ஞாயிறு, 29 டிசம்பர், 2019

இலங்கை பாமாயில்: மலையக தமிழர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் அபாயம்?

பாம் ஆயில்: மலையக தமிழர்களை அழிக்கும் முயற்சியா?பாம் ஆயில்: மலையக தமிழர்களை அழிக்கும் முயற்சியா?;ரஞ்ஜன் அருண் பிரசாத -பிபிசி தமிழுக்காக  :  இலங்கையில் பெருந்தோட்ட பயிர் செய்கைகளை இல்லாது செய்து, முள் தேங்காய் (கட்டுப்பொல்) என்று அழைக்கப்படும் பாம் ஆயில் சாகுபடியை பெருந்தோட்ட நிறுவனங்கள் தற்போது செய்து வருகின்றன என செயல்பாட்டாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். முள் தேங்காய் செய்கை, இலங்கை அரசாங்கத்தின் பூரண அனுமதியுடனேயே முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிறுவனங்கள் தரப்பில் கூறினாலும் முள் தேங்காய் செய்கையை இடை நிறுத்தி வைக்க அரசு முன்பு முடிவெடுத்துள்ளதாக அரசு தரப்பு தெரிவிக்கிறது.
மலையகத்தில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் ரப்பர், தேயிலை போன்ற செய்கைகளை இல்லாது செய்து, இந்த முள் தேங்காய் சாகுபடிக்கு நிறுவனங்கள் முன்னுரிமை வழங்கி வருவதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன.
இது பெருந்தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காமல் அவர்களுக்கு கூடுதல் ஊதியம் தரவும், ரப்பர் மற்றும் தேயிலையைவிட அதிக லாபம் தரும் பயிர் செய்கையை நோக்கி நகரும் முயற்சி என்றும் நிறுவங்கள் தரப்பு கூறுகிறது.

முள் தேங்காய் சாகுபடியை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தி கேகாலை பகுதியில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சமூக செயற்பாட்டாளர்கள், மதகுருமார், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஆகியோர் இணைந்தே இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
தமது பாரம்பரிய தொழிலாகவுள்ள ரப்பர், தேயிலை போன்ற செய்கைகளை இல்லாது செய்து, முள் தேங்காய் சாகுபடியை மேற்கொள்ளும் நிறுவனங்களின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முள் தேங்காய் செய்கை காரணமாக பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள தமிழ் மக்கள் பெருமளவு பாதிக்கப்படுவதாக பெருந்தோட்ட தொழிலாளியான யட்டியந்தோட்டை பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் கணபதிபிள்ளை தெரிவிக்கின்றார்.
”முள் தேங்காய் நடுவதனால், எமது தோட்டப் பகுதிகளிலுள்ள மக்களுக்கு வேலை இல்லாது போகின்றது. இந்த மரங்களினால் எந்தவித பயனும் கிடையாது. இந்த மர நடுகையினால் தண்ணீருக்கான தட்டுப்பாடு ஏற்பாடும். எதிர்காலத்தில் நாம் பாதிக்கப்படுவோம். வறட்சி ஏற்படக்கூடிய நிலைமை தான் இருக்கின்றது. தோட்ட மக்கள் பெரும் கஷ்டத்தில் தான் இருக்கின்றோம். எதிர்காலத்தில் இன்னும் கஷ்;டத்தை எதிர்நோக்க வேண்டிவரும்” என வேலாயுதம் கணபதிபிள்ளை தெரிவிக்கின்றார்.
சூழலுக்குப் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த செய்கையை உடனடியாக நிறுத்துமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்ற போதிலும், நிறுவனங்கள் அந்த கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தாது தொடர்ந்தும் முள் தேங்காய் செய்கையை முன்னெடுத்து வருகின்றனர்.

முள் தேங்காய்
முள் தேங்காய் பயிரிடுவதால் என்ன பாதிப்பு?
குறைந்த காலத்தில் அதிகளவிலான லாபங்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே நிறுவனங்கள் இந்த பயிர் செய்கையை மேற்கொண்டு வருவதாக ஈர வலய வனப் பகுதிகளைப் பாதுகாக்கும் அமைப்பின் ஏற்பாட்டாளர் ஜயந்த விஜேசிங்க பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
முள் தேங்காய் சாகுபடியின் ஊடாக இலங்கையின் தென்னை சாகுபடிக்கு பாரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
1990ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் தனியார் நிறுவனங்களினால் மரக்கறி எண்ணெய் என்ற பெயரில் பாம் ஆயில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டதாக அவர் கூறுகின்றார்.
இந்த பாம் ஆயில், முள் தேங்காய் மரங்களின் ஊடாகவே பெற்றுக் கொள்ளப்படுவதாகவும், அந்த பாம் ஆயில் வகையை பிரபல்யப்படுத்தும் நோக்குடனேயே மரக்கறி எண்ணெய் என்ற பெயரில் இதனை சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

முள் தேங்காய்
தேங்காய் எண்ணெய் பயன்பாட்டின் ஊடாக இதய நோய்கள் ஏற்படுவதாக 1990ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் பிரசாரங்களை செய்து, பாம் ஆயிலை நாட்டு மக்களுக்கு அதிகளவில் விற்பனை செய்யும் முயற்சிகளில் நிறுவனங்கள் ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த முள் தேங்காய் செய்கை காரணமாக, இலங்கையின் தென்னை செய்கை பெருமளவு வீழ்ச்சி கண்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்
முன்னதாக காலப் பகுதியில் 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் மெற்றிக் தொன் வரை தேங்காய் எண்ணெய்யை உற்பத்தி செய்த இலங்கை, தற்போது 40 ஆயிரம் மெற்றிக் தொன் வரையான தேங்காய் எண்ணெயையே உற்பத்தி செய்து வருவதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.
எனினும், ஒரு லட்சம் மெற்றிக் தொன் பாம் ஒயில் தற்போது வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
இந்த நிலையில், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு லட்சம் மெட்ரிக் டன் (metric ton) பாம் ஆயில் இறக்குமதியை நிறுத்தி, உள்நாட்டிலேயே அதனை உற்பத்தி செய்யும் முயற்சி தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜயந்த விஜேசிங்க கூறினார்.
முள் தேங்காய் செய்கையானது, வனங்கள் அழிவடைவதற்கான முக்கிய காரணியாக மாற்றம் பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

முள் தேங்காய்
ஈர வலய பகுதிகளில் செய்கை செய்யப்பட்டுள்ள ரப்பர் சாகுபடியை அழித்து, அந்த இடங்களில் முள் தேங்காய் செய்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறுகின்றார்.
இவ்வாறு வனப் பகுதிகள் அழிக்கப்படுவதன் ஊடாக பாரிய பிரச்சனைகள் ஏற்பட்டு வருவதாக அவர் கவலை வெளியிடுகின்றார்.
இந்த செய்கையின் ஊடாக லாபம் அதிகளவில் கிடைக்கின்ற போதிலும், சுற்று சூழல் முற்றாக அழிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
இலங்கையிலுள்ள ரப்பர் செய்கைகள் அனைத்தும் இல்லாது செய்யப்பட்டு, முள் தேங்காய் செய்கை இருந்தால், இலங்கைக்கு அது பாரிய அழிவை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
இலங்கையிலுள்ள பல வனப் பகுதிகள் தற்போது அழிக்கப்பட்டு அந்த இடங்களில் முள் தேங்காய் செய்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப் படம்

ஊழியர் பெருமளவில் தேவையில்லை

முள் தேங்காய் செய்கைக்கு பெருமளவிலான பணியாட்கள் தேவையில்லாமையினால், நிறுவனங்களுக்கு அதனூடாக பெருமளவு லாபத்தை ஈட்டிக் கொள்ள முடியும் என ஈர வலய வனப் பகுதிகளை பாதுகாக்கும் அமைப்பின் ஏற்பாட்டாளர் ஜயந்த விஜேசிங்க தெரிவித்தார்.
முள் தேய்காய் செடிகளை நட்டவுடன், அது பூமியிலுள்ள பெருமளவிலான நீரை உறிஞ்சிக்கொண்டு தன்னிச்சையாகவே வளரக்கூடிய ஒரு மரம் என்பதனால், அதற்குப் பெருமளவிலான பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டிய அவசியம் கிடையாது என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
முள் தேங்காய் செய்கையின் பின்னரான காலப் பகுதியில் அறுவடையின் போதே பணியாட்கள் தேவைப்படும் எனவும், இதனால் ரப்பர், தேயிலை போன்ற செய்கைகளுக்கு பதிலாக இந்த செய்கையை முன்னெடுத்தால் அதிகளவிலான லாபத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என நிறுவனங்கள் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
குறிப்பாக முள் தேங்காய் மரமொன்று நாளொன்றிற்கு சுமார் 450 லிட்டர் நீரை, நிலத்திலிருந்து உறிஞ்சிக் கொள்வதாகவும், அதனால் ஏனைய தாவரங்களின் வளர்ச்சி இந்த செய்கையின் ஊடாக கட்டுப்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
    முள் தேங்காய் செய்கை செய்யப்படுகின்ற பகுதிகளில் வேறு செய்கைகளையோ தாவரங்களையோ வளர்க்க முடியாத நிலைமை ஏற்படும் என அவர் கவலை வெளியிடுகின்றார்.

    மலையக தமிழ் மக்களின் உழைப்பை சூறையாடும் முயற்சி

    அதேவேளை, இந்த முள் தேங்காய் செய்கையை மேற்கொள்வதன் ஊடாக பெருந்தோட்ட தொழிலாளர்களை அழிக்கும் சூழ்ச்சியொன்றும் இந்த திட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் எச்சரிக்கை விடுக்கின்றார்.
    பெருந்தோட்ட தமிழ் மக்கள் நாளாந்த சம்பளமாக ஆயிரம் ரூபாய் கோரி போராட்டங்களை நடத்தி வருகின்றமையினால், பணியாட்கள் இல்லாது முன்னெடுக்கக்கூடிய செய்கையைச் செய்து, அவர்களை அந்த தொழில் துறையிலிருந்து வெளியேற்றும் சூட்சமமான திட்டமே இது என ஜயந்த விஜேசிங்க தெரிவித்தார்.

    முள் தேங்காய்
    அத்துடன், முள் தேங்காய் செய்கைகள் முன்னெடுக்கப்படும் பகுதிகளில் வன விலங்குகள் கூட வாழ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
    இந்த செய்கையின் ஊடாக நிறுவனங்களுக்கு பாரிய பொருளாதார லாபம் கிடைக்கும் அதேவேளை, நாட்டிற்கு பாரிய நட்டமே ஏற்படும் என அவர் கூறுகின்றார்.
    முள் தேங்காய் செய்கைக்காகப் பயன்படுத்தப்படும் உரம், நிலத்தடி நீரில் சேர்வதனால் பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
    பொருளாதாரம், சுகாதாரம், சூழல், சமூகம், நிலம் என எவ்வாறு எடுத்தாலும், முள் தேங்காய் செய்கை காரணமாகப் பாதிப்புக்களே தவிர எந்த வித நன்மைகளும் கிடையாது என ஈர வலய வனப் பகுதிகளைப் பாதுகாக்கும் அமைப்பின் ஏற்பாட்டாளர் ஜயந்த விஜேசிங்க தெரிவிக்கின்றார்.

    முள் தேங்காய் செய்கையை மேற்கொள்ளும் நிறுவனத்தின் பதில்

    இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முள் தேங்காய் செய்கையை மேற்கொள்ளும் பிரதான நிறுவனங்களில் ஒன்றான லலான் ரப்பர் நிறுவனத்தின் பிரதி பொது முகாமையாளர் நிஷாந்த செனவிரத்னவிடம் பிபிசி தமிழ் தொடர்புக் கொண்டு வினவியது.
    முள் தேங்காய் செய்கையினால் நாட்டிற்கோ, நாட்டில் வாழும் சமூகத்திற்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது என நிஷாந்த செனவிரத்ன குறிப்பிட்டார்.
    அரசாங்க நிறுவனங்களினால் தெங்கு ஆய்வு நிறுவனம், பெருந்தோட்ட கண்காணிப்பு பிரிவுகளின் கண்காணிப்பின் கீழ் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
    முள் தேங்காய் செய்கையானது, இலங்கை அரசாங்கத்தின் பூரண அனுமதியுடனேயே முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
    2014ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அனுமதிக்கு அமையவே இந்த செய்கை ஆரம்பிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
    இலங்கைக்கு வருடாந்தம் பில்லியன் கணக்கான லிட்டர் பாம் ஆயில் இறக்குமதி செய்யப்படுவதாகவும், அதனை உள்நாட்டில் உற்பத்தி செய்தால் முழுமையான வருமானத்தை இலங்கைக்கே பெற்றுக் கொள்ள முடியும் என்ற நோக்கத்துடனேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
    “பாம் ஒயிலுக்கு அதிக கேள்வி நிலவுகின்றமையினால் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அதிக சம்பவத்தை வழங்க முடியும். ரப்பர் மற்றும் தேயிலை செய்கைகளை முழுமையாக இல்லாதொழித்து, முள் தேங்காய் செய்கை செய்யப்படாது, மாறாக லாபத்தை பெற்றுக் கொள்ளும் மாற்று செய்கையை நோக்கி நகர்தல் இது,” என அவர் கூறுகிறார்.

    விதுர விக்ரமநாயக்கபடத்தின் காப்புரிமை vidura wikramanayake
    Image caption விதுர விக்ரமநாயக்க
    இந்த விடயம் தொடர்பில் விவசாய ராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவிதுர விக்ரமநாயக்கவிடம் பிபிசி தமிழ் வினவியது,
    முள் தேங்காய் செய்கையை இடை நிறுத்தி வைக்குமாறு (ரணில் விக்ரமசிங்க தலைமையிலான) கடந்த அரசாங்கம் தீர்மானத்தை எட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
    எனினும், முள் தேங்காய் செய்கை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருமாயின், அது தொடர்பில் தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறினார்.
    bbc

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக