வியாழன், 26 டிசம்பர், 2019

லக்ஷ்மண் ஸ்ருதி .....கச்சேரிக் காதலன்! சிறப்பு கட்டுரை

சிறப்புக் கட்டுரை: கச்சேரிக் காதலன்!மின்னம்பலம் : ஸ்ரீராம்:  தமிழக மண்ணில் லைட் ம்யூஸிக் கச்சேரி என்றால் லக்ஷ்மண் ஸ்ருதி என்ற பெயரை தவிர்க்க முடியாது. 90 களில் எழுந்து இதுகாறும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இசைக் கச்சேரிகளை நடத்தியிருக்கும் மாபெரும் நிறுவனம் அது.
ஆம், அதை நிறுவனம் என்றுதான் சொல்ல வேண்டும். ஏறத்தாழ 100 கலைஞர்களுக்கு அன்றாடம் வேலை கொடுத்துக் கொண்டிருக்கும் நிறுவனம் அது.
அந்த நிறுவனத்தின் சூத்திரதாரிகள் ராமனும் லக்ஷ்மணனும். என்னில் வயது மூத்தவர்கள்தான் என்றாலும் நட்போடு அணைத்துப் பழகக் கூடியவர்கள். எனது கல்லூரிக் காலத்திலிருந்தே அவர்களை எனக்குப் பழக்கம்.
அன்றைய காலேஜ் கல்ச்சுரல் நிகழ்ச்சிகளில் கலக்கிக் கொண்டிருந்தவர்களில் பலர் பலத் துறைகளை நோக்கிப் போய்விட அந்தக் கலையார்வத்தை அப்படியே விரிவுபடுத்திக் கொண்டு வந்ததுதான் லக்ஷ்மண் ஸ்ருதி.
உழைப்பு என்றால் இப்படி அப்படிப்பட்ட உழைப்பல்ல....அசகாய உழைப்பு. ஒரு கட்டத்தில் 30 நாளைக்கு 45 கச்சேரிகள் என்னும் அளவுக்கு இரண்டு மூன்று டீம் செய்து கொண்டு நகரங்களை ஆக்ரமித்தார்கள். உலகை வலம் வந்தார்கள்.
எலக்ட்ரானிக் யுக வேகத்தையும் பட்ஜெட்டையும் முன்வைத்து மற்ற இசைக்குழுக்கள் கீ போர்டு – சேம்ப்ளர்ஸ் – மைனஸ் ஒன் என ஒப்பேற்றிக் கொண்டிருந்த போதிலும் நூறு சதவிகிதம் இசைக் கலைஞர்களை மட்டுமே வைத்து நடத்திக் கொண்டிருந்தது லக்ஷ்மண் ஸ்ருதி.

அமைச்சர்கள் வீட்டுக் கல்யாணங்கள் பெரும் தனவந்தர்களின் நிகழ்ச்சிகள் அனைத்திலும் லக்ஷ்மண் ஸ்ருதி கச்சேரியை வைப்பதை ஒரு வகையான சமூக அந்தஸ்தாக மாற்றிய சாமர்த்தியம் அவர்களுக்கே உரியது.
சென்னையில் திருவையாறு என்னும் மிக காத்திரமான நிகழ்ச்சியை மார்கழியின் மகோன்னதமாக நிறுவிக் காட்டியவர்கள் அந்த இரட்டைச் சகோதரர்கள்.
இன்று அதே மார்கழியில் அந்த நிறுவனத்தின் அண்ணன் அகாலமாக தன்னை அழித்துக் கொண்டார்.
இசை உலகம் ஒரு அருமையான ஆதரவாளனை இழந்துவிட்டது.
இசைக் கலைஞன் ஒருவன் மறைந்து விட்டான் என்பதைவிட இசையை ஆராதித்த இசைக்காக ஓடி ஓடி உழைத்த ஓர் மாமனிதன் இன்று இல்லை என்பதுதான் வேதனையாக இருக்கின்றது.
தனி மனிதன் இறந்தால் அந்த குடும்பத்துக்கு மட்டுமே நட்டம். ஒரு நிர்வாகி இறந்து விட்டால் பற்பல குடும்பங்களுக்கு நட்டமாகி விடுகிறது.
இரட்டைச் சகோதரர்களாகப் பிறந்து இன்று ஒற்றைச் சிறகை இழந்து தவிக்கும் அருமை சகோதரர் லக்ஷ்மணனுக்காக அழுவதா அல்லது அவரால் நிர்வகிக்கப்பட்ட அந்த நிறுவனத்தால் மேடையும் புகழும் காணக் காத்திருந்த எண்ணற்றக் கலைஞர்களுக்காக அழுவதா ?
எப்படி இருந்தாலும் அவர் இப்படி மறைந்திருக்கக் கூடாது.
ஆச்சரியம் என்னவென்றால், நாங்களெல்லாம் ஆலோசனைக்கு அணுகும் இடமாக இருந்தவர் இராமன். இரட்டைச் சகோதரர்களில் லக்ஷ்மண் இறங்கி வேலை செய்வார். ராமன் தான் மோடிவேட் செய்வார். எல்லோரையும் மோடிவேட் செய்ய வல்ல அண்ணன் இராமன் அகாலமாய்த் தொங்கியது கொடூரமான அபத்தம்.
நல்லதொரு நிர்வாகி என்பதைவிட இணையற்ற மனித நேயத்துக்கு சொந்தக்காரர் இராமன்.
ஒருமுறை இரவு 11 மணி போல இருக்கும். அவரது அலுவலகத்தில் அண்ணன் இராமன் லக்ஷ்மணன் நான் மூவரும் ஒரு டிஸ்கஷனில் இருந்தோம். ஒரு ஃபோன் அழைப்பு வந்தது.
அடுத்த பத்தாவது நிமிஷம் இராமன் அவர்களது உதவியாளர் பெட்டி ஹேர் பெட் எல்லாம் ரெடி செய்து கொண்டிருந்தார். அண்ணனுக்கு டாப்ளட் எடுத்து வெச்சிட்டியா என்று லக்ஷ்மன் விசாரித்துக் கொண்டிருந்தார்.
“என்ன அண்ணே...வெளியூரா...?”
“ஆமாங்க, 4 வருஷத்துக்கு முன்ன செங்கல்பட்டுல ஒரு நிகழ்ச்சியின் போது கார் ப்ரேக் டவுன் ஆயிடுச்சி...அந்த நடு ராத்திரியில ஒரு தம்பி வந்து உதவி பண்ணார். இப்போ ஒரு ஆக்ஸிடெண்ட்ல அடிபட்டு ஆஸ்பத்திரிக்கு தூக்கிக்கிட்டுப் போயிருக்காங்களாம். போய்ப் பார்க்கணும். நாளை மதியம் ஓடியாந்துருவேன். கண்டின்யூ பண்ணுவோம்...” என்றபடியே அந்த நடு ராத்திரியில் காரை எடுத்துக் கொண்டு ஓடினார்.
அப்படி ஒரு மனித நேயம். அசகாய சூர நிர்வாகம் !
இராமன் பாட மாட்டார். இசைக் கருவி இசைக்க மாட்டார். ஆனால், கோபால் சர்மா உட்பட பல நூறு இசைக் கலைஞர்களை உருவாக்கிக் காட்டினார். தன் மகனைக் கூட தொழிலில் ஈடுபடுத்தாமல் ஏ.ஆர். ரஹ்மான் அவர்களிடம் பணிபுரிய அனுப்பி வைத்தார்.
அந்த மனிதன் இன்று இல்லையே என்னும் போதுதான் மனம் கனக்கிறது. என்ன சொன்னாலும் தற்கொலை தீர்வாகாது.
அமைச்சர்கள், எம்.எல்.ஏ க்கள் உட்பட பற்பல பிரமுகர்கள் அதிர்ச்சியோடு வந்து குழுமியிருந்தார்கள். எஸ்.பி.பி. மனோ உட்பட அனைத்துப் பாடகர்களும் அந்த வீட்டீல் மணிக்கணக்கில் அமர்ந்திருந்தார்கள்.
விருப்பப் பாடலை பாடச் சொல்லிக் கேட்கவாவது அந்த இசைக் காதலன் எழுந்து வர மாட்டானா என்று காத்திருந்தது போல் இருந்தது...!
இல்லை. இல்லை.
அந்தக் கச்சேரிக் காதலன் - மனித நேயன் – ஈடு இணையற்ற நிர்வாகி அந்தி சாயும் நேரம் சிவப் ப்ரசாதமாகித் திளைத்ததுதான் மிச்சம்.
கச்சேரி உலகம் மனம் கனத்து நிற்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக