வியாழன், 26 டிசம்பர், 2019

மராட்டியத்தில் விவசாயிகளின் பயிர்க்கடன் முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும்- உத்தவ் தாக்ரே

மராட்டியத்தில் விவசாயிகளின் பயிர்க்கடன் முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும்- உத்தவ் தாக்ரேதினத்தந்தி  : மும்பை, மராட்டியத்தில் விவசாயிகள் தற்கொலைகளை கருத்தில் கொண்டு புதிதாக பதவியேற்ற சிவசேனா தலைமையிலான அரசு நடந்து முடிந்த குளிர்கால சட்டசபை கூட்டத்தில் பயிர்க்கடன் தள்ளுபடியை அறிவித்தது. இந்த திட்டத்தின்படி 2015-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் 2019-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை விவசாயிகள் வாங்கிய ரூ.2 லட்சம் வரையிலான குறுகிய கால பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முழு பயிர்க்கடன் தள்ளுபடி வழங்குவோம் என்று கூறிவந்த சிவசேனா விவசாயிகளை ஏமாற்றிவிட்டதாக குற்றம் சாட்டியது. இந்த நிலையில் புனேயில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவும், தேசியவாத காங்கிரஸ் நிறுவன தலைவர் சரத்பவாரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் உத்தவ் தாக்கரே பேசியதாவது:-


நாங்கள் விவசாயிகளுக்கு உடனடி நிவாரணமாக தலா ரூ.2 லட்சம் வரை பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கியுள்ளோம். நிச்சயம் அவர்களின் முழு பயிர்க்கடனும் தள்ளுபடி செய்யப்படுவதை எங்கள் அரசு உறுதி செய்யும். பண்ணை உற்பத்தித்திறனை எவ்வாறு உயர்த்துவது என்பதையும், மெஜாரிட்டி இல்லாத கட்சிகளை ஒன்றிணைத்து அரசாங்கத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதையும் சரத்பவார் எங்களுக்குக் கற்றுக் கொடுத்துள்ளார்.

சரத்பவாரின் விரலைப் பிடித்து கொண்டு அரசியலுக்கு வந்ததாக யாரோ (பிரதமர் மோடி) சொன்ன அதே இடம் தான் இது. இன்று நானும் இங்கு நிற்கிறேன். என்னை அரசியலுக்குள் கொண்டுவருவதன் மூலம் சரத்பவார் மற்றொரு தவறு செய்து விட்டார் என்று நான் கூற விரும்பவில்லை. இவ்வாறு அவர் பேசினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக