செவ்வாய், 12 நவம்பர், 2019

ஈரப்பலாக்காய் அல்லது கறிப்பலாக்காய் (தமிழ்நாட்டில் ) Breadfruit and Breadnut Fruit.

Rubasangary Veerasingam Gnanasangary - Farm to Table : ஈரப்பலாக்காய் அல்லது கறிப்பலாக்காய் (தமிழ்நாட்டில் )
Breadfruit and Breadnut Fruit.
இந்தப் பதிவுக்காக நான்கு படங்கள் ஒன்றாக இனைக்கப்பட்டுள்ளது. அதில் இருக்கும் காயே ஈரப்பலாக்காயின் மூதாயர் என்று உறுதியாக நம்பப்படுகிறது. ஆங்கிலத்தில் Breadnut fruit (Artocarpus camansi) என்று அழைக்கப்படுகிறது. கிரேக்க மொழியில் Artos என்றால் Bread என்றும், Karpus என்றால் Fruit என்றும் வருகிறது. Camansi என்பது பிலிப்பீன்சின் பிரதான மொழியாகிய Tagalog இல் அந்த காயை குறிக்கும் சொல் ஆகும். சிங்களத்தில் Kos del (කොස්දෙල්). இதை ஈரப்பலாக்காய் போன்று சமைக்க முடியாது. காரணம் படத்தில் உள்ளது போன்று உள்ளே முற்றாக விதைகள் மாத்திரம்தான் நிறைந்து இருக்கும். இது ஈரப்பலாக்காய் போன்று மாப்பொருளினால் ஆனது அல்ல. பிலிப்பீன்சில் சிலர் வேறு மரக்கறிகளோடு சேர்ந்து தேங்காய்ப் பால்விட்டு சமைப்பர். இருந்தாலும் இதற்கு பெரிதாக முக்கியத்துவம் கிடையாது. ஆனால் Jamaica, Trinidad and Tobago, Haiti, Guyana, Surinam போன்ற நாடுகளில் குறிப்பாக கரிபியன் தீவுகளும் அதை அண்டிய நாடுகளிலும் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக காய்களாக சமைக்காமல் விதைகளையே சமையலுக்கு உபயோகிக்கின்றனர். முன்னூறு வருடங்களுக்கு முன்னரே ஸ்பானியர்களால் பிலிப்பீன்சில் இருந்து வட மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளுக்கு அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது. பின்னர் பிரெஞ்சுக் காரர்கள் தாம் கைப்பற்றி வைத்திருந்த நாடுகளுக்கும் எடுத்துச் சென்றுள்ளனர்.

முதலில் நாம் பலாமரம், ஆலமரம், அத்திமரம், இத்திமரம், அரசமரம் மற்றும் ஈரப்பலாக்காய் தொட்டு முசுக்கட்டைச் செடி (mulberry) வரை எல்லாமே ஒரே தாவரக் குடும்பத்தை சேர்ந்தவைதான் என்பதை புரிந்து கொண்டால் பயனுள்ளதாக இருக்கும். இதே குடும்பத்தைச் சேர்ந்த African Breadfruit என்று அழைக்கப்படும் ஒரு இனமும் உண்டு. அது ஆபிரிக்காவை பூர்வீகமாக கொண்டது. குறிப்பாக மத்திய ஆபிரிக்கா மற்றும் அண்டைய நாடுகளில் அதன் விதைகள் பிரதான உணவாகும். அதன் விதைகள் நிலக்கடலையின் அளவேதான் இருக்கும். நாம் பருப்பை எப்படியெல்லாம் சமையலில் பயன் படுத்துகிறோமோ அப்படியெல்லாம் அதன் விதைகளை அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதே போன்றே மெக்சிக்கோ மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளை பூர்வீகமாக கொண்ட ஒரு காயையும் Breadnut (Maya nut) என்று அழைக்கிறார்கள். அதுவும் பலா போன்றே Moraceae குடும்பத்தை சேர்ந்ததுதான்.
இப்போ ஈரப்பலாக்காய்க்கு (Artocarpus altilis) வருவோம். பிரபல கடலோடிகளான பொலினேசியர்கள் மூவாயிரம் ஆண்டுகளாக உணவுக்காக ஈரப்பலாக்காய் நடுகை செய்துவந்துள்ளனர். குறிப்பாக நியூகினி காடுகளில் இருந்து கமன்சி (breadnut) மரங்களையே பசிபிக் தீவுகள் எங்கும் கொண்டுசென்று நட்டுள்ளனர். அவர்களால் தொடர்ச்சியான முறையில் மேற்கொள்ளப்பட்ட குறித்த தாவரத்தின் இனப்பெருக்க நடவடிக்கைகளின் விளைவே இன்று நாம் விரும்பி உண்ணும் ஈரப்பலாக்காய். பொலினேசியர்கள் ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே எரிமலையால் ஏற்ப்பட்ட தீவுகளான ஹவாய் வரை ஈரப்பலாக்காய் தொட்டு ஆடு, கோழி, பன்றி, நாய் சேப்பங்கிழங்கு வரை தம்மோடு படகுகளில் எடுத்துச் சென்று அங்கு அறிமுகப் படுத்தியுள்ளார்கள்.
இலங்கையில் முன்னூறு வருடங்களுக்கு முன்னரே டச்சுக் காரர்களால் ஈரப்பலாக்காய் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. ஈரப்பலாக்காய் உடலுக்கு சூடு என்றும் இதன் காய்களை சாப்பிட வைப்பதன் மூலம் தம்மை போரிடும் ஆற்றல் அற்றவர்களாக மாற்றப் பார்க்கிறார்கள் என்றும் உள்ளூர் மக்கள் நம்பியதாக ஒரு கதையுண்டு. காலியில் அமைந்துள்ள டச்சுக் கோட்டையில் முன்னூறு வருடங்கள் பழமையான மரம் ஒன்று உல்லாசப் பயணிகள் பலரையும் கவரும் அம்சமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த மரம் டச்சுக் காரர்களால் முதலில் அறிமுகப் படுத்தப் பட்டிருந்தாலும் முதலாம் உலக மகா யுத்தக் காலத்தின் போதே உணவுப் பஞ்சம் ஏற்படலாம் எனக்கருதி ஆங்கிலேயர்களால் இந்தியா மற்றும் இலங்கைக்கு மலேசியாவில் இருந்து தருவிக்கப் பட்டதாகவும் கூறப்பபடுகிறது.
வெப்ப வலய நாடுகளைப் பொருத்தவரையில் ஈரப்பலாக்காயானது விரைவாக வளர்ந்து நீண்ட காலத்துக்கு அதிக விளைச்சல் தரும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு உணவுப் பயிராகும். அதனுடைய முக்கியத்துவம் உணவுப் பாதுகாப்பில் மிகவும் பின்னடைவில் உள்ள இலங்கை இந்திய நாடுகளால் இன்னமும் உணரப் படவில்லை என்பது கவலைதரும் விடயமாகவுள்ளது. பெரும்பாலும் ஈரப்பலாக்காய் விதைகள் அற்ற ஒரு தாவரமாக இருப்பதால் அவை தாமாக முளைத்து வளர மாட்டாதவை. அதனால் நாற்றுகள் எடுப்பது என்பது கடிமானதுமாகவும் ஒட்டுக்கட்டிய நாற்றுகள் (grafting) எடுப்பது என்பது ஒரு முடியாத விடயமாக இருந்து வந்துள்ளது. இதுவரை வேர்களை தாய் மரத்தில் இருந்து துண்டித்தும், வின்பதியம் (marcotting or air layering) மூலமுமே நாற்றுகள் பெறப்படுகின்றன. ஆனால் பிற்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் கவனமான முறையில் மேலே குறிப்பிட்ட கமன்சி மரத்தின் நாற்றுகளை வேர்ச் செடியாகக் கொண்டு ஒட்டுக்கட்டிய நாற்றுகள் பெற முடியும் என்று நிருபிக்கின்றன. - தொடரும்.
இந்தியன் படத்தில் கமலஹாசன் மற்றும் மனீசா கொய்ராலா நடனம் ஆடிய ஒரு காட்சி ஏன் இங்கு செருகப் பட்டுள்ளது என்று ஒரு சிலர் நினைத்திருக்கலாம். அந்த கப்பலுக்கும் ஈரப்பலாக்காய்க்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு. அந்த கப்பலானது Mel Gibson நடித்து 1984இல் வெளிவந்த "The Bounty " என்னும் ஹாலிவூட் சினிமா படத்துக்காக 1978இல் நியூசிலாந்து கம்பனி ஒன்றினால் கட்டப்பட்டதாகும். HMS Bounty.
Vadakovay Varatha Rajan : தெனிலங்கையில் இதற்கு பஞ்சம்தாங்கி என்று அர்த்தப்பட ஓர் சிங்களச்சொல் உண்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக