திங்கள், 2 டிசம்பர், 2019

மகாராஷ்டிராவில் 80 சதவீத வேலை வாய்ப்பு உள்ளூர் இளைஞர்களுக்கே ...- மகராஷ்டிரா அரசு அறிவிப்பு

கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை உத்தவ் தாக்கரே பூங்கொத்து கொடுத்து வரவேற்றபோது எடுத்தபடம்.மாலைமலர் : தனியார் நிறுவனங்களில் உள்ளூர் இளைஞர்களுக்கு 80 சதவீத வேலை வாய்ப்பு வழங்கப்படும் என சட்ட சபை கூட்டு கூட்டத்தில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அறிவித்தார். மும்பை மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் ‘மகா விகாஷ் முன்னணி' அரசு அமைந்து உள்ளது.
இந்த நிலையில், நேற்று விதான்பவனில் சட்ட சபையின் கூட்டு கூட்டம் நடந்தது. இதில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி கலந்து கொண்டு மராத்தியில் உரையாற்றினார். அவர் தனது உரையில் கூறியதாவது:-
மகாராஷ்டிராவில் வேலைவாய்ப்பின்மை பிரச்சினையில் ‘மகா விகாஷ் முன்னணி' அரசாங்கம் அக்கறையுடன் செயல்படும். தனியார் நிறுவன வேலை வாய்ப்பில் மண்ணின் மைந்தர்களுக்கு 80 சதவீத இடஒதுக்கீடு கிடைப்பதற்கு வழிசெய்யும் வகையில் சட்டம் இயற்றப்படும். மாநிலத்தில் மலிவு விலை உணவகங்கள் திறக்கப்பட்டு சாமானிய மக்களுக்கு 10 ரூபாயில் சாப்பாடு வழங்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் கட்டப்படும்.

மாநிலத்தின் பொருளாதார உண்மை நிலை குறித்து விரைவில் அறிக்கை வெளியிடப்படும். அதில் பெருளாதார நிலை மற்றும் தற்போதைய நிதிநிலைமைகள் குறித்து விரிவாக தெரிவிக்கப்படும். ஒரு ரூபாய் கிளினிக்குகள் திறக்கப்படும்.
34 மாவட்டங்களில் 349 தாலுகாக்களில் பருவம் தவறி பெய்த மழையால் பயிர்கள் நாசம் அடைந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

விவசாயிகளின் துயரை துடைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும் இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். முற்போக்கு சமூகம் மக்களுக்கான வாய்ப்பை வழங்குகிறது.

அதன் அடிப்படையில் பெண்களுக்கு இலவசமாக உயர்கல்வி வழங்க இந்த அரசாங்கம் முயற்சி எடுக்கும். உழைக்கும் பெண்களுக்கு ஒவ்வொரு மாவட்டங்களில் விடுதிகள் கட்டவும் நடவடிக்கை எடுக்கும். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் முதலீடுகளை அதிகளவில் ஈர்ப்பதற்கு இந்த புதிய அரசாங்கம் கொள்கையை வகுக்கும்.

மற்ற தொழில்துறைகளிலும் அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பிளாஸ்டிக் தடையை தீவிரமாக அமல்படுத்த இந்த அரசாங்கம் முழுமுயற்சியுடன் செயல்படும். நிலுவையில் இருக்கும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் மற்றும் மற்ற சமுதாயத்தினர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கவர்னர் தனது உரையில் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக