த வருடத்தில் சசிகலா விடுதலை செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அமமுகவினரிடையே பலமாக நிலவுகிறது. இந்த நிலையில் மத்திய அரசைப் பகைத்துக் கொள்ள வேண்டாம் என்றுதான் டிடிவி தினகரன் சமீபத்திய மாதங்களில் மத்திய அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வைக்காமல் அடக்கி வாசிக்கிறார் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
அதேநேரம் சிறையில் சந்திக்க வருபவர்களிடம் தான் விடுதலையாகி வந்தாலும் தன்னை பாஜக நிம்மதியாக இருக்க விடுமா என்பது சந்தேகம்தான் என்று சொல்லி வருகிறார் சசிகலா. ஜனவரி 4ஆம் தேதி திவாகரன், பாஸ்கரன் ஆகியோர் தங்கள் குடும்பத்தினரோடு சிறைக்குச் சென்று சசிகலாவைச் சந்தித்திருக்கிறார்கள். திவாகரன் தனது மகன் ஜெய் ஆனந்துக்கும், தினகரனின் சகோதரன் பாஸ்கரன் மகளுக்கும் திருமண நிச்சயதார்த்தம் செய்திருக்கிறார்.

திருமணத்தை சசிகலா தலைமையில்தான் அதுவும் அவர் தண்டனை முடிந்து வெளியே வந்து நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இதற்காகத்தான் சசிகலாவிடம் அவர் பேசப் போயிருக்கிறார்.
குடும்ப நிலைமை பற்றி முதலில் பேசியிருக்கிறார்கள். திருமணத்துக்கு தினகரனையோ, அவரது குடும்பத்தினரையோ அழைக்கக் கூடாது என்று திவாகரன் விடாப் பிடியாக இருந்ததால் வருத்தப்பட்டுள்ளார் சசிகலா. திருமண தேதி குறித்துக் கேட்கும்போதுதான் சசிகலா தனது சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
‘அக்கா இறந்த பிறகு நம்மளோட சொத்துகள் அத்தனையையும் குறிவெச்சுதான் பிஜேபி களமிறங்கிச்சு. ஆனா, அதுக்கு நான் மறுத்துட்டதாலதான் பன்னீரைத் தூண்டிவிட்டு கலகம் பண்ணினாங்க. திடீர்னு என்னை ஜெயில்ல தள்ளினாங்க. நம்ம பின்னாடி இருந்த எடப்பாடியையும் மிரட்டி நம்மகிட்டேர்ந்து பிரிச்சு தினகரனையும் சிறையில் தள்ளினாங்க. என்னென்னவோ ரெய்டு நடத்திப் பார்த்துட்டாங்க. ஆனாலும் இன்னும் அவங்களுக்கு ஒண்ணும் கிடைக்கல. ஜெயில்லயே மூணு வருஷம் ஓடிப்போச்சு. அவங்க கேட்டதைக் கொடுத்துட்டா நம்ம பக்கம் வரமாட்டாங்கன்னு கொஞ்சநாளா நம்பிக்கிட்டிருந்தேன். ஆனா, அப்படியே சொத்துகளை கொடுத்தாகூட இப்ப நம்மளை விடமாட்டாங்க போலிருக்கு. நான் தண்டனைக் காலம் முடிஞ்சு வெளியே வந்தாலும் வேற ஏதாவது கேஸ் போடவும், ஏற்கனவே இருக்கிற பழைய கேஸ்களை தூசிதட்டி எடுக்கவும் பிஜேபி முடிவு செஞ்சிருக்கிறதா சொல்றாங்க. அதனால நீ என்னை எதிர்பார்க்காதே. கல்யாணத்தை நல்லபடியா நடத்து’ என்று சொல்லியிருக்கிறார் சசிகலா.
பாஜகவின் தூதர்கள் சசிகலாவை பலமுறை சிறையில் சந்தித்திருக்கிறார்கள். அவர்கள் வைத்த நிபந்தனைகள், அதற்கு சசிகலா அளித்த பதில், அதன் அடிப்படையில் அவர்கள் மேற்கொண்ட நிலைப்பாடு ஆகியவைதான் சசிகலாவை இப்படி பேச வைத்திருக்கிறது. அண்மையில் வருமான வரித் துறை சசிகலா பணமதிப்பழிப்பு நாட்களில் வாங்கிய சொத்துகள் பற்றி ஓர் அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இது வெறும் பிராசஸ் என்று தினகரன் சொல்லியிருந்தார். ஆனால் நிலைமையே வேறு.
‘சசிகலாவுக்கு இருக்கும் மொத்த சொத்துகளின் மதிப்பு 50,000 கோடி ரூபாய் மதிப்புள்ளது என்று இப்போதல்ல 2016லேயே மோப்பம் பிடித்தது மத்திய அரசு. ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதில் பாதி சொத்துகளைத் தங்களுக்குக் கொடுத்துமாறு டெல்லி தரப்பில் இருந்து சசிகலாவுக்கு அழுத்தம் கொடுத்தனர். ஆனால் அதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இங்குதான் பிரச்சினை ஆரம்பித்தது. முழுமையான சொத்துகளின் விவகாரம் தினகரனுக்கோ, விவேக்குக்கோ, கிருஷ்ணபிரியாவுக்கோகூட தெரியாது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் ஒரு பகுதி விவரம்தான். ஆனால், இந்தச் சொத்துகளின் முழு விவரமும் சசிகலாவுக்கு மட்டுமே தெரியும். ஹாங்காங், தாய்லாந்து நாடுகளிலே 35,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாகவும் கணக்கு போட்டுள்ளது மத்திய அரசு. இந்த நிலையில் இப்போது வருமான வரித்துறை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த நடவடிக்கை மூலம் பினாமி சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சசிகலா மீது மீண்டும் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்யவும் சாத்தியங்கள் உள்ளன. இதனால் சசிகலாவுக்குப் பெரும் சிக்கல் காத்திருக்கிறது’ என்று டிசம்பர் 24ஆம் தேதி மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியில் டிஜிட்டல் திண்ணை பகுதியில் தெரிவித்திருந்தோம். இப்போது கிட்டத்தட்ட இதே முடிவுக்கு சசிகலா வந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
மத்திய அரசின் விசாரணையில் சசிகலாவின் 15,000 கோடி ரூபாய் ஹாங்காங், தாய்லாந்து நாடுகளில் தனியார் விமான நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டிருக்கக் கூடும் என்ற தகவலும் கிடைத்துள்ளது. இதையெல்லாம் வைத்து மத்திய அரசு சசிகலாவுக்கு நெருக்கடி மேல் நெருக்கடி கொடுப்பதால், சொத்துக் குவிப்பு வழக்கின் தண்டனைக் காலம் முடிந்தாலும் தான் சிறையை விட்டு வெளியே வர முடியுமா என்ற சந்தேகத்தில் மூழ்கியிருக்கிறார் சசிகலா” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக