திங்கள், 30 டிசம்பர், 2019

மாவுக்கோலத்தால் கூட மத்திய அரசு காயம்படக் கூடாது என அதிமுக அரசு.... கோல போராட்டம் வீடியோ


தினகரன் : சென்னை: மாவுக்கோலத்தால் கூட மத்திய அரசு காயம்படக் கூடாது எனக் காக்கும் கொத்தடிமை அதிமுக அரசு என்று மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு தமிழகத்தில் ஆளும் அதிமுக நாடாளுமன்றத்தில் ஆதரவு அளித்தது. ஆனால் திமுக இதற்கு எதிராக வாக்கு அளித்தது. இந்த சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் திமுக சார்பாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த 23 ஆம் தேதி அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து திமுக சென்னையில் பேரணி நடத்தியது.
இதுதொடர்பாக 8,000 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. தற்போது, CAA,NRCக்கு எதிராக கோலப் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
சென்னையில் கோலம் வரைந்த பெண்கள் 5 பேர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்லாது, இன்று அவரது ஆழ்வார்ப்பேட்டை, கோபாலபுர இல்லங்களில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும், என்.ஆர்.சி.க்கு எதிராகவும் கோலங்கள் வரையப்பட்டிருந்தன.

இதேபோன்று திமுக மகளிரணி செயலாளர் கனிமொழியின் இல்லத்திலும் குடியுரிமை சட்ட திருத்தம் மற்றும் என்.ஆர்.சி.க்கு எதிராக கோலம் வரையப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதும் திமுகவினர் கோலங்களை வரைந்து #DMKkolamProtest என்ற ஹேஷ்டேக்கில் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை பெசன்ட் நகரில் CAAக்கு எதிராக கோலமிட்டு கைதான 5 பெண்கள் உள்பட 6 பேர், அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினர். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், மாவுக்கோலத்தால் கூட மத்திய அரசு காயம்படக் கூடாது எனக் காக்கும் கொத்தடிமை அதிமுக அரசால் வழக்குப் பதிவு செய்யப்பட்ட இளைய சமுதாயத்தினர் என்னை சந்தித்தனர். ஒரு கோலத்தை அழிக்க இந்த அலங்கோல ஆட்சி முயன்றது. இதோ தமிழ்நாடே போர்க்கோலம் வரைகிறது. எடப்பாடி அரசுக்கு நன்றி!, என கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக