செவ்வாய், 10 டிசம்பர், 2019

டான் அசோக் : இதை விட என்னடா உங்களுக்கு புரிஞ்சுக்க வேணும்?

Don Ashok : · பெண்களையும், தமிழர்களையும் கேவலப்படுத்தி சங்கராச்சாரி எழுதிய தெய்வத்தின் குரல், திராவிட மாயை, 'ஸ்டாலினை தோற்கடிப்பார் ரஜினி' என்கிற அர்ஜூன் சம்பத்தின் முனகல், தயிர்சோறு, பூணூல் இதெல்லாம்தான் தமிழகத்தின் கலாச்சாரமாம். இப்படி ஒரு விளம்பரத்தை 'நம்ம தமிழ்நாடு' என்கிற பெயரில் வெளியிட்டுள்ளது டைட்டன் வாட்ச் நிறுவனம். எவனோ சங்கி டைட்டன் காசில் தம்பிராஸுக்கு (தமிழ்நாடு பார்ப்பனர் சங்கத்துக்கு) விளம்பரம் செய்திருக்கிறான். அதனால்தான் இன்று மானமுள்ள தமிழர்கள் இந்திய அளவில் #BoycottTitanWatches என்கிற ஹேஷ்டேகில் ட்ரெண்ட் செய்கிறார்கள். டிவிட்டரில் அனைவரும் இந்த Tagகைப் பயன்படுத்தி ட்விட் போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
 
உத்திரபிரதேசத்தின் உன்னாவ் நகரில் போன டிசம்பர் மாதம் பாஜக தலைவர் ஒருவர் தன் சகாக்களுடன் சேர்ந்து துப்பாக்கி முனையில் ஒரு 17 வயது சிறுமியை வன்புணர்வு செய்கிறார். போலீஸ் ஸ்டேஷனில் கேஸ் எடுத்துக்கொள்ளப்படவில்லை. FIR போடப்படவில்லை. பின்னர் சிலர் உதவியுடன் நீதிமன்றத்தின் மூலம் ஆணை வாங்கி ஒருவழியாக மார்ச் மாதம், அதாவது நான்கு மாதம் கழித்து வழக்கு பதியப்படுகிறது. பின்னர் அந்தப் பெண்ணின் தந்தை கொல்லப்படுகிறார். உதவிய உறவினர்கள் கொல்லப்படுகிறார்கள். பின்னர் அந்தப் பெண் எரித்துக் கொல்லப்படுகிறார்.

இதேபோல நேற்றும் வன்புணர்வில் பாதிக்கப்பட்ட இன்னொரு பெண்ணையும் அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் எரித்திருக்கிறார்கள். 90% தீக்காயங்களுடன் அந்தப் பெண்ணும் சற்றுமுன் இறந்துவிட்டார்.
வன்புணர்வு மற்றும் கொலைகளின் தலைநகரமாக உத்திரபிரதேசம் திகழ்கிறது.
வன்புணர்வு வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக மட்டும் செய்யப்பட்டதல்ல. பாஜககாரர்கள் இந்த உன்னாவ் பெண்ணை வைத்து ஊருக்கே பாடம் நடத்தியிருக்கிறார்கள். "நாங்கள் அப்படித்தான் செய்வோம். எங்களைப் பற்றி புகார் செய்தால் இதுதான் நிலைமை," என்கிற எச்சரிக்கைப் பாடத்தை நடத்தியிருக்கிறார்கள்.
அதேநாள் ஹைதரபாத்தில் ஒரு டாக்டரை வன்புணர்வு செய்து எரித்துக்கொன்ற நால்வர் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். ஊரே அந்தக் கொலைகளைக் கொண்டாடுகின்றது. நிற்க.
அந்த நால்வர் உயர்சாதி அரசியல்வாதிகளாக இருந்திருந்தால்? அதிலும் பாஜககாரர்களாக இருந்திருந்தால்? எரித்துக் கொல்லப்பட்ட டாக்டரின் உறவினர்கள் எரித்துக் கொல்லப்பட்டிருப்பார்கள்.
சார். இந்த நாட்டில் நீதி கிடைத்துவிட்டதென நீங்கள் கொண்டாடுவதற்கோ, மகிழ்வதற்கோ எதுவுமே இல்லை. குற்றவாளிகள் சமூகத்தின் எல்லா அடுக்குகளிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறார்கள். ஆனால் தண்டனைகளும், எண்கவுண்டர்களும் கீழடுக்குகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
இந்த நாட்டின் நீதி எப்படி இருக்கிறது தெரியுமா? ஒருவேளை நாளை நம் உறவினரில், அறிந்தவர் தெரிந்தவரில் ஏதேனும் ஒரு பெண்ணுக்கு ஏதாவது நேர்ந்தால் குற்றமிழைத்தவன் சமூகத்தின் கீழடுக்கைச் சேர்ந்தவனாக இருக்க வேண்டும் என வேண்டிக் கொள்ளவேண்டும். அப்போதுதான் நீதி கிடைக்கும். இல்லையென்றால் மீதமிருப்போரும் போய்ச்சேர வேண்டிதுதான். பாரத் மாதா கீ ஜே!!!
-டான் அசோக்
டிசம்பர் 7, 2019

ஜெயலலிதா சிறைக்குப் போனபோது "உயிரே போச்சு" என்பதைப் போல அலறியவன், 'காவிரிய வச்சுக்க அம்மாவ கொடு" என கவிதை வாசிச்சவன், மண்சோறு தின்றவன், போராட்டம் செய்வதவன் எவனும் அவர் எப்படிச் செத்தார் என்பதைப் பற்றி கவலைப்படவே இல்லை. அவர் காலடியில் கிடந்த அடிமைகள் எல்லோரும், தர்மயுத்தம் நடத்திய ரேங்க்1 அடிமை உட்பட, கட்சியை பாஜகவுக்கு பட்டா போட்டுக் கொடுத்துவிட்டார்கள். உலகிலேயே தன் தலைவி எப்படிச் செத்தார், எப்போது செத்தார் என்பதைப் பற்றித் தெரியாத/கவலைப்படாத/கண்டுகொள்ளாத ஒரே கட்சி அதிமுகவாகத்தான் இருக்கும். நிற்க.
ஜெயலலிதா வாழ்க்கையில் இருந்து கற்றுக்கொள்ள ஒன்றுமில்லை. ஆனால் மரணத்தில் நிறைய பாடங்கள் உள்ளன. நீங்கள் இருக்கும் அறையில் உங்களுக்குப் பரிமாறப்படும் மரியாதையையும், அன்பையும் வைத்து உங்கள் வாழ்க்கையை மதிப்பிடமுடியாது. நீங்கள் இல்லாத அறையிலும் அவை பரிமாறப்படுகிறதா என்பதை வைத்தே உங்கள் வாழ்வை அளவிடமுடியும். அந்த வகையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை அவர் எதிரிகள் கூட அவருக்கு நினைக்காத மிகப்பெரும் கொடுமை.
-டான் அசோக்
டிசம்பர் 5

எனக்கு ஒரு நண்பன் இருக்கிறான். பரிசுத்தமான நடுநிலை குமார். ஆம் ஆத்மியில் இருந்தான். பின்னர் மக்கள்நலகூட்டணி. பின்னர் நாம் தமிழர். சமீபத்தில் கமல் ஆதரவாக இருந்தான். கமலும் கவ்விக் கொண்டுபோனபின் இப்போது சுயமாக ஏதேதோ உள்ளூர் பணிகளைச் செய்கிறான். அடிப்படையில் நல்லவன்தான். மாற்று அரசியலில் மிகுந்த ஆர்வமுடையவன். சாதிபார்த்து வேட்பாளர்களை நிறுத்துவதெல்லாம் அவனுக்கு சற்றும் பிடிக்காத விஷயம். அதற்காக என்னிடம் பல நேரங்களில் சண்டை போடுவான். இதனாலேயே திராவிடக் கட்சி ஒவ்வாமை மிகுந்தவன். இப்போது உள்ளாட்சித் தேர்தலில் சுயேட்சையாக நிற்க முடிவுசெய்துவிட்டான். முடிவுசெய்தபின் அவன் செய்த முதல் வேலை வாக்காளர் லிஸ்ட்டை எடுத்து, "கோனார் ஓட்டு இவ்வளவு, முஸ்லிம் ஓட்டு இவ்வளவு, வல்லம்பர் ஓட்டு இவ்வளவு, பறையர் இவ்வளவு," என பட்டியல் போட்டுக் கணக்குப் போட்டதுதான். அவனை நான் குறை சொல்லவில்லை. அவன் வெற்றிபெற்றால் நல்லதுதான். மக்களோடு மக்களாக நிற்பான். நல்லது செய்வதற்கு வெற்றி முக்கியம். அதிகாரம் முக்கியம். நடைமுறை அரசியல் போட்டியில் வலுவாக நிற்பது முக்கியம். அதை இப்போதாவது புரிந்துகொண்டிருப்பான். நிற்க.
இப்படி ஒரு சுயேட்சை கவுன்சிலர் வேட்பாளரே யோசிக்கும்போது ஆட்சிக்கு வர தகுதியான கட்சிக்கு எவ்வளவு அழுத்தமும் அரசியலும் இருக்கும். ஆனாலும் தயங்காமல், பத்து பர்சண்ட் வாக்கு இல்லாத கட்சித்தலைவர்கள் கூட "மழையால் விழுந்த சுவர்," என கடந்துபோகும்போது, அதைத் தீண்டாமைச் சுவர் எனச் சொல்லி விவாதம் ஆக்கியவர் திரு.மு.க.ஸ்டாலின். இல்லையென்றால் இந்த விஷயமும் காற்றோடு போயிருக்கும். ஆனால் அரசியல் பார்க்காமல், எந்த கணக்கையும் போடாமல் மக்களின் துயரைப் பார்த்த ஒரு தலைவரைப் பாராட்ட மனமில்லாமல் அவர் டிவீட்டுகளை நோண்டிக் கொண்டிருக்கிறது ஒரு மானங்கெட்ட சங்கிக் கும்பல். அதற்கு வழக்கம்போல் பாஜகவின் தலித் முகாமான பகுஜன் சமாஜும், 'தமிழ்ச்சங்கிகளாம்' நாம் தமிழர் கட்சித் தம்பிகளும் கூட்டு!!! இப்படி எல்லா அநியாயங்களின்போதும் கவனத்தைத் திசை திருப்பும் இந்தச் கூட்டின் சூட்டில் குளிர்காய்கிறது எடப்பாடியின் குற்றவாளி அரசு. வெட்கமாக இல்லை?
ஒரு அரசு ஏதேச்சிகாரத்தனமாக நடக்கும்போது அதற்கு மக்கள் பயப்படலாம். ஆனால் அரசியல்வாதிகளும், போராளிகளும், ஊடகங்களும் பயப்படக்கூடாது. பயந்தால் கருத்தே சொல்லக்கூடாது. அதைவிட்டுவிட்டு எடப்பாடி அரசு என்ற பெயரும் இல்லாமல், போலீஸைச் சாடாமல், அதிகாரத்தில் உள்ள யாரையும் சாடாமல், தனித்துத்தொகுதி அரசியல்வாதிகள்தான் காரணம் என புது ரூட் போடுவது, எடப்பாடிக்கு வலிக்காமல் தடவிக்கொடுப்பது, "மழையால் ஏற்பட்ட சுவர் விபத்து" எனச் சொன்ன பாஜகவையோ, கமலையோ விட்டுவிட்டு, முதன்முதலில் அதைத் "தீண்டாமைச்சுவர்" எனப் பேசிய எதிர்க்கட்சித் தலைவரின் ட்வீட்களில் ஆராய்ச்சி நடத்துவது, இதெல்லாம் அப்பாவித்தனம் இல்லை, அயோக்கியத்தனம்! இன்னும் என்னவெல்லாம் செய்கிறீர்கள், யாருக்காக உழைக்கிறீர்கள், அதற்காக என்னவெல்லாம் வேடம் போடுகிறீர்கள் என மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
-டான் அசோக்
டிசம்பர் 4, 2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக