vikatan.com - arundhathi :
வரும் டிசம்பர் 30-ம் தேதி நடைபெறவுள்ள இந்தத் திருமணமானது முதல் முறையாக ஓர் அரசாங்க முதியோர் இல்லத்தால் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
லட்சுமி அம்மாள், கோச்சானியன்..
b>“மாய நதி இன்று மார்பில் வழியுதே… தூய நரையிலும் காதல் மலருதே…”
இந்த அழகான பாடல் வரிகளுக்கு எடுத்துக்காட்டு போல கடவுளின் தேசமான கேரளாவில் மலர்ந்துள்ளது இந்தக் காதல்!
காதலுக்கு மொழி, சாதி, மதம் என்று எதுவும் கிடையாது. காதலில் வயதுகூட
வெறும் எண்தான் என்பதை நிரூபித்துள்ளது 66 வயதான கோச்சானியன் மற்றும் 65
வயதான லட்சுமி அம்மாளின் இருபது வருடக் காதல் கதை. மேலும், தற்போது நடைபெற
உள்ள திருமணம் மூலம் காதலர்களாக இருந்த இவர்கள் தம்பதிகளாக
மாறப்போகிறார்கள்.
கேரளா, திருச்சூரில் உள்ள தைக்கட்டுசேரியைச் சேர்ந்தவர் லட்சுமி
அம்மாள். இவரின் கணவர் கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவர்
இறக்கும் தறுவாயில் தன் உதவியாளராக பணியாற்றிய கோச்சானியனை அழைத்து ஆதரவு
இல்லாத லட்சுமி அம்மாளைக் கடைசிவரை பார்த்துக் கொள்ளும்படி
வேண்டிக்கொண்டாராம்.
கோச்சானியனும் தன் முதலாளியின் கடைசி ஆசையை நிறைவேற்றும் விதமாக லட்சுமி
அம்மாளை அன்பாகக் கவனித்து வந்துள்ளார். பின்னாளில் இந்த அன்பு காதலாக
உருவெடுத்தது. ஆனால், இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. மனதிலேயே
காதலை வளர்த்துவந்தனர்
ஆண்டுகளும் ஓடின… வயதான லட்சுமி அம்மாள் சரியாகக் கவனிக்கப் பட வேண்டும்
என்பதற்காக ராமவர்மாபுரத்தில் ஒரு முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில், கோச்சானியன் தனது வேலையின் ஒரு பகுதியாக வெளியூர்
சென்றிருந்தபோது கோழிக்கோட்டில் ஒரு தெருவில் மயக்கமடைந்து விழுந்துள்ளார்.
இதை அறிந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று அவரை வயநாட்டில் உள்ள முதியோர்
இல்லத்தில் தங்க வைத்தது. பின்பு அவரின் விலாசம் அறிந்து அவரை லட்சுமி
அம்மாள் தங்கியிருந்த முதியோர் இல்லத்துக்கு மாற்றினர்.
அங்கு லட்சுமி அம்மாள், கோச்சானியன் இருவரும் வயதான காலத்தில் ஒருவரை
ஒருவர் அன்பாகக் கவனித்துக்கொண்டனர். இவர்களின் காதல் கதையைப் பற்றி அறிந்த
அந்த முதியோர் இல்லத்தின் கண்காணிப்பாளரான வி.ஜி.ஜெயகுமார் அவர்களுக்குத்
திருமணம் செய்து வைத்து கணவன்-மனைவி என்ற அங்கீகாரம் தர வேண்டும் என்று
முடிவு செய்தார். இதற்காகத் தன் மேலதிகாரிகளுடன் பேசி சம்மதம் பெற்ற
ஜெயகுமார், “இந்தத் திருமணமானது மறக்கமுடியாத விழாவாக இருக்கும்” என்று
கூறியுள்ளார்
சட்டப்படி இது போன்ற திருமணங்களுக்கு அனுமதி கிடையாது. ஆனால்,
மாநிலத்தின் அனைத்து முதியோர் இல்லங்களின் கண்காணிப்பாளர்கள் முன்னிலையில்
நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ஜெயகுமார் இந்தத் திருமணம் பற்றிய பேச்சைக்
கொண்டுவந்தபோது இதுபோன்ற திருமணங்களை ஊக்கப்படுத்த முடிவு எடுக்கப்பட்டது.
இதன்படி வரும் டிசம்பர் 30-ம் தேதி நடைபெறவுள்ள இந்தத் திருமணமானது
முதல் முறையாக ஓர் அரசாங்க முதியோர் இல்லத்தால் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
இது பற்றி கோச்சானியன் கூறும்போது “எங்கள் விருப்பத்தை நனவாக்க
எல்லோரும் எங்களுடன் இணைந்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்”
என்றார்.
மனதோடு காதல் வந்தால் மனிதா தடையேது!
vikatan.com<
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக