வெள்ளி, 27 டிசம்பர், 2019

பிபின் ராவத் கருத்து: பாகிஸ்தான் வழியில் இந்தியாவா?

பிபின் ராவத் கருத்து: பாகிஸ்தான் வழியில் இந்தியாவா?மின்னம்பலம் : ராணுவத் தளபதி பிபின் ராவத்தின் கருத்துக்கு மார்க்சிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் என்ஆர்சிக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள், மாணவர்கள் எனப் பல தரப்பினரும் தொடர்ச்சியாகப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்திய ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத், “குடியுரிமை திருத்தச்சட்ட விவகாரத்தில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். இதனைச் செய்பவர்கள் சரியான தலைவர்கள் அல்ல” என்று கருத்து தெரிவித்திருந்தார்.
ராணுவத் தளபதி ஒருவர் அரசியல் கருத்து கூறுவது இதுதான் முதல் முறை என்ற நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சிகள், பிபின் ராவத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, “ராணுவத் தலைவர் பிபின் ராவத்தின் கருத்துக்கு மார்க்சிஸ்ட் பொலிட் பீரோ வன்மையான கண்டனங்களைத் தெரிவிக்கிறது. தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவற்றை எதிர்த்து நாடு முழுவதும் போராடிவரும் மாணவர்களுக்கு ராணுவ ஜெனரல் நேரடியாகவே கண்டனம் தெரிவித்துள்ளார். உயர் பதவியில் இருக்கும் சீருடை அதிகாரி தனது நிறுவனத்தின் கட்டுப்பாட்டை மீறி பேசுவது மோடி அரசின் கீழ் நிர்வாகம் எவ்வாறு சீரழிந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. இதனால் ராணுவம் அரசியல் பற்றிப் பேசும் பாகிஸ்தான் வழியில் இந்தியா செல்கிறதா என்று கேள்வி எழுப்ப வேண்டியது அவசியமாகிறது” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகப் போராட்டங்கள் தொடர்பாக உயர்மட்ட ராணுவ அதிகாரி கருத்து கூறுவது என்பது சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே கேள்விப்படாதது என்று கூறியுள்ள சீதாராம் யெச்சூரி, “நாட்டின் அரசியலமைப்பில் மிகவும் மோசமான மாற்றங்களை ஏற்படுத்திய ராணுவ ஜெனரல் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இத்தகைய விதிமீறலைக் கருத்தில் கொண்டு ராணுவ ஜெனரல் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியலில் ராணுவம் தலையிடுவதை எதிர்த்து அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக