திங்கள், 13 ஜனவரி, 2020

10,000 ஒட்டகங்களும் ஆசுதிரேலியாவும் .


Subhashini Siva : 10,000 ஒட்டகங்கள் ஆசுதிரேலியாவில் சுட்டக்கொல்லப் போகப்படுகின்றன என்ற செய்தி கேட்டு பல நண்பர்களும் வருத்தம் தெரிவித்திருக்கின்றனர். உண்மையிலேயே வருத்தமான செய்தி தான். ஏனென்றால் மனிதன் செய்த பிழைக்கு 10,000 ஒட்டகங்கள் பலியாகப் போகின்றன.
ஆனால் இந்தச் சிக்கலை ‘ஐயோ பத்தாயிரம் ஒட்டகம்’ என்கிற அளவில் மட்டும் அணுகி, இம்முடிவை எடுத்தவர்களைத் தூற்றலாகாது. ஒட்டகம் அந்த நிலப்பரப்பில் தோன்றி வளரா விலங்கு. மனிதர்களால் தங்களது தேவைக்காகக் கடந்த நூற்றாண்டில் அங்கே அறிமுகம் செய்யப்பட்ட விலங்கு அது. அதன் தேவை அற்றுப்போன பிறகு மனிதர்கள் அவற்றைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டனர். இன்று பல்கிப்பெருகி ஆசுதிரேலியாவில் மட்டுமே காணப்படும் உயிரனங்களுக்கு அவை ஊறு விளைவிக்கின்றன.
அமெரிக்காவில் பூனைகளால் பறவைகளுக்கு வரும் தொந்தரவைப் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதலாம். பூனைகளுக்கு அமெரிக்காவில் இடம் கிடைத்ததே மனிதர்கள் வந்த பிறகு தான். அது போலத்தான் அந்த ஒட்டகங்களும். இந்தியாவில் இருந்து கொண்டு வந்து விடப்பட்ட சிட்டுக்குருவிகள் பல்கிப்பெருகி, அமெரிக்கச் சிட்டுக் குருவிகளின் வாழிடங்களையும் உணவையும் பறித்துக்கொள்கின்றன.

இன்னொன்று மான் இனங்கள். அவை அமெரிக்காவைத் தான் வாழிடமாகக் கொண்டிருந்தாலும், அவற்றை வேட்டையாடி உண்ணக் கூடிய பெரும்பூனைகளை மனிதர்கள் கிட்டத்தட்ட அழித்து முடித்து விட்டார்கள். அதனால் மான்கள் பல்லிப்பெருகி இருக்கின்றன. நல்லது தானே எனலாம், ஆனால் அப்படியில்லை. மான்கள் அளவுக்கு மீறி மேய்ச்சலில் ஈடுபடும் போது மீண்டும் புற்களும் செடிகளும் வளராமல் ஒரு இயற்கைச் சூழல் பாழ்படும். அதைத் தடுக்க வேறு வழியில்லாமல் ஆண்டு தோறும் இங்கே மான்களை வேட்டையாடுவார்கள். அப்படி வேட்டையாடுவதற்கு உரிமம் பெற வேண்டும். அந்த உரிமத் தொகை கானுயிர் காப்பகங்களுக்காகச் செலவு செய்யப்படும்.
இன்னும் சில இடங்களில் புல்வெளிகளில் மனிதர்கள் மரங்களை நட்டார்கள். அதனால் புல்வெளியில் வாழ்ந்த உயிர்கள் தங்கள் வாழ்விடங்களை இழந்து அழிவு நிலையை எட்டவே, மீண்டும் மரங்களை வெட்டிவிட்டு புல்வெளிகளைக் காக்க முயல்கிறார்கள். ஐயோ அங்கே மரங்களை வெட்டுகிறார்களே என்று ஆதாங்கப்படத்தேவையில்லை.
இப்படிச் சான்றுகள் நிறைய சொல்லலாம்.
மனிதன் சென்ற இடமெல்லாம் எலி, பூனை, நாய், ஒட்டகம் என்று தனக்கு வேண்டிய, அம்மண்ணுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய உயிர்களைப் பரப்பிவிட்டான். இன்று ஆசுதிரேலியா பற்றி எரிகிறது. அந்தக் கண்டத்தில் மட்டுமே வாழும் உயிர்களைக் காப்பதே பெரும்பாடாக இருக்கும். இதில் வறண்ட பலைவானத்தில் வாழத்தகுந்த ஒட்டகம் அவற்றிற்கு பெரும் சவலாக இருக்கும், கொஞ்ச நஞ்ச பச்சையையும் அது உரிஞ்சிவிட்டால் மற்ற உயிர்களால் தாக்குப்பிடிக்க முடியாது.
ஒன்று ஒட்டகங்களை விட்டுவிடலாம், இல்லையேல் அவற்றை வேட்டியாடிக் கட்டுக்குள் கொண்டு வந்து மற்ற உயிர்களுக்கும் கொஞ்சம் வாழ வழிகொடுக்கலாம். ‘என்ன தான் இருந்தாலும்’ என்று நினைக்க வேண்டாம். என்று மனிதன் அக்கண்டத்தில் காலடி எடுத்து வைத்தானோ அன்றிலிருந்தே அங்கு வாழும் அனைத்து உயிர்களுக்கும் அழிவு தான். அதைத் தடுக்கும் திறனும் மனமும் மனிதனிடம் இல்லை. அங்கு மட்டுமே வாழும் உயிரினங்களை காப்பதா இல்லை ஒட்டகங்களைக் காப்பதா என்ற கேள்வி வரும் போது, ஒட்டகங்களின் எண்ணிக்கையைக் குறைப்பது என்பதே பதிலாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக