ஞாயிறு, 22 டிசம்பர், 2019

பேரணிக்கு அனுமதி breaking news சென்னையில் நாளை திமுக கூட்டணி கட்சிகளுக்கு உயர்நீதி மன்றம் அனுமதி!

சென்னையில் நாளை திமுக கூட்டணி கட்சிகள் தடையை மீறி போராட்டம்
மாலைமலர் : திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் நாளை தி.மு.க. கூட்டணி கட்சியினர் சார்பில் தடையை மீறி போராட்டம் நடத்த உள்ளது. சென்னை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன. பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
தமிழகத்திலும் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கல்லூரி மாணவர்களும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும், அரசியல் கட்சியினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நுங்கம்பாக்கத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவர்கள் மற்றும் 58 அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஒரே இடத்தில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக் கோரி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

குடியுரிமை சட்டத்துக்கு தி.மு.க. அதன் கூட்டணி கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. முஸ்லிம்கள் மற்றும் இலங்கை தமிழர்களுக்கு விரோதமாக இந்த சட்டம் இருப்பதாக குற்றம்சாட்டி உள்ளன.
எனவே, குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. இந்த கோரிக்கையை வலியுறுத்தி தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்த பேரணி நாளை காலை எழும்பூரில் நடை பெறுகிறது. காலை 9 மணிக்கு பேரணி தொடங்க இருப்பதாகவும் இதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் தி.மு.க. சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பேரணிக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. எழும்பூரில் உள்ள சி.எம்.டி.ஏ. அலுவலகத்தில் இருந்து தொடங்கும் பேரணி ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் முடிவடைகிறது.
போலீசார் அனுமதி அளிக்காத நிலையில் தடையை மீறி பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பேரணியில் அனைத்து தரப்பினரும் கலந்துகொள்ள வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக திரைத் துறையினர் உள்ளிட்ட 98 அமைப்புகளுக்கு தி.மு.க. சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இதனால் நாளை நடை பெறும் பேரணியில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பேரணியில் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.
இதையடுத்து எழும்பூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
நாளை நடைபெறும் பேரணியையொட்டி எழும்பூரில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
சி.எம்.டி.ஏ. அலுவலகம் அருகில் உள்ள சந்திப்பில் இருந்து புறப்படும் பேரணி கூவம் கரையோரத்தையொட்டியுள்ள லேங்ஸ் கார்டன் ரோடு, சித்ரா தியேட்டர் சந்திப்பு வழியாக புதுப்பேட்டையை சென்றடைந்து அங்கிருந்து ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நிறைவடையும்.
நாளை பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டாலும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் பேரணியை போலீசார் தடுத்து நிறுத்த மாட்டார்கள் என்று தெரிகிறது. அமைதியான முறையில் பேரணியை நடத்த அறிவுறுத்துவார்கள் என்றே தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிக எண்ணிக்கையில் கட்சியினரும், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் பங்கேற்றால் அவர்களை கைது செய்வது சாத்தியமில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடுமுழுவதும் நடைபெற்று வரும் பெரும்பாலான போராட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அந்த வகையில் தமிழகத்திலும் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்களுக்கு போலீசார் அனுமதி வழங்கு வதில்லை.
அதனை மீறி போராட்டம் நடத்துபவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கும் வகையில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இதன்படி நாளை நடைபெறும் தி.மு.க. போராட்டத்துக்கு அனுமதி வழங்காத நிலையில் அதில் பங்கேற்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
பேரணியையொட்டி எழும்பூரில் நாளை போக்கு வரத்தில் மாற்றம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊர்வலம் நடைபெறும் சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
பேரணியில் அசம்பாவிதம் நிகழ்ந்துவிடாமல் தடுக்கும் வகையில் தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் போலீசார் மேற்கொண்டுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக