செவ்வாய், 31 டிசம்பர், 2019

தமிழக அகதிகள் முகாமில் வாழும் ‘நாடற்ற இந்தியத் தமிழர் ‘, குடியுரிமை.

Subaguna Rajan : தமிழக அகதிகள் முகாமில் வாழும் ‘நாடற்ற இந்தியத் தமிழர் ‘, குடியுரிமை.
இந்துத்துவ ராஷ்ட்ரா உருவாக்கும் அவதியின் வடிவமான இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கெதிரான போராட்டங்களில், தமிழ்நாட்டின் குரலில் இருந்த ஒரு மாறுபாடு, இலங்கைத் தமிழர் குடியுரிமை தொடர்பிலானது. ‘இந்துக்கள்’ எனும் வகையில் அடங்கங்கூடியவர்களான இவர்களை ஏன் ஒதுக்குகிறீர்கள் என்பது கேள்வி.
நான் மிகவும் மதிக்கும் ‘உடன்பிறப்புப் ‘பதிவர் ஒருவர் உட்படப் பலர் இலங்கைத் தமிழர்கள் பிரச்னையை ஏன் இழுக்கிறீர்கள், ‘அவர்கள் யாரும் இங்கே குடியுரிமை பெறத் தவிப்பதில்லையே ‘என்பது அவர்கள் வாதம். இலங்கைத் தமிழரைப் பொறுத்தவரை அவர்களது விருப்பம் அகதி நிலையை வைத்து ஐரோப்பியா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளின் குடியுரிமை பெறுவதுதான் என்றார்கள்.
என்னிடமும் ஆதாரமான தரவுகள் இல்லாததால் சற்றுக் குழம்பித்தான் போனேன். முகாம் மற்றும் வெளியே இருக்கும் தோழர்களிடம் இதுபற்றிய ஆதாரப்பூர்வமான தகவல்களை பெற முயன்றேன். அப்போதுதான் தோழர் காமராஜ் அவர்கள் பின்னூட்டத்திலுள்ள காணொலிப் பதிவையும், இலங்கை மலையகத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சடகோபன் எழுதிய ‘மலையகமும் மறுவாழ்வும் ‘ என்ற நூலைப் பற்றிய தகவலையும் பகிர்ந்து கொண்டார்.

இந்தக் காணொலிகள் மற்றும் தகவல்கள் நம்மை அதிரச் செய்கின்றன. ஏற்கனவே சில செய்திகளை தெரிந்து வைத்திருந்ததனால் ஓரளவு இதனை விளங்கிக் கொள்ள முடிந்தது. தகவல் கொஞ்சம் தாமதமானதால் , குடியுரிமை குறித்த எனது ‘உயிர்மை ‘ கட்டுரையில் இந்தப் பதிவினை இணைக்க முடியவில்லை. இனியொரு முறை அதனை விரித்து எழுதுவேன்.
சிரீமாவோ- சாஸ்திரி ஒப்பந்தத்தில் ‘நாடற்றவர்களாக ‘இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்ட மலையகத் தமிழரில் ,ஒரு சிறு கூட்டம் இந்தியாவில் எங்கே போவது என்ற அச்சத்தில் இலங்கையின் தமிழ்ப் பகுதிகளான வடகிழக்கிற்குப் பெயர்ந்தனர். அங்கும் அவர்கள் பெரும் வரவேற்பை பெறவில்லை. அங்கேயும் நாடற்றவர்கள் நிலையிலேயே கூலிகளாகத் தொடர்ந்தனர்.
( இவர்களில் கணிசமான இளைஞர்கள் ஈழ விடுதலைப் போராட்டங்களிலும் பங்கெடுத்து உயிர்த் தியாகம் செய்தனர். இது குறித்த , ஊனமுற்ற நிலையில் அங்கேயே இன்னும் வாழும் போராளிப் பெண் ஒருவரின் நேர்காணலை சமீபத்தில் ‘ ஊடாட்டம் ‘ குழுவினர் காட்சிப்படுத்திய ஆவணப்படமொன்றில் கண்டேன் )
தொன்னூறுகளில் ஈழப் போரின் கடுமை கூடியபோது, இந்த ‘நாடற்ற மலையக தமிழர்/ இந்தியத் தமிழர்கள் ‘ இறுதியாக இந்திய முகாம்களை வந்தடைந்தனர்.
இப்போதைய இலங்கைத் தமிழர் அகதிகள் முகாமிலுள்ள ஒன்றரை லட்சம் பேரில் இவர்களின் எண்ணிக்கை முப்பதாயிரம். இவர்களின் ஒரே கோரிக்கை இந்தியக் குடியுரிமை.
திரு. சடகோபன் தனது நேர்காணலில் சொல்கிறார், ‘ நீங்கள் இந்தியாவில் வாழ்கிறீர்கள் ,ஆனாலும் நீங்கள் தமிழர்கள் என்றே அழைக்கப்படுகிறீர்கள். எங்கள் மக்கள் இருநூறாண்டு காலமாக இந்தியத் தமிழர் என்ற அடையாளத்தால் மட்டுமே அறியப்படுகிறோம். இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினான எனது சான்றிதழும் என்னை இலங்கைக் குடியுரிமை கொண்ட இந்தியத் தமிழன் என்றே குறிப்பிடுகிறது. எனவே உலகிலேயே ‘இந்தியத் தமிழர் ‘ என்று அழைக்கப்படும் எங்கள் மக்களில் , இந்திய முகாமிலுள்ளோருக்கு , அவர்களது கோரிக்கையான இந்தியக் குடியுரிமை கொடுப்பதுதானே நீதி ‘ என்கிறார்.
இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் இவர்களுக்கு இழைத்திருக்கும் அநீதி கொடுமையானது. இவர்களிற்கான குடியுரிமை நிவாரணத்திற்கான கோரிக்கையையும் , நம் போராட்டங்களில் இணைத்துக் கொள்வோம்.
காலனியம் தென்னாசியாவில் உருவாக்கிய மனித அவலங்கள் ஏராளம். காலனியம் குறித்த வாசிப்பு தேர்வு செய்ததாக இருக்கும் பட்சத்தில், அந்த வாசிப்பின் வழியான கருத்தமைவுகளும் முழுமையற்றதாகவே இருக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக