சனி, 14 டிசம்பர், 2019

மம்தா பானர்ஜி : குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தும்படி எந்த மாநிலத்தையும் வற்புறுத்த முடியாது


மாலைமலர் : பா.ஜனதா கட்சியால் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தும்படி எந்த மாநிலத்தையும் வற்புறுத்த முடியாது என்று மம்தா பானர் கொல்கத்தா: மேற்குவங்காள மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாங்கள் இந்த மாநிலத்தில் இந்திய குடிமக்கள் தேசிய பதிவேடுக்கான கணக்கெடுப்பு நடத்த அனுமதிக்கமாட்டோம். அதேபோல குடியுரிமை சட்டத்தையும் அனுமதிக்கமாட்டோம். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இருந்தாலும் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை நாங்கள் அமல்படுத்தமாட்டோம்.
மாநிலங்கள் இதனை அமல்படுத்த வேண்டும் என்று பா.ஜனதா மிரட்டி வற்புறுத்த முடியாது. குடியுரிமை சட்டம் இந்தியாவை பிரித்துவிடும். நாங்கள் ஆட்சியில் இருக்கும் வரை இந்த மாநிலத்தில் உள்ள ஒரு நபர் கூட நாட்டை விட்டு வெளியேறமாட்டார். குடியுரிமை சட்டத்திருத்தத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.

அசாம் மாநிலத்துக்கு வருவதாக உள்ள ஜப்பான் பிரதமர் ‌ஷின்ஜோ அபே, ஒருவேளை தனது திட்டத்தை கைவிட்டால் அது இந்தியாவின் தன்மானத்தில் படிந்த கறையாகிவிடும்.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் நூற்றாண்டு விழா கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி செல்ல இருந்த எனது பயணத்தையும் ரத்து செய்துவிட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 3 நாள் பயணமாக இந்தியா வரும் ஜப்பான் பிரதமர் அசாம் மாநிலம் கவுகாத்தியில் இந்திய பிரதமருடன் வருடாந்திர பேச்சுவார்த்தை நடத்துவதாக இருந்தது. கவுகாத்தியில் பாதுகாப்பு நிலைமை மிகவும் மோசமடைந்துவருவதால் ஜப்பான் பிரதமர் இந்திய பயணத்தை ரத்து செய்ய வாய்ப்பு உள்ளதாக ஜப்பான் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக