ஞாயிறு, 3 நவம்பர், 2019

உயர்நீதிமன்றத்தின் பெயரில் வசூலா ? சட்டம் , விதிகளை காற்றில் பறக்க விடுவது நீதிபதிகளுக்கு அழகல்ல!

savukkuonline.com : பொன்.மாணிக்கவேல் 2012ம் ஆண்டு முதல் அக்டோபர் 2018 வரையிலான காலத்தில் 1125 சிலைகளை மீட்டு கொண்டு வந்துள்ளார்.  ஆனால் 1983 முதல் பொன் மாணிக்கவேல் வரும் வரையில் வெறும் 28 சிலைகளே அவருக்கு முன் உள்ள அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன. பொன் மாணிக்கவேல் சிலை திருடர்களை பொன் மாணிக்கவேல் கைது செய்தது மட்டுமல்ல.  சட்டத்தின் பிடியிலிருந்து நாம் தப்ப முடியாது என்ற பயத்தையும் சிலை திருடர்களின் மத்தியில் பொன் மாணிக்கவேல் ஏற்படுத்தியுள்ளார்.“
இது நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு, 30 நவம்பர் 2018 அன்று வழங்கிய தீர்ப்பு.  இத்தோடு நிற்காமல், பொன் மாணிக்கவேலைப் போல ஒரு போலீஸ் அதிகாரி உலகத்திலேயே இல்லை என்று ஒரு நீண்ட சான்றிதழை அவருக்கு வழங்கி, வரலாற்றிலேயே இல்லாத வகையில், சென்னை உயர்நீதிமன்றம் பொன் மாணிக்கவேலுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கியது.

இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, தமிழக அரசு சார்பில் “பொன் மாணிக்கவேல் தன் உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை எதையும் சமர்ப்பிப்பதில்லை.  எந்த உயர் அதிகாரியின் உத்தரவுக்கும் கீழ்படிவதில்லை.   நீதிமன்றத்தில்தான் அறிக்கை சமர்ப்பிப்பேன்” என்று பிடிவாதம் பிடிக்கிறார் என்று குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.  காவல் துறையை பொறுத்தவரை இது ஒழுங்கீனம்.   உயர் அதிகாரிகள் உத்தரவுக்கு கீழ்படியாத ஒரே காரணத்துக்காக பொன்.மாணிக்கவேலை பணி இடைநீக்கம் செய்யலாம்.  ஆனால், நீதிபதி மகாதேவன் தலைமியிலான அமர்வு, இந்த ஒழுங்கீனத்தை நியாயப்படுத்தியது.   பொன் மாணிக்கவேல் உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பித்தால் விசாரணை நேர்மையான முறையில் நடைபெறாது என்று உத்தரவிட்டது.
தமிழக அரசு, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு, ஒரு கூடுதல் டிஜிபியை நியமித்து உத்தரவிட்டது.   அந்த நியமனத்தையும் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.   சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு கூடுதல் டிஜிபியாக அபை குமர் சிங்கை நியமித்த தமிழக அரசு நியமித்த உத்தரவு செல்லாது என்றும், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு ஓய்வு பெற்ற பின்னரும் பொன்.மாணிக்கவேலே தலைவராக ஒரு ஆண்டுக்கு தொடர்வார் என்றும், அவர் எந்த உயர் அதிகாரிக்கும் அறிக்கை அனுப்ப வேண்டியதில்லை என்றும், எந்த அறிக்கையாக இருந்தாலும் நீதிமன்றத்தில்தான் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பொன்.மாணிக்கவேலின் ஒழுங்கீனத்தை நியாயப்படுத்தி தீர்ப்பு வழங்கியது.
பொன் மாணிக்கவேல் யார் என்று தெரிந்து கொள்ள விரும்பும் வாசகர்களுக்காக கடந்த ஆண்டு எழுதிய கட்டுரை
பொன்.மாணிக்கவேல் என்ன தேவதூதனா ?
Transformation of a Scoundrel into a Saint, due to judicial overreach.
பொன்.மாணிக்கவேலுக்கு பணி நீட்டிப்பு கொடுத்ததை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்றபோது உச்சநீதிமன்றம் பொன்.மாணிக்கவேலின் உயர் அதிகாரியாக தமிழக அரசு, கூடுதல் டிஜிபி அபய் குமார் சிங்கை நியமித்தது சரியே என்றும், பொன்.மாணிக்கவேல் அவரது அறிக்கைகளை தனது உயர் அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், உத்தரவிட்டது.
இதனால் பத்து நாட்களுக்கு ஒரு முறை கட்டப் பஞ்சாயத்து போல சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்து வந்த நீதிபதி மகாதேவனின் நாடகம் முடிவுக்கு வந்தது.  எந்த அளவுக்கு இந்த அமர்வு மோசம் என்றால், சிலை கடத்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களின் ஜாமீன் மனுவை கூட இந்த அமர்வுதான் விசாரிக்கும்.   ஜாமீன் மனுவை விசாரிக்கும்போதே, கிட்டத்தட்ட கைது செய்யப்பட்டவரை குற்றவாளி என்று தீர்ப்பெழுதும் வகையில் பல்வேறு கருத்துரைகள் அத்தீர்ப்பில் இருக்கும்.

நீதிபதி மகாதேவன்.
உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து, இதற்கு முந்தைய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகில் ரமாணி, மகாதேவன் தலைமியிலான அமர்வை கலைத்தார்.  3 ஜூன் 2019 அன்று அவர் வெளியிட்ட அறிவிக்கையில், சிலை கடத்தலுக்கான சிறப்பு அமர்வு கலைக்கப்படுவதாகவும், இது தொடர்பான வழக்குகளை இனி புதிய அமர்வு விசாரிக்கும் என்றும் உத்தரவிட்டார்.

இதுதான் எச்.ராஜா உள்ளிட்ட பார்ப்பனீய சங்கிக் கும்பலுக்கு இப்போது உறுத்தலாக இருக்கிறது.
தமிழகத்தில் 1923ம் ஆண்டு முதல் தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருகிறது.  1960ம் ஆண்டு சட்டத் திருத்தத்துக்கு பிறகு, தமிழகத்தின் பெரும்பாலான கோவில்கள் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன.  இந்த கோவில்களை நிர்வகிக்க தமிழக அரசு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்றன.  சிதம்பரம் நடராஜர் கோவில் மட்டும், இன்னும் பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.
இவ்வாறு கோவில்கள், இந்து சமய அறநிலையத் துறையின் கீழ், அரசு கட்டுப்பாட்டில் இருப்பது, பார்ப்பனர்களின் கண்களை இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாக உறுத்தி வருகிறது.  இந்த கோவில்கள் மீண்டும் பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும்.  கோவில்களில் தமிழில் மந்திரம் ஓதலாம் என்ற சலுகையை நீக்க வேண்டும்.  மன்னர் காலத்தில் இருந்ததைப் போல கொவில்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, கோவில் சொத்துக்களை கொள்ளையடிப்பதோடு, சமஸ்கிருத ஆதிக்கத்தையும் கொண்டு வர வேண்டும் என்பதே இவர்கள் நோக்கம்.

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அனைவரும், கோவில் சொத்துக்களை கொள்ளையடிக்கிறார்கள், கோவில் சொத்துக்களில்தான் வாழ்கிறார்கள் என்ற பிம்பத்தை கட்டமைக்க பொன்.மாணிக்கவேல் முயன்றபோது, பார்ப்பனர்கள் பொன் மாணிக்கவேலை வாராது வந்த மாமணியாக பார்த்தார்கள்.  எச்.ராஜா, உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் சங்கிகள் வெளிப்படையாக அவரை ஆதரித்தார்கள்.   எச்.ராஜா, இந்து சமய அறநிலையத் துறை ஊழியர்களின் குடும்ப பெண்களையெல்லாம் அவதூறாக பேசினார்.
இந்த கட்டுரை எழுதுவதற்கான தேவையை இறுதியில் பார்ப்போம்.  பொன் மாணிக்கவேல் எப்படியெல்லாம் நீதிமன்றத்தை ஏமாற்றியிருக்கிறார்.  நீதிமன்றம் எப்படி ஏமாந்தது என்பதை முதலில் பார்ப்போம்.   நீதிமன்றம் ஏமாந்தது என்று கூட சொல்ல முடியாது.   பொன் மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும், ஆதாரங்களோடு நீதிபதி மகாதேவனிடம் சமர்ப்பிக்கப்பட்டது.  அதற்கு பிறகும் அவர் ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என்பது எனக்கு புரியவில்லை.
இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் தொடர்ந்து ஆஜராகி வந்த, மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், ஒரு கட்டத்தில், நீதிபதிகளின் நடவடிக்கையை பார்த்து மனம் நொந்து, இனி இந்த வழக்கில் ஆஜராகப் போவதில்லை என்று ஒரு கடிதத்தை அளித்து விட்டு விலகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கறிஞர் வட்டாரங்களில், ஒரு உச்சநீதிமன்ற நீதிபதியின் மகள், தொல்பொருள் தொடர்பான ஆராய்ச்சிப் படிப்பில் ஈடுபட்டிருப்பதாகவும், அவருக்கு பொன் மாணிக்கவேல் உதவியதாகவும், அதன் காரணமாக அந்த உச்சநீதிமன்ற நீதிபதி பொன் மாணிக்கவேல் சார்பாக அழுத்தம் தரப்பட்டதாகவும் ஒரு தகவல் உலவுகிறது.   ஆனால் இத்தகவலில் உண்மை இருப்பதாக தெரியவில்லை.
சென்னை உயர்நீதிமன்றத்தில் 2018ல் பொன் மாணிக்கவேல் தாக்கல் செய்த மனுவில், அவர் 1125 சிலைகளை மீட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.   இந்த மனுவின் அடிப்படையில்தான், சென்னை உயர்நீதிமன்றம் பொன்.மாணிக்கவேலுக்கு ஒரு ஆண்டு பணி நீட்டிப்பு கொடுத்தது என்பதை பார்த்தோம்.


பொன் மாணிக்கவேல் மீட்டதாக சொல்லப்படும், 1125 சிலைகளில் பெரும்பாலானவை எங்கே இருக்கின்றன தெரியுமா ?   485 சிலைகள் சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளன.  மீதம் உள்ளவை கிண்டியில் உள்ள சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் உள்ளன.  இவை அனைத்தும், கற் சிலைகள் மற்றும் மரச் சிலைகள்.  இவைகளில் ஒன்று கூட புராதான சிலைகள் அல்ல.
தமிழக கோவில்களில் திருடப்பட்ட சிலைகளாக இவை இருந்தன என்றால், அவை சம்பந்தப்பட்ட கோவில்களில் அல்லவா ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும் ?  ஏன் இந்த சிலைகள் சென்னை அருங்காட்சியகத்திலும், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்திலும் வெயிலிலும் மழையிலும் காய்ந்து கொண்டிருக்கின்றன ?  ஆனால் இந்த மோசடியான வாக்குமூலத்தை நம்பித்தான்,
சென்னை அரசு அருங்காட்சியத்தில் இருக்கும் சிலைகளை பார்வையிட்ட பொன் மாணிக்கவேல், அங்கே உள்ள சில சிலைகள் கோவில்களுக்கு சொந்தமானவை.  அவற்றை அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.  அருங்காட்சியக அதிகாரிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால், பொன் மாணிக்கவேல் பின் வாங்கினார் என்று, அருங்காட்சியகத்தை சேர்ந்த ஒரு மூத்த அதிகாரி தெரிவித்தார்.
21 ஜூலை 2017 அன்று, சென்னை உயர்நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு, தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 530 சிலை கடத்தல் வழக்குகளை பொன்.மாணிக்கவேல்  தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றி உத்தரவிட்டது.
இந்த இரண்டரை ஆண்டுகளாக இந்த 530 வழக்குகளில் ஏதாவது முன்னேற்றம் உள்ளதா என்றால் எதுவுமே இல்லை.  இதுதான் பொன் மாணிக்கவேலின் புலனாய்வுத் திறமை.
2014ம் ஆண்டு, ஆஸ்திரேலிய அரசு, இந்திய அரசிடம், விலை உயர்ந்த இரண்டு சிலைகளை ஒப்படைத்தது.  சமீப காலமாக, சிலை கடத்தல் விவகாரத்தில் உலக நாடுகளின் ஒத்துழைப்பு அதிகரித்துள்ளது. ஒரு சிலை கடத்தப்பட்டதாக, இண்டர்போல் அறிவிக்கையில் ஒரு சிலையின் படம் வெளியானால், எந்த நாட்டில் சிலை உள்ளதோ, அந்த நாடு, சம்பந்தப்பட்ட நாட்டிடம் சிலையை ஒப்படைக்கிறது.  அது தனியார் அருங்காட்சியகத்தில் இருந்தாலும், பறிமுதல் செய்யப்பட்டு ஒப்படைக்கப்படுகிறது.   இப்படி ஒப்படைக்கப்பட்ட சிலைகள்தான் இவை.
பொன் மாணிக்கவேல் என்ன செய்தார் தெரியுமா ?  இந்த சிலைகள் ஒப்படைக்கப்பட்ட பிறகு, 4/2015 என்ற எப்.ஐ.ஆரை பதிவு செய்கிறார்.   இதில் புகார்தாரர் யார் தெரியுமா ?  பொன்.மாணிக்கவேலேதான்.  அவரே புகார் அளித்துக் கொள்வார். பின்பு அவரே விசாரிப்பார்.
2005ம் ஆண்டுக்கு முன்னதாக தமிழகத்தில் இருந்து ஒரு பிரத்தியங்கரா தேவி சிலை திருடு போனதாக பொன் மாணிக்கவேல் 5/2015 என்ற எப்.ஐ.ஆரை பதிவு செய்தார்.  இதிலும் புகார்தாரர் பொன்.மாணிக்கவேலேதான்.  குற்ற எண் 1/2016 என்ற வழக்கின்படி, 1989ம் ஆண்டுக்கு முன் 4 சிலைகள் காணாமல் போனதாக, விபரம் இல்லாத வகையில், மொட்டையாக, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் ஆய்வாளர் ஒருவரின் புகாரில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய வழக்குகளையெல்லாம் விபரங்கள் இல்லாமல் பொன்.மாணிக்கவேல் பதிவு செய்வதன் நோக்கம், ஏதாவது ஒரு சிலை, பின்னாளில் கிடைத்தால், இந்த வழக்கில்தான் அந்த சிலை கைப்பற்றப்பட்டது என்று, உயர்நீதிமன்றத்துக்கு கணக்கு காட்டத்தான்.
இதே போல, பல்வேறு மரகத சிலைகள் / ஐம்பொன் சிலைகள் கைப்பற்றப்பட்டன என்று பொன்.மாணிக்கவேல் அவ்வப்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டியளிப்பார்.  பின்னாளில் ஆய்வு செய்த பிறகு, அந்த சிலைகள் மரகத சிலைகள் அல்ல.  வெறும் பச்சைக் கல் சிலைகள்.   சாதாரண உலோக சிலைகள் என்று கண்டறியப்பட்டுள்ளது.    பொன் மாணிக்கவேலின் அபாரமான கண்டுபிடிப்புகள் குறித்து பரபரப்பாக செய்தி வெளியிடும் ஊடகங்கள், அந்த சிலைகளின் உண்மைத்தன்மை என்ன என்பதை ஆராய்வதில்லை.  நீதிமன்றமும், இது குறித்து கண்டுகொள்வதில்லை.
கடந்த் ஆண்டு மே மாதம், 1000ம் ஆண்ட் கால பழமையான ராஜராஜன் சிலையை, அஹமதாபாத்தில் ஒரு அருங்காட்சியகத்திலிருந்து பறிமுதல் செய்து வந்தார் பொன் மாணிக்கவேல்.  மிகுந்த படோடாபமாக அது விளம்பரம் செய்யப்பட்டது. அந்த அருங்காட்சியகத்தின் உரிமையாளர், அது தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட சிலை அல்ல.   திருவாங்கூர் சமஸ்தானத்திலிருந்து 1942ம் ஆண்டு வாங்கப்பட்டது.  அதற்கான ஆதாரங்கள் உள்ளன என்று சென்னை உயர்நீதிமன்றத்தில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று வரை விசாரணைக்கே வரவில்லை.  ஒன்றரை வருடமாக ஏன் இந்த வழக்கு விசாரணைக்கு வரவில்லை என்பது இன்று வரை மர்மமாகவே உள்ளது.
சிலைக் கடத்தலில் உலக நாடுகள் பலவற்றில் தேடப்பட்டு வந்த சர்வதேச குற்றவாளி சுபாஷ் கபூர், 30 அக்டோபர் 2011 அன்று, ப்ரான்க்பர்ட் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு இந்தியா அனுப்பபட்டார்.  அவர் இன்னும் திருச்சி சிறையில் இருக்கிறார்.

சுபாஷ் கபூர்.
இந்த சுபாஷ் கபூருக்கு உதவியதாக சென்னையை சேர்ந்த 80 வயதான தீனதயாளன் என்பவரை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு கைது செய்தது.  தீனதயாளனே தனது ஒப்புதல் வாக்குமூலத்தில், 1960ம் ஆண்டு முதல் சிலைக் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
தீனதயாளனின் மகன் கிரிதயாள் மற்றும் மகள் அபர்ணா ஆகியோர் அமெரிக்காவில் வசிக்கின்றனர்.  இத்தனை ஆண்டுகளாக தீனதயாளன் சிலைக் கடத்தலில் ஈடுபட்டதற்கு இவர்கள் இருவரும் உதவியாக இருந்துள்ளனர்.  இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவோ, இவர்களை வெளிநாட்டிலிருந்து இந்தியா கொண்டு வரவோ, பொன் மாணிக்கவேல் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  அதிர்ச்சிகரமாக, இந்த தீனதயாளனை அப்ரூவராக்கி, அவரை வழக்கிலிருந்து விடுவித்துள்ளார் பொன் மாணிக்கவேல்.
இந்த தீனதயாளன் கைது செய்யப்பட்டபோது, அவரை எந்த அதிகாரியையும் விசாரணை செய்ய பொன்.மாணிக்கவேல் அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  தீனதயாளனை, பொன்.மாணிக்கவேல் மட்டுமே நேரடியாக விசாரித்தார்.  தீனதயாளனை விசாரிக்க ரகுபதி என்ற டிஎஸ்பி முயன்றார்.   என்ன காரணத்தினாலோ, அந்த முயற்சியில் கடும் கோபமடைந்த பொன்.மாணிக்கவேல், ரகுபதியை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவிலிருந்து வெளியேற்றினார்.

தீனதயாளன்.
ஊடக விளம்பரத்திற்காகவும், பரபரப்புக்காகவும், ஊரையும், நீதிமன்றத்தையும் ஏமாற்றுவதற்காக பொன்.மாணிக்கவேல், இந்து சமய அறநிலையத் துறையின் இணை ஆணையர்களாக இருந்த கவிதா மற்றும் திருமகள் என்ற இரண்டு மூத்த அதிகாரிகளை கைது செய்தார்.  அவர்கள் இருவரும், கோவிலில் இருந்து தங்கத்தை திருடி விட்டார்கள் என்பது குற்றச்சாட்டு.
முழுவதும் சிசிடிவியின் கீழ் இருக்கும் பெரும் கோவில்களில், அத்தனை பேர் கண்களையும் மீறி, இணை ஆணையர் அந்தஸ்தில் இருக்கும் இரண்டு அதிகாரிகள் எப்படி தங்கத்தை திருட முடியும் என்று நீதிமன்றமும் கேட்கவில்லை…. பொதுமக்களும் கேட்கவில்லை.   அவர்கள் கைது செய்யப்பட்டு ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்டன.
அவர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து என்ன ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டன, என்ன பொருட்கள் கைப்பற்றப்பட்டன, புலனாய்வு முடிந்ததா, குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதா என்றால் எதுவுமே நடக்கவில்லை. பின்னர் எதற்காக கைது ?
ஒரு அரசு ஊழியர், அதுவும் மூத்த அரசு ஊழியர் கைது செய்யப்பட்டால் அது அவர் மீதும் அவர் குடும்பத்தின் மீதும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நான் அறிவேன்.   இணை ஆணையர் கவிதாவோடு நெருக்கமாக இருக்கும் ஒருவர், கவிதாவின் கைது குறித்து இவ்வாறு தெரிவித்தார்.
“காஞ்சிபுரம் ஏகாம்பரநாதேஸ்வரர் கோயிலில் புதிதான மூலவர் சிலை செய்வதில் முறைகேடு நடந்ததாகத் தான் கவிதா அவர்கள் கைது செய்யப்பட்டார். கவிதாவைப் பொறுத்தவரை இந்தக் கைது நடவடிக்கையை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. ஏனெனில் அதற்கான முகாந்திரம் எதுவும் இல்லை. மிக நேர்மையான அதிகாரி என்று பெயர் எடுத்திருந்த அவர் எதிலும் சரியான நடைமுறை எதுவோ அதையே பின்பற்றுபவர் என்பது அவர் துறை சார்ந்த எல்லோருக்குமே தெரியும். உடல்நலப் பிரச்சனை வேறு கைது சமயத்தின் போது அவருக்கு இருந்தது. முன்னறிவிப்பு மற்றும் விசாரணை ஏதுமற்ற இந்தக் கைது நடவடிக்கை அவரது உடலிலும் , மனதிலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இப்போது வரை அதிலிருந்து முழுமையாக மீண்டு வர முடியாமல் தான் இருக்கிறார். தன் மேல் எதற்காக வழக்குப் போடப்பட்டிருக்கிறது என்று தெரிந்து கொள்ளும் முன்பே ஊடகங்களும், பொதுமக்களும் தவறான செய்தியை புரிந்து கொண்டது பற்றிக் கவலை கொண்டிருக்கிறார். இப்போது சட்டரீதியான தீர்வை மட்டுமே நம்பியிருக்கிறார்.”

அறநிலையத் துறை இணை ஆணையர் கவிதா
பொன் மாணிக்கவேல் போன்ற அயோக்கியனை, சென்னை உயர்நீதிமன்றம் வளர்த்து விட்டதன் விளைவு இதுதான்.
சரி. இப்போது இந்த கட்டுரை எழுதுவதற்கான நோக்கத்துக்கு வருவோம்.
முந்தைய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகில் ரமாணி, நீதிபதி மகாதேவன் தலைமியிலான சிறப்பு அமர்வை கலைத்து விட்டார் என்பதை முன்னதாகவே பார்த்தோம்.   இந்து சமய அறநிலையத் துறையை ஒழித்துக் கட்ட பார்ப்பன சக்திகள் எப்படி தீவிரமாக முனைகிறது என்பதையும் பார்த்தோம்.
சென்னை உயர்நீதிமன்றம் பொன் மாணிக்கவேலுக்கு வழங்கிய ஒரு வருட பணி நீட்டிப்பு இந்த மாத இறுதியோடு முடிகிறது.   சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்ட வழக்குகளில் ஒன்றில் கூட முன்னேற்றம் இல்லை.   இதை சமாளித்து, மீண்டும் இரண்டு ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு பெற, பொன் மாணிக்கவேல் கடுமையாக முயன்று வருகிறார்.   ஆகஸ்ட் மாதத்தில், தன்னை எந்த வழக்கையும் விசாரிக்க விடாமல், டிஜிபி, தலைமை செயலாளர், உள் துறை செயலாளர், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி ஆகியோர் தடுக்கிறார்கள்.  அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ஜூன் மாதமே ஒரு மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
புதிய தலைமை நீதிபதி வந்து, அவர் நினைத்தால் மட்டுமே நீதிபதி மகாதேவன் தலைமையிலான அமர்வை மீண்டும் நியமிப்பதா இல்லையா என்பதை முடிவு செய்ய இயலும்.   இது முழுக்க முழுக்க தலைமை நீதிபதியின் பிரத்யேக அதிகாரம் சம்பந்தப்பட்டது.   ஆனால், ஒரு பார்ப்பன கூட்டம், நீதிபதி மகாதேவன் தலைமையிலான சிறப்பு அமர்வை மீண்டும் கொண்டு வர முயற்சிக்கிறோம், பொன் மாணிக்கவேலுக்கு பணி நீட்டிப்பை மேலும் பெற்றுத் தருகிறோம் என்று வெளிப்படையாகவே வசூலில் இறங்கியுள்ளது.

இவர்களுக்கு பணம் கொடுத்தால் கூட,  நீதிபதி மகாதேவன் அமர்வு மீண்டும் நியமிக்கப்பட வேண்டுமா இல்லையா என்பதை முடிவெடுக்க வேண்டியது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இல்லையா ?  அப்படி இருக்கையில், இவர்களுக்கு எதற்கு நிதி அளிக்க வேண்டும் ?  இப்படி வசூல் செய்வது நீதிபதி மகாதேவனுக்கு தெரியுமா ?   அவர் சம்மதத்தோடுதான் இது நடக்கிறதா ?   இப்படி வசூல் செய்ய இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது ? என்று பல கேள்விகள் எழுகின்றன.
சென்னை உயர் நீதிமன்றம் விடை சொல்லும் என்று நம்புவோம்.
தமிழகத்திலிருந்து திருடு போன சிலைகளை மீட்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.  ஆனால், அதற்காக பொன் மாணிக்கவேல் போன்ற ஒரு அயோக்கியனை தேவதூதனாக சித்தரிப்பதும், அதற்காக சட்டம் மற்றும் விதிகளை காற்றில் பறக்க விடுவதும், நீதிபதிகளுக்கு அழகல்ல.
பிறகு நீதிபதிகளுக்கும், இந்து மதத்தின் காவலனாக தன்னை பறைசாற்றிக் கொள்ளும் எச்.ராஜாக்களுக்கும் என்ன வேறுபாடு ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக