சனி, 14 டிசம்பர், 2019

“திருநர் பாதுகாப்பு மசோதா – 2019” பெரும் எதிர்ப்புகளுக்கும், போராட்டங்களுக்குமிடையே நிறைவேற்றப்பட்டுள்ளது

thetimestamil.com :
மு.வி.நந்தினி : பெருந்தன்மையாக நடந்துகொள்ளுங்கள்” – ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கூக்குரலும், பாசிச அரசும்: கனகா வரதன். 
திருநங்கை, திருநம்பி, இடையிலங்க (இன்டர்செக்ஸ்) மற்றும் பல பைனரி அல்லாத பாலின அடையாளங்களை கொண்ட மாற்றுப்பாலின மக்களுக்கான “திருநர் பாதுகாப்பு மசோதா – 2019” அம்மக்களின் பெரும் எதிர்ப்புகளுக்கும், போராட்டங்களுக்குமிடையே இன்று மத்திய அரசால் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இம்மசோதா இப்பொழுது மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது. இந்துத்துவா சித்தாந்தத்துடனும், பிற்போக்கு மனப்பான்மையுடனும் பா.ஜ.க அரசால் கொண்டுவரப்பட்ட இம்மசோதா மாற்றுப்பாலின சமூகத்தின் எந்த ஒரு அடிப்படை கோரிக்கைகளுக்கும் செவிசாய்க்காமல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட தினமான நவம்பர்-26 அன்று நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. குறைந்த பட்சம் தேர்வு குழுவிற்கு அனுப்பி மறுஆய்வு செய்யுங்கள், மக்களின் குறைகளை கேட்டறியுங்கள் என்பதை கூட ஆளும் அரசு ஏற்க தயாராக இல்லை.

மாற்றுப்பாலின மக்களுக்காக தனி நபர் மசோதாவை கொண்டுவந்தவரும், அம்மக்களுக்காக தொடர்ந்து குரலெழுப்புபவருமான திருச்சி சிவா அவர்கள் இன்று பாராளுமன்றத்தில் விடுத்த கோரிக்கை, “பெருந்தன்மையாக நடந்துகொள்ளுங்கள்” என்பதாக இருந்தது. மாற்றுப்பாலின சமுகத்தின் பிரதிபலிப்பாக ஒலித்த அக்குரல் ஒரு கட்டத்தில் வேண்டுகோளாகவும் மாறியிருந்தது. காசுமீர் மாநில உரிமைகள் பறிப்பு முதல் பெரும்பான்மை பலத்தை மட்டுமே வைத்து பாசிச போக்குடன் ஆளும் அரசு கொண்டு வந்த சட்ட திருத்தங்களின் வரிசையில் இன்று திருநர் மசோதாவும் இணைந்துள்ளது.
பெரும் நெருக்கடிகளுக்கிடையே தங்கள் சொந்த பொருளையும், நேரத்தையும், மூலதனங்களையும் செலவு செய்து கிட்டதட்ட கடந்த நான்கு ஆண்டுகளாக இம்மசோதாவிற்கு எதிராக தொடர் சனநாயக போராட்டங்களை மேற்கொண்ட மாற்றுப்பாலின மக்களுக்கும், தோழமை சக்திகளுக்கும் இன்றய தினம் பெரும் மன உளைச்சலை தரக்கூடிய ஒரு கருப்பு நாளாகவே இருக்கும். ஆளும் அரசால் புக்கணிக்கப்பட்ட எல்லா ஒடுக்கப்பட்ட சமூகத்தை போலவும் மாற்றுப்பாலின சமூகமும் ஒரு நீண்ட சட்ட போராட்டத்திற்கு தயாராக வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இந்த மசோதாவில் நிராகரிக்கப்பட்ட, மாற்றுப்பாலின சமுகத்தின் பிரதான கோரிக்கைகளில் சில,
திருநர் நபர்களின் அடையாளத்திற்கான அங்கீகாரம் இந்த மசோதா திருநர் மக்களின் அடிப்படை உரிமையான பாலினத்தை சுய நிர்ணயம் செய்யும் உரிமையை மறுக்கிறது. திருநர் மக்களின் கோரிக்கை எங்கள் சொந்த பாலினத்தை அடையாளம் காண்பது எங்களின் அடிப்படை உரிமை (இது இந்திய அரசமைப்பு வழங்கும் அடிப்படை உரிமை, 21 வது பிரிவின் கீழ் ஒரு பகுதியாக அமைகிறது), இந்த உரிமையை ஒப்புக் கொண்ட உச்சநீதிமன்றம் நல்சா தீர்ப்பிலும், புட்டசாமி தீர்ப்பிலும் இதை அங்கீகரித்து உள்ளது.
நல்சா தீர்ப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள், சுயமாக பாலினத்தை அடையாளம் காணும் உரிமையை வழங்குங்கள். எந்தவொரு அறுவை சிகிச்சை, ஹார்மோன் சிகிச்சை இல்லாமல் பாலினத்தை ஆண், பெண் அல்லது திருநராக சுயமாக அடையாளம் காணும் உரிமையை அங்கீகரியுங்கள். சான்றிதழ்கள் மற்றும் அடையாள ஆவணங்களில் பெயர் மற்றும் பாலின மாற்றத்திற்கான வழிமுறைகள் சுய அடையாளத்தின் அடிப்படையில் அமைந்திடல் வேண்டும்.
இடஒதுக்கீடு இம்மசோதா எந்த ஒரு இடஒதுக்கீட்டையும் வழங்கவில்லை. திருநர் மக்களின் கோரிக்கை இடஒதுக்கீட்டுக்கான எல்லா ஏற்பாடுகளையும் உடனே இந்த மசோதாவில் நிறுவ வேண்டும். பொது மற்றும் தனியார் துறையில், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் திருநர்களுக்கென பிரத்யேக (கிடைமட்ட) இட ஒதுக்கீடு வேண்டும். இந்த இடஒதுக்கீட்டின் விழுக்காடானது திருநங்கைகள், திருநம்பிகள் உள்ளடக்கிய திருநர் மற்றும் இன்டர்செக்ஸ் நபர்களின் மக்கள்தொகைக்கு ஏற்றவாறு தீர்மானிக்கப்பட வேண்டும்.
குற்றங்களும் தண்டனைகளும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் ஒப்பிடுகையில், திருநர் நபர்களுக்கு எதிரான பாலியல் வன்முறை 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை தண்டனை என்று மசோதா கூறுகிறது. இது மாற்றுப்பாலின மக்களுக்கு எதிரான நேரடியான பாகுபாடாகும்.
திருநர் மக்களின் கோரிக்கை மாற்றுப் பாலினத்தவருக்கு எதிரான குற்றங்களுக்கு வழங்கும் தண்டனைகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனைக்கு இணையாக இருந்திடல் வேண்டும்.
குடும்பம் மற்றும் மேம்பாடு
இந்த மசோதாவில் திருநர் குழந்தைகள், அவர்கள் பிறந்த குடும்பத்துடன் வசிக்க வேண்டும் என்று கட்டாயமாக்குகிறது. பிறப்பு குடும்பங்கள் பெரும்பாலும் இந்நபர்களுக்கு எதிரான வன்முறையின் முதல் தளமாக இருந்தாலும் இம்மசோதா அதை முற்றிலும் மறுதலிக்கிறது. அதுமட்டுமின்றி இத்தகைய நிலைமைகளில் இருந்து தப்பிக்க திருநர் நபர்களுக்கு பிற திருநர் சமூக உறுப்பினர்களின் உதவி இருந்தால், சமூக உறுப்பினர்கள் 4 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படலாம் எனவும் வரையறுக்கிறது.
திருநர் மக்களின் கோரிக்கை
பாரம்பரிய ஹிஜ்ரா குடும்பங்கள் மற்றும் திருநங்கை ஜமாத் அமைப்புகளை அங்கீகரித்து சேர்க்க வேண்டும்.
“மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு” என்ற கட்டமைப்பை கைவிட்டு “திறன் மேம்பாடு” திட்டங்கள் மற்றும் மையங்களை அமைத்தல் தேவை. இந்த மையங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி திருநர் ஆணையத்தின் பரிந்துரையின் படி அமைந்திட வேண்டும்.
கனகா வரதன், சமூக செயல்பாட்டாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக