திங்கள், 2 டிசம்பர், 2019

கரீபியன் தீவில் நித்யானந்தா... ஸ்கெட்ச் போட்ட `ரா'! இனி என்ன நடக்கும்? VikatanExclusive

டிரினிடாட் அண்ட் டொபாகோ
பிடதி ஆசிரமம் நித்யானந்தா vikatan -அ.சையது அபுதாஹிர : கடந்த சில மாதங்களாகவே நித்யானந்தாவின் இருப்பிடம் குறித்து தொடர்ந்து ஆராய்ந்து வந்தது உளவுத்துறை. வெளிநாட்டிற்கு நித்யானந்தா சென்றிருப்பதை ரா உளவு அமைப்பு உறுதி செய்தது. சிவன் ஸ்டைலில் உடை, பின்னணி இசையோடு என்ட்ரி, பெண் பக்தைகளுடன் புகைப்படங்கள், டிரேட் மார்க் புன்னகை எனத் தனக்கென தனி சாம்ராஜ்யம் நடத்திவந்தவர் நித்யானந்தா. இந்தியாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய பணக்கார சாமியார்களில் முக்கியமானவர். கடந்த சில மாதங்களாகவே காணாமல் போன நித்யானந்தாவைச் சுற்றி இப்போது புதிய சர்ச்சைகள் வலம்வர ஆரம்பித்துள்ளன.
திருவண்ணாமலையை பூர்வீகமாகக் கொண்ட நித்யானந்தா, பெங்களூர் அருகே உள்ள பிடதியில் பல ஏக்கர் பரப்பளவில் நித்யானந்த ஆசிரமத்தை நடத்திவந்தார். பிடதியில் தலைமை ஆசிரமம் இருந்தாலும், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இவருக்கு ஆசிரமங்களும் பக்தர்களும் உண்டு. மேலும், இதுதவிர வெளிநாடுகளிலும் இவருக்கு ஏராளமான பக்தர்கள் உண்டு. குறுகிய காலத்தில் ஆன்மிக உலகில் புகழின் உச்சத்திற்குச் சென்றவர். இளம் வயதிலேயே ஏராளமான பக்தர்களைத் தன்வயப்படுத்தினார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் மீது பாலியல் சர்ச்சை கிளம்பியது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே நித்யானந்தா இந்தியாவில் இல்லை என்கிற தகவல் வெளியாகிக்கொண்டே இருந்தது. ஆனால், இதுபற்றி நித்யானந்தாவின் ஆசிரமம் தரப்பிலிருந்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

ஆனால், சமூக வளைதளங்களில் நித்யானந்தா உரையாற்றும் வீடியோவைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பிடதியில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில் செயலாளர் பொறுப்பில் இருந்தவர் ஜனார்த்தன ஷர்மா. இவருடைய மூன்று பெண் குழந்தைகளையும் ஆசிரமத்தில் சேர்த்திருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு குஜராத் மாநிலம் அஹமதாபாத் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார் ஷர்மா. அதில் "பெங்களுர் ஆசிரமத்தில் சேர்க்கப்பட்ட எனது மூன்று மகள்களையும் எங்களது அனுமதி இல்லாமல் குஜராத் மாநிலத்தில் உள்ள ஆசிரமத்திற்கு மாற்றியுள்ளார். அவர்களுடன் எங்கள் தொடர்பையும் துண்டித்துவிட்டார்கள். எனது மகள்களை நித்யானந்தா ஆசிரமத்திலிருந்து மீட்டுத் தரவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். போலீஸார் உதவியுடன் குஜராத் ஆசிரமத்திலிருந்து இரண்டு மகள்களை ஜனார்த்தன ஷர்மா மீட்டுவிட்டார். மூத்த மகள் நந்திதாவை மீட்க முடியாமல் திணறிய ஜனார்த்தன ஷர்மா குஜராத் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
மறுபுறம் காவல்துறை நித்யானந்தாவின் ஆசிரம நிர்வாகிகள் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளது. இந்நிலையில் ஜனார்த்தன ஷர்மாவின் மகள் நந்திதா வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "எங்களை யாரும் கடத்தவில்லை என்றும், சுயவிருப்பத்தில்தான் இங்கு இருக்கிறோம். எங்கள் பெற்றோரைப் பார்க்க விருப்பமில்லை” என்று அந்த வீடியோ பதிவில் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் அவருடைய மற்றொரு மகள் “வைரமுத்து விவகாரத்தில் எனது அக்கா வைரமுத்துவை திட்டிப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அப்படி பேசச்சொன்னதே நித்யானந்தாதான்” என்று சொல்லியுள்ளார். இந்த விவகாரம் ஒருபுறம் விஸ்வரூபம் எடுத்துவரும் நிலையில், ஷர்மாவின் மூத்த மகள் நித்யானந்தாவுடன் மாயமாகிவிட்டார் என்கிற பகீர் புகாரும் எழுந்துள்ளது. இந்த விவகாரம் மத்திய அரசின் உளவுத்துறைக்கும் சென்றுள்ளது. கடந்த சில மாதங்களாகவே நித்யானந்தாவின் இருப்பிடம் குறித்துத் தொடர்ந்து ஆராய்ந்து வந்தது உளவுத்துறை. வெளிநாட்டிற்கு நித்யானந்தா சென்றிருப்பதை ரா உளவு அமைப்பு உறுதி செய்தது. இந்நிலையில் கடத்தல் விவகாரத்தில் நித்யானந்தா ஆசிரமம் சிக்கிய பிறகு நித்யானந்தாவின் இருப்பிடம் குறித்து தீவிர விசாரணையை நடத்தியுள்ளது ரா உளவுத்துறை. அப்போதுதான் நித்யானந்தா அமெரிக்கக் கண்டத்தில் உள்ள ஒரு குட்டி நாட்டில் பதுங்கியிருப்பதை உறுதி செய்துள்ளனர்.
கரீபியன் கடல் பகுதியில் இரண்டு குட்டித் தீவுகளை உள்ளடக்கிய `டிரினிடாட் அன்ட் டொபாகோ' என்னும் நாடு உள்ளது. உலக வரைபடத்தில் சிறிய புள்ளியாகத் தெரியும் இந்த நாட்டில்தான் இப்போது நித்யானந்தா பதுங்கியிருக்கிறார். ஒன்றறை கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்த நாட்டில் எதற்காக நித்யானந்தா தங்கியிருக்கிறார் என்பதை இந்திய உளவுத்துறை அதிகாரிகள் விசாரித்துவருகிறார்கள். மேலும், இந்தியாவிலிருந்து அவர் எந்த விமானத்திலும் வெளிநாட்டிற்குச் செல்லவில்லை. தரைவழி மார்க்கமாக நேபாளம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் இந்த நாட்டிற்குச் சென்றிருப்பதை உளவுத்துறை உறுதி செய்துள்ளது. நேற்று மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு இதுகுறித்து விரிவான நோட் ஒன்றையும் ரா அமைப்பு அனுப்பியுள்ளது. நித்யானந்தவுடன் ஷர்மா வின் மூத்த மகள் உட்பட சில பெண்களும் அங்கு இருக்கலாம் என்று மத்திய உளவுத்துறை அதிகாரிகள் கருதுகிறார்கள். அங்கிருந்துதான் தனது பக்தர்களுக்கு வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார் நித்யானந்தா. நித்யானந்தா விவகாரத்தில் தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்து வருவதால் அவரது ஆசிரமத்தை முடக்க மத்திய அரசு முடிவு செய்துவிட்டது. முதலில் பிடதி ஆசிரமத்தில் சோதனை நடத்த கர்நாடக மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், ஷர்மா மகள் கடத்தல் விவகாரத்தில் நித்யானந்தாவைக் கைது செய்வது குறித்தும் தீவிர ஆலோசனை நடந்துவருகிறது. இதற்கிடையே ரா உளவுத்துறையினர் டொபாகோ தீவில் உள்ள நித்யானந்தாவை தீவிரமாக கண்காணித்துவருகிறார்கள். மத்திய அரசு உத்தரவிட்டால் அங்கு வைத்து அவரைக் கைது செய்து இந்தியாவிற்கு அழைத்துவர தயாராகிவருகிறார்கள். மறுபுறம், இந்தியாவில் உள்ள நித்யானந்தாவின் சொத்துகள் பற்றிய விவரங்களையும் தயார் செய்து, அவற்றையும் முடக்க ஆலோசனை நடந்துவருகிறது. பிரதமர் அலுவலகத்திலிருந்தும் இன்னும் ஏன் கைது செய்யவில்லை என்கிற அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதனால், நித்தியின் ஆட்டத்திற்கு முடிவு கட்ட மத்திய அரசு தயாராகிவிட்டதாகச் சொல்கிறார்கள் மத்திய உள்துறை அதிகாரிகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக