செவ்வாய், 17 டிசம்பர், 2019

டெல்லி மாணவர்கள் மீதான தாக்குதல்.. போலீசுக்கு எதிரான வழக்கு.. இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!

Citizenship Amendment: SC to hear the case against Delhi police attack on students tamil.oneindia.com - shyamsundar ; டெல்லி: டெல்லியில் போலீசால் நேற்று முதல்நாள் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை இன்று உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. கலவரம் முடிந்தால் மட்டுமே விசாரணை நடக்கும் என்று தலைமை நீதிபதி எஸ்.ஏ போப்டே தெரிவித்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று முதல்நாள் டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்திற்கு வெளியே பேருந்துக்கு தீ வைக்கப்பட்டது.

இதனால் அங்கிருந்த மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மாணவர்கள் பலர் கடுமையாக காயம் அடைந்தனர். இந்த நிலையில் மாணவர்களை நேற்று போலீசார் தாக்கியது தொடர்பான புகாரை அவசர வழக்காக விசாரிக்க டெல்லி ஹைகோர்ட் மறுத்துவிட்டது. இதையடுத்து டெல்லி போலீசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் மனு அளித்தார்.
இந்திரா ஜெய்சிங் தனது மனுவில், டெல்லி போலீசுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு பதிய வேண்டும். டெல்லி போலீஸ் மாணவர்கள் மீது தாக்கியதை முன்னாள் நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால் உச்ச நீதிமன்றமும் இதை அவசரமாக விசாரிக்க மறுத்துவிட்டது.
இந்த மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ போப்டே வழக்கை தாமாக முன் வந்து பதிய முடியாது, இன்று அவசரமாக விசாரிக்க முடியாது என்று கூறிவிட்டார். கலவரம் நின்றால் மட்டுமே வழக்கை விசாரிப்பேன். கலவரம் மொத்தமாக நிற்கட்டும், பின்பு பார்க்கலாம். மனுதாக்கல் செய்யுங்கள், நாளை விசாரிக்கிறோம் என்று குறிப்பிட்டார்.
இந்த நிலையில் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை இன்று உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. தலைமை நீதிபதி எஸ்.ஏ போப்டே தலைமையிலான அமர்வு வழக்கை விசாரிக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக