திங்கள், 9 டிசம்பர், 2019

உள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனுத் தாக்கல் இன்று ஆரம்பம்!

மின்னம்பலம் : உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் இன்று காலை 10 மணியளவில் தொடங்குகிறது.
உள்ளாட்சித் தேர்தலை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கில், தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், ஒன்பது மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களுக்குத் தேர்தல் நடத்தலாம் என்றும், அதே நேரம் இட ஒதுக்கீடு முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதையடுத்து, பழைய அறிவிப்பாணையை ரத்து செய்த தேர்தல் ஆணையம் 27, 30 ஆகிய தேதிகளிலேயே தேர்தல் நடைபெறும் வகையில் புதிய அறிவிப்பாணையை நேற்று முன்தினம் வெளியிட்டது.
இந்த நிலையில் இன்று (டிசம்பர் 9) காலை 10 மணி முதல் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது. ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்கு ஊராட்சி அலுவலகத்தில் மனுத் தாக்கல் நடக்கும். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர் மற்றும் கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கான மனுத் தாக்கல் ஒன்றிய அலுவலகங்களில் நடக்க உள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி அலுவலர்கள், வேட்பு மனுக்களைப் பெற்றுக்கொள்வர்.

ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு 200 ரூபாயும், ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 600 ரூபாயும், மாவட்ட கவுன்சிலருக்கு 1000 ரூபாயும் டெபாசிட் பணமாகச் செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த வேட்பாளர்கள் கிராம ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 100 ரூபாயும், ஊராட்சித் தலைவர், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 300 ரூபாயும், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 500 ரூபாயும் செலுத்த வேண்டும்.
மனு தாக்கலுக்கு வேட்பாளருடன் முன்மொழிபவர் ஒருவர், வேட்பாளர் விரும்பும் 3 பேர் உள்பட 5 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
இன்று ஆரம்பிக்கும் வேட்பு மனுத் தாக்கல் வரும் 16ஆம் தேதி வரை நடைபெறும். பெறப்பட்ட வேட்பு மனுக்களின் பரிசீலனை 17ஆம் தேதி நடைபெறும். மனுவைத் திரும்பப் பெறுவதற்குக் கடைசி நாள் டிசம்பர் 19 ஆகும். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன.
எனினும், இட ஒதுக்கீடு உள்ளிட்டவற்றைக் காரணம் காட்டி உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை எதிர்த்து திமுக மீண்டும் நீதிமன்றத்தை நாட முடிவெடுத்துள்ளதால் தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வியும் ஒருபுறம் இருந்து வருகிறது. எனினும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக