செவ்வாய், 24 டிசம்பர், 2019

முப்படைகளின் தலைமை தளபதியாகிறாரா பிபின் ராவத்

முப்படைகளின் தலைமை தளபதியாகிறாரா பிபின் ராவத்?மினம்பலம் முப்படைகளுக்கும் தலைமை தளபதி பதவியை உருவாக்கப் பிரதமர் மோடி
தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று (டிசம்பர் 24) ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி , ஆகஸ்ட் 15ஆம் தேதி செங்கோட்டையில் ஆற்றிய உரையில், படைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேலும் கூர்மைப்படுத்துவதற்கு முப்படைகளுக்கும் சேர்த்து தலைமை தளபதி பதவியை உருவாக்க இருப்பதாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இதுகுறித்து நமது மின்னம்பலத்தில் முப்படைகளின் தலைமை அதிகாரி! அத்வானி கனவை நனவாக்கிய மோடி என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
விமானப் படை, ராணுவப் படை மற்றும் கப்பற்படை என முப்படைகளுக்கும் தலைமை தளபதியாக புதிய பதவியை உருவாக்குவது தொடர்பாகவும், தலைமை தளபதியின் அதிகாரம் உள்ளிட்டவை குறித்து வரையறை செய்யவும், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு, முப்படைகளின் தளபதிகள் உட்படப் பலரிடம் ஆலோசனை நடத்தி இப்பதவிக்கான அடிப்படை வரைமுறைகளை உருவாக்கியுள்ளது .

இந்நிலையில் இக்குழுவின் பரிந்துரைகளை இன்று ஏற்றுக்கொண்ட மத்திய அமைச்சரவைக் குழு முப்படைகளுக்குத் தலைமை தளபதியை நியமிப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தலைமை தளபதியாகப் பொறுப்பு வகிப்பவர் நான்கு நட்சத்திரங்கள் பெற்ற தளபதியாக இருப்பார். ராணுவ விவகாரத் துறைத் தலைவராகவும் செயல்படுவார் என்று தெரிவித்துள்ளார்.
”ராணுவ விவகாரத் துறையின் கீழ் ஆயுதப்படைகள் வரும். தலைமைத் தளபதி இதற்கும் தலைமை தாங்குவார் என்று கூறப்படுகிறது. முப்படைகள், விஷயங்களில் பாதுகாப்பு அமைச்சரின் முதன்மை ராணுவ ஆலோசகராகத் தலைமை தளபதி செயல்படுவார். இந்த பதவியை விட்டு விலகினால் அவர் எந்த அரசுப் பணிக்கும் தகுதியற்றவராகி விடுவார். 5 ஆண்டுக் காலத்திற்கு முன் அனுமதியின்றி எந்தவொரு தனியார் வேலைவாய்ப்பையும் அவர் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாக ஏ.என்.ஐ ஊடகம் தெரிவித்துள்ளது.
எனினும் தலைமை தளபதி யார் என்று அறிவிக்கப்படவில்லை. தற்போதைய ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் டிசம்பர் 31ஆம் தேதி பதவி ஓய்வு பெறுகிறார். எனவே அவர் தலைமை தளபதியாக நியமிக்கப்படலாம் என்ற ஒரு தகவலும் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக