புதன், 25 டிசம்பர், 2019

2019இல் தமிழ் சினிமாவின் நிலை.. 196 நேரடி தமிழ்ப் படங்கள்

மின்னம்பலம் : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் 150 முதல் 200 படங்கள் வரை ரிலீஸ் செய்யப்படுகின்றன. எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் வெற்றி சதவிகிதம் என்பது 20 சதவிகிதத்துக்குள் வருகிறது. இவற்றில் வியாபாரம், வசூல் அடிப்படையில் பார்த்தால் 10 சதவிகிதம் படங்கள் மட்டுமே முழு வெற்றி என்ற இடத்தைப் பிடிக்கிறது.
2019இல் தமிழ் சினிமாவின் நிலை!ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் படம் வெளியானவுடன் அடுத்து வரும் நாட்களில் கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்ததாக சமூக வலைதளங்கள் மூலம் செய்திகளைப் பரவவிட்டு பரவசமடையும் மாய வலைக்குள் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சிக்கிக்கொள்ளும் போக்கு தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்திய சினிமாவில் எந்த மொழியிலும் இல்லாத ட்விட்டர் டிரெண்டிங் என்கிற போதைக்குத் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் நடிகர்களும் அடிமையாகி அதுவே மிகப்பெரும் வெற்றி என்கிற மாய பிம்பத்துக்குள் சென்று விடுகின்றனர்.
சினிமா என்கிற வலிமையான ஊடகத்தின் வெற்றி தோல்வியை சினிமாவைப் பற்றியும், படத்தின் உள்ளடக்கத்தைப் பற்றியும் பத்து வரி கூட எழுத தெரியாதவர்களால் படம் வெளியான அன்றே ‘சினிமா டிராக்கர்ஸ்’ என்பவர்களால் தீர்மானிக்கப்பட்டு அதுவே நிரந்தரம் என்று தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் முடிவுக்கு வருகின்றனர். இதன் நீட்சியாகவே வெள்ளிக்கிழமை வெளியாகும் படத்துக்குத் திங்கட்கிழமை வெற்றி விழாவைக் கொண்டாடுகிற போக்கு தமிழ் சினிமாவில் அதிகரித்திருக்கிறது.

கொடுக்கிற கூலிக்குத் தகுந்தாற்போல் மதிப்பெண்ணையும் நட்சத்திரங்களையும் வழங்குகின்றனர் என்பது இன்றைக்குக் கடைக்கோடி ரசிகனுக்கும் தெரிந்த சிதம்பர ரகசியமாக ஆகிவிட்டது என்பதை சினிமாவில் இருப்பவர்கள் புரிந்துகொள்ள மறுக்கின்றனர்.
ஒரு படத்தின் வெற்றி தோல்வி பற்றி அறிந்துகொள்ள குறைந்தபட்சம் ஒரு வார காலமாவது படத்தை ரிலீஸ் செய்த விநியோகஸ்தர்கள், திரையிட்டத் திரையரங்கு உரிமையாளர்களுக்குத் தேவைப்படுகிறது. அவர்கள்தான் ஒரு படம் வெற்றியா, தோல்வியா என்பதைப் புள்ளி விவரங்களோடு கூறுகின்ற தகுதி படைத்தவர்கள்.
இந்த வருடம் ஜனவரி மாதம் வெளியான விஸ்வாசம் முதல் வாரத்திலேயே 100 கோடி ரூபாய் தமிழகத் திரையரங்குகள் மூலம் வசூல் செய்ததாக அந்தப் படத்தைத் தமிழக திரையரங்கு உரிமையை வாங்கிய கேஜேஆர் ஸ்டூடியோ நிறுவனம் அறிவித்தது. அதற்குப் போட்டியாக வெளியான பேட்ட படம் 100 கோடி ரூபாய் வசூலித்ததாகப் பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் பத்திரிகையாளர்களிடம் கூறியது பெரும் விவாதத்தைத் தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியது.
முதல் மூன்று நாட்களில் அல்லது முதல் வாரத்தில் எந்த ஒரு தமிழ்ப் படமும் அரசு நிர்ணயித்த டிக்கெட் விலையில் விற்கப்பட்டு 100 கோடி ரூபாய் வசூலிப்பது என்பது குதிரைக்குக் கொம்பு முளைத்த கதைதான். இந்த உண்மை தயாரிப்பாளர்களுக்கு நன்கு தெரியும். இருந்தாலும் சம்பந்தப்பட்ட நடிகரிடம் அடுத்த படத்துக்கு கால்ஷீட் வாங்குவதற்காக இப்படி ஒரு மாயாஜாலத்தை உருவாக்குகின்றனர்.
தமிழகத் திரையரங்குகள் மூலம் வெற்றி பெற்ற திரைப்படங்கள் வசூல் ஆன உண்மை தொகை எவ்வளவு, படத்தில் அநியாயங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் கதாநாயகர்கள் படங்களுக்கான டிக்கெட்டுகள் நியாயமான விலையில் விற்பனை செய்யப்படுகிறதா என்று கேட்பார்களா, அப்படி செய்யப்படும் பட்சத்தில் ரஜினி முதல் சாதாரண ஹீரோ வரை நடித்த படங்கள் எடுக்கும் வசூல் எவ்வளவு என்று இப்போதுவரை யாரும் சொல்வதில்லை.
தமிழகத்தில் காஞ்சனா, பாகுபலி ஆகிய படங்களின் இரண்டு பாகங்களையும் பார்த்த பார்வையாளர் எண்ணிக்கை அளவுக்கு வேறு எந்த ஒரு முன்னணி தமிழ் நடிகர்களின் படத்தையும் ரசிகர்கள் பார்க்கவில்லை என்பதே வரலாறு. அதிலும் குறிப்பாக பாகுபலி 2 படத்துக்குத் தமிழக திரையரங்குகளில் சுமார் 1 கோடியே 25 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையானது. அரசு நிர்ணயித்த கட்டணத்தில் விற்பனை செய்யப்பட்ட இந்தப் படத்தின் சாதனையை இதுவரை தமிழகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இளைய தளபதி விஜய், தல அஜித் என்று தமிழ் ஊடகங்களாலும் ரசிகர்களாலும் போற்றப்படுகின்ற நடிகர்களின் நடிப்பில் வெளிவந்த எந்த ஒரு நேரடித் தமிழ்ப் படங்களாலும் முறியடிக்கப்படவில்லை என்கிற உண்மை ஆவணமாகப் பதிவு செய்யப்படாமல் தவிர்க்கப்பட்டு வருகிறது. ரஜினி விஜய் அஜித் போன்றவர்கள் நடித்த படங்கள், பாகுபலி படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் எண்ணிக்கையை எட்ட முடியுமா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.
இதற்குக் காரணம், படம் வெளியான முதல் வாரத்துக்குள் படம் விற்பனை செய்யப்பட்ட அசலை எடுக்க வேண்டுமென்ற அவசரம். அதற்காக முதல் மூன்று நாட்கள் அல்லது சில இடங்களில் முதல் வாரம் முழுமையும் இருமடங்கு, மும்மடங்கு விலையில் டிக்கெட் விற்பனை செய்யப்படுவதால் முதல் மூன்று நாட்களில் 30 கோடி வசூல் என்பது தமிழகத்தில் சாத்தியமாகிறது. இது ஒருவகையில் ரசிகனின் ஆர்வத்தைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் உத்தி என்று கூறலாம். மற்றொரு வகையில் அரசுக்குச் செலுத்த வேண்டிய முழுமையான வரி செலுத்தப்படாமல் ஏமாற்றுகிற செயலாகவும் இருக்கிறது. அதனால்தான் ஒரு படத்தின் வெற்றி நிகழ்ச்சிக்காக நடத்தப்படுகின்ற விழாக்களில் படத்தின் மொத்த வசூல் பகிரங்கமாக அறிவிக்க முடியாமல் தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் தடுமாறி மறைக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகின்றனர்.
இப்படி ஒரு சட்டவிரோதமான நடைமுறையை விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் பின்பற்றி வருவது ஆளும் அரசாங்கத்துக்குத் தெரியும் என்றாலும் அதைக் கண்டும் காணாமல் கடந்து போய்விடுகின்றனர்.
சட்டவிரோதமான விலையில் சினிமா டிக்கெட்டை விற்கவேண்டிய கட்டாயம் திரையரங்கு உரிமையாளர்களுக்கு இல்லை. நியாயமான கட்டணத்தில் டிக்கெட் விற்பனை செய்து லாபம் சம்பாதிக்க முடியும் என்பதை நிரூபித்த படங்களாக காஞ்சனா, பாகுபலி, கடைக்குட்டி சிங்கம், பரியேறும் பெருமாள், கோமாளி மற்றும் கைதி போன்ற படங்களை உதாரணமாகச் சொல்ல முடியும்.
முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் படங்கள் இதுபோன்ற டிக்கெட் விற்பனை ஏன் செய்ய முடியவில்லை என்கிற கேள்வி எழுகிறது.
நடிகருடைய சம்பளம் வசூலுக்குத் தகுந்த மாதிரி நிர்ணயம் செய்யாமல் அந்த நடிகரின் கால்ஷீட்டை வாங்கி படம் எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் அதிகபட்சமாக சம்பளம் கொடுப்பதால் படத்தின் பட்ஜெட் அதிகரிக்கிறது. அதற்கேற்ப விலை நிர்ணயிக்க வேண்டிய கட்டாயம் தயாரிப்பாளருக்கு ஏற்படுகிறது. ஒரு வருடத்துக்கு அதிகபட்சமாக பத்து படங்கள் வரை தான் அனைத்து தரப்பும் விரும்பிப் பார்க்கக் கூடிய நடிகருடைய படங்கள் தயாரிக்கப்படுவதால் திரையரங்குகள் அந்தப் படங்களை திரையிட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
“தற்போதைய சினிமாவில் போட்ட முதலீட்டை குறுகிய நாட்களில் வசூல் மூலம் எடுக்க வேண்டிய கட்டாயம் திரையரங்குகளுக்கு உள்ளதால் மனசாட்சியை அடகு வைத்து விட்டு அதிக விலைக்கு டிக்கெட் விற்க வேண்டிய நிர்பந்தத்துக்கு நாங்கள் உடன்பட வேண்டியிருக்கிறது. இதற்காக அரசு அதிகாரிகளை சரிக்கட்ட வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. முன்னணி நடிகர்கள் ரசனைக்கேற்ப தங்களது சம்பளத்தை நிர்ணயிப்பதும், எல்லா முன்னணி நடிகர்களும் வருடத்துக்கு இரண்டு படமாவது நடித்தால் தொடர்ச்சியாக வசூல் முக்கியத்துவம் உள்ள படங்கள் ரிலீஸாகும் சூழல் ஏற்படும். திரையரங்குகளும் எப்போதும் கூட்டம் நிரம்பி வழியக்கூடிய வாய்ப்பு ஏற்படும். இதனால் எல்லா தரப்பும் பலன் அடையக்கூடிய நிலை உருவாகும். ஆனால் அதற்கான எந்தவிதமான முயற்சியும் தயாரிப்பாளர்கள் தரப்பில் மேற்கொள்ளப்படுவதில்லை என்பது வருத்தத்துக்குரியது” என்கிறார் திரையரங்கு உரிமையாளர் ஒருவர்.
சினிமாவைப் பொறுத்தவரை நான் போட்ட முதலீடு கிடைத்தால் போதும் என்ற சுயநலம்தான் அதிகமிருக்கிறது. இதனால் வெற்றி பெற்ற படங்களாக இருந்தாலும் அந்தப் படத்தின் மூலம் யாராவது ஒருவர் நஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டிய இக்கட்டான சூழல் இங்கு இருக்கிறது. ரஜினி முதல் அறிமுக நடிகர் நடிக்கும் படம் வரை இது பொதுவான விதியாகவே இருக்கிறது. இத்தனை சிக்கல், நெருக்கடி, நஷ்டம் அனைத்தையும் கடந்த தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் 200 படங்கள் வரை தயாரிக்கப்பட்டு ரிலீஸ் செய்யப்படுகின்றன. இந்தப் படங்களைத் தயாரித்த 80 சதவிகிதத் தயாரிப்பாளர்கள் மறுவருடம் படம் தயாரிப்பதில்லை.
ஜனவரி 2019 முதல் டிசம்பர் மூன்றாம் வாரம் வரை 196 நேரடி தமிழ்ப் படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளன. ஜனவரி மாதம் ஏழு படங்களும் பிப்ரவரி மாதம் 19 படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டன. இவற்றில் மூன்று படங்கள் மட்டுமே வணிக ரீதியாக நல்ல லாபத்துக்கு வியாபாரமாகின. வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற படங்கள் இவை மூன்றும்தான். மற்ற அனைத்து படங்களும் முதலுக்கு மோசம் செய்து தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய படங்கள்.
இதற்கு என்ன காரணம்?
ஜனவரி முதல் டிசம்பர் வரை... ஒவ்வொரு மாதமும் ரிலீஸான படங்கள் மற்றும் அவை மொத்தமாக தியேட்டரில் வசூல் செய்த விவரங்கள் குறித்த கட்டுரைகள் இன்று முதல் வெளியாகும். ஒவ்வொரு கட்டுரையிலும் இரண்டு மாதங்கள் ரிலீஸான படங்களைப் பட்டியலிட்டு அதன் வசூல் விவரங்கள் குறித்த பார்வை மின்னம்பலத்தில் மதியம் 1 மணி அப்டேட்டில் வெளியிடப்படும்.
- இராமானுஜம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக