திங்கள், 30 டிசம்பர், 2019

திமுகவின் வெற்றியை தன் வியாபார கணக்கில் சேர்க்க துடிக்கும் பிரசாந்த் கிஷோர்

ஸ்டாலின், பிரசாந்த் கிஷோர்பிரசாந்த் கிஷோரின் `பிப்ரவரி புரோகிராம்!’ -அறிவாலயத்தை அலர்ட் செய்த ஸ்டாலின் குடும்பம் VikatanExclusive ஆ.விஜயானந்த் - விகடன் : வரக்கூடிய தேர்தலில் நாம்தான் வெற்றி பெறப் போகிறோம். நம்முடைய வெற்றியை அவர்களின் ஃபுரபைலில் சேர்த்துக்கொள்வார்கள். இதற்காக இவ்வளவு தொகை செலவு செய்ய வேண்டுமா?
`தேர்தல் வித்தகர்’ பிரசாந்த் கிஷோர் வருகையால் உடன்பிறப்புகள் மத்தியில் உள்ள அச்சம் இன்னும் அகலவில்லை. `உங்கள் கட்சியின் கட்டமைப்பில் தலையிட மாட்டோம் என பி.கே தரப்பில் உறுதியாகக் கூறிவிட்டனர். பிப்ரவரி முதல் வாரத்திலிருந்து தேர்தல் பணிகள் தொடங்க உள்ளன’ என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தில்.
சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தி.மு.க தலைவர் ஸ்டாலின் வீட்டில் வைத்து பிரசாந்த் கிஷோருடன் தேர்தல் ஒப்பந்தம் போடப்பட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த ஒப்பந்தம் கையொப்பமான அன்று பிரசாந்த் கிஷோர் நிறுவனத்தின் பிரநிதிநி மட்டுமே உடன் இருந்தார். தி.மு.க பொருளாளர் துரைமுருகன், முதன்மை நிலையச் செயலாளர் டி.ஆர்.பாலு, கனிமொழி எம்.பி, ஆர்.எஸ்.பாரதி, கே.என்.நேரு ஆகியோரும் வந்திருந்தனர். இந்த ஒப்பந்தத்தால் தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் பலரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

`இனி வரும் நாள்களில் தலைமைக்கு அடுத்தபடியாக பிரசாந்த் கிஷோர் இருப்பார். அவர் சொல்வதுதான் கணக்காக இருக்கப் போகிறது. நமக்கெல்லாம் இனி எந்த வேலையும் இல்லை’ என மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் பேச்சுகள் கிளம்பின. இதையடுத்து, ஒப்பந்தம் கையொப்பமான அன்று ஸ்டாலின் வீட்டில் இருந்த கே.என்.நேருவிடம், மாவட்டச் செயலாளர்கள் பலரும் தங்களுடைய சந்தேகத்தைக் கேட்கத் தொடங்கினர். அவர்களுக்குப் பதில் அளித்த நேருவும், `தேர்தலில் வெற்றி பெற்று நாம்தான் மந்திரியாக இருக்கப் போகிறோம். நம்மை வெற்றி பெற வைக்கத்தான் பிரசாந்த் கிஷோர் வந்திருக்கிறார். தேர்தல் முடிந்ததும் அவர் கிளம்பிவிடுவார். எனவே, இந்த ஒப்பந்தத்தைப் பற்றி யாரும் பயப்பட வேண்டிய அவசியமில்லை’ என விளக்கினார். இந்நிலையில், தி.மு.க தலைவர் ஸ்டாலினை முன்னிலைப்படுத்தி வரும் பிப்ரவரி மாதத்திலிருந்து தேர்தல் பணிகளைத் தொடங்க இருக்கிறது பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம். இதுதொடர்பாக நம்மிடம் பேசிய அறிவாலய நிர்வாகிகள் சிலர், “தமிழகம் முழுவதும் கழகத்தின் கட்டமைப்பு வலுவாக இருக்கிறது. ஏற்கெனவே, ஒரு டீம் சிறப்பாக வேலை பார்த்து வந்தது. அந்த டீம்தான், சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் பல வித்தியாசமான பிரசார முறைகளை முன்னெடுத்தது. இதன்மூலம் இளைஞர்கள் கூட்டத்தின் நம்பிக்கைக்குரியவராக ஸ்டாலின் பார்க்கப்பட்டார். இப்படிப்பட்ட சூழலில், ஐபேக் நிறுவனத்துக்குப் பணிகளைக் கொடுத்ததில் சீனியர்கள் பலருக்கும் உடன்பாடில்லை. `மாவட்டச் செயலாளர்களே சிறப்பான முறையில் செயலாற்றி வருகின்றனர். அவர்களை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு தனியார் நிறுவனத்திடம் பணிகளை ஒப்படைப்பது எந்த வகையிலும் சரியானதல்ல. வரக்கூடிய தேர்தலில் நாம்தான் வெற்றி பெறப் போகிறோம். நம்முடைய வெற்றியை அவர்களின் ஃபுரபைலில் சேர்த்துக்கொள்வார்கள். இதற்காக இவ்வளவு தொகை செலவு செய்ய வேண்டுமா. அந்த நிறுவனத்தின் ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்றெல்லாம் கோபத்தை வெளிப்படுத்தினர். ஆனாலும், தலைமையின் முடிவுக்கு எதிராகப் பேசுவதற்கு யாரும் முன்வரவில்லை.
தவிர, தேர்தல் பணிகளுக்காக முதல்கட்டமாக ரூ.20 கோடியை பிரசாந்த் கிஷோர் நிறுவனத்துக்குத் தர உள்ளனர். தேர்தல் வெற்றிக்குப் பிறகு மீதமுள்ள பணத்தைச் செட்டில் செய்யவும் திட்டமிட்டுள்ளனர். `இவ்வளவு பெரிய தொகையை தனியார் நிறுவனத்துக்கு வழங்க இருக்கிறார்கள் என்றால், ஆட்சிக்கு வந்ததும் நேர்மையான நிர்வாகத்தைத் தர முடியுமா?’ எனவும் சிலர் கேள்வி எழுப்பினர். ஆந்திர முதல்வர் ஜெகனின் குடும்பம் நம்பிக்கை கொடுத்ததன் அடிப்படையிலேயே இந்த ஒப்பந்தத்துக்குச் சம்மதம் தெரிவித்தார் ஸ்டாலின். ஒப்பந்தம் கையொப்பமான அன்று டிராக் சூட் சகிதமாக ஐபேக் பிரதிநிதி ஒருவர் வந்திருந்தார். அவரது தோற்றத்தைப் பார்த்து சீனியர்களே மிரண்டு போனார்கள். இந்த ஒப்பந்தம் கையொப்பமான பிறகு சில நாள்களுக்குப் பிறகே ஸ்டாலினை நேரில் சந்தித்தார் பிரசாந்த் கிஷோர்” என்கின்றனர் விரிவாக. < “அறிவாலயம் மேற்கொண்டு வந்த பணிகளை பிரசாந்த் கிஷோரின் நிறுவனம் எடுத்துச் செய்யத் தொடங்கிவிட்டது. அடுத்த ஓராண்டுக்கான அசைன்மென்டைத் தயாரிக்கும் பணியில் ஐபேக் நிறுவனம் இறங்கிவிட்டது. வரும் பிப்ரவரி முதல் வாரத்திலிருந்து அவர்கள் களமிறங்க உள்ளனர். `முக்கியமான புரோகிராம் தொடங்க இருக்கிறது. பிப்ரவரி தொடக்கத்தில் அனைவரும் தயாராக இருங்கள்’ எனத் தி.மு.க குடும்பத்திலிருந்து சில முக்கிய நிர்வாகிகளுக்குத் தகவல் சென்றுள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தலுக்காகத்தான் பிரசார முறைகளை வகுத்துள்ளனர். இதுவரையில் இல்லாத வகையில் புதுமையான முறையில் தேர்தல் பணிகளைத் தொடங்க இருக்கிறது ஐபேக்” என்கின்றனர் தி.மு.க நிர்வாகிகள் சிலர். `சட்டமன்றத் தேர்தலில் ஐபேக் நிறுவனம் பரிந்துரைக்கும் நபருக்கே சீட்; தேர்தல் செலவுகள், பணிகள், புள்ளி விவரங்கள், அடிப்படைக் கட்டமைப்பு, பவர் சென்டர்’ என ஐபேக் நிறுவனத்தின் ஆதிக்கம் தொடங்கிவிட்டதை அதிர்ச்சியோடு கவனித்துக்கொண்டிருக்கிறார்கள் மாவட்டச் செயலாளர்கள். />vikatan.com<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக