வியாழன், 14 நவம்பர், 2019

ரஃபேல்:ஊழல் . சபரிமலை நுழைவு .. உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு இன்று!

சபரிமலை - ரஃபேல்: உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு இன்று!
மின்னம்பலம் : அரசியல் உலகம், ஆன்மிக உலகம், ஆன்மிக அரசியல் உலகம் என மூன்று வட்டாரங்களும் இன்று (நவம்பர் 14) உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.
சபரிமலை, ரஃபேல் விமான விவகாரங்களில் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட மீளாய்வு மனுக்களை விசாரித்து இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க இருப்பதுதான் இந்த எதிர்பார்ப்புக்குக் காரணம்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் எந்த வயதுள்ள பெண்களும் சென்று வழிபடத் தடையில்லை என்று கடந்த 2018 செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது. இதையடுத்து கேரளாவில் பெரும் போராட்டம் வெடித்தது. கேரள அரசு உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவோம் என்று சொல்ல, பல இந்து அமைப்புகள் போராட்டத்தில் இறங்கின.

இதற்கிடையில் இந்தத் தீர்ப்புக்கு எதிராக நான்கு புதிய ரிட் மனுக்கள், ஐந்து இடமாற்ற மனுக்கள், 56 மீளாய்வு மனுக்கள் என 65 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. நாயஸ் சர்வீஸ் சொசைட்டி, ஐயப்பன் கோயில் தாந்த்ரி, திருவிதாங்கூர் தேவசம் போர்டு, கேரள அரசு ஆகியவை இந்த வழக்குகளில் வாதாடின. புகழ்பெற்ற கோயிலின் மரபுகள் மற்றும் கலாச்சாரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய உச்ச நீதிமன்றம் அந்தத் தீர்ப்பை மீளாய்வு செய்ய வேண்டுமெனப் பல அமைப்புகள் கோரின.
வரும் நவம்பர் 16ஆம் தேதி முதல் சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக திறக்கப்பட இருக்கும் நிலையில், இன்று இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வர இருக்கிறது.
தீர்ப்பை மனத்தில் கொண்டு, சுமார் 2,500 காவல் துறையினர் சபரிமலை கோயில் வளாகத்தில் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
ரஃபேல்: குதிரைக்கு உயிர் வருமா?
இந்திய விமானப் படையில் சேர்ப்பதற்காக பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரஃபேல் விமானங்களை வாங்க மத்திய பாஜக அரசு புதிய ஒப்பந்தங்களை 2016 ஜனவரி 26ஆம் தேதி செய்துகொண்டது. இந்த ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு விதிகளை மீறி சலுகைகள் வழங்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. விமான பேரம் தொடர்பாக விசாரிக்க வேண்டுமென வழக்கறிஞர்கள் எம்.எல்.சர்மா, வினீத் தண்டா, ஆம் ஆத்மி கட்சி தலைவர் சஞ்சய் சிங், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி, மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆகியோர் தாக்கல் செய்த இந்த வழக்குகளை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோரை கொண்ட அமர்வு விசாரித்தது.
விசாரணை முடிவில், ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என கூறி, ஆறு வழக்குகளையும் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி தள்ளுபடி செய்து மோடி அரசுக்கு நற்சான்றிதழ் அளித்தது.
இந்தத் தீர்ப்பை மீளாய்வு செய்யக்கோரி முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி மற்றும் மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண், வினீத் தண்டா, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங் ஆகியோர் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களைத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோரைக்கொண்ட அமர்வு விசாரித்தது. அனைத்து தரப்பு வாதத்தையும் கேட்டு முடித்த நீதிபதிகள் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் கடந்த மே மாதம் 10ஆம் தேதி ஒத்திவைத்தனர்.
இதற்கிடையில் ரஃபேல் விவகாரத்தில் ஆங்கில நாளேடு தி இந்து பிப்ரவரி 8 வெளியிட்ட தகவல் நாட்டையும், நாடாளுமன்றத்தையும் உலுக்கியது. உச்ச நீதிமன்றத்தால் ஆதாரங்கள் இல்லை என்று சொல்லப்பட்ட விவாகரத்தில் ஆதாரங்களை வெளியிட்டது தி இந்து.
ரஃபேல் விமானம் வாங்குவது தொடர்பான பேச்சு வார்த்தையில் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழு ஈடுபட்டிருக்கும்போதே, பிரதமர் அலுவலகம் சார்பில் தனியாக ஓர் இணை பேச்சுவார்த்தை நடந்தது என்பதை, பாதுகாப்புத் துறையின் அப்போதைய செயலாளர் மோகன் குமார், அப்போதைய துறை அமைச்சர் மனோகர் பாரிக்கருக்கு கைப்பட குறிப்பாக எழுதியதை தி இந்து அம்பலப்படுத்தியது.
டெல்லி மரபுகளுக்கு மாறாக அன்று காலை 10.30க்கே பத்திரிகையாளர் சந்திப்பு நடத்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் 30,000 கோடி ரூபாயை திருடி அம்பானிக்குக் கொடுத்துவிட்டார் என்பது பாதுகாப்புத் துறை அமைச்சக ஆவணங்களில் இருந்து தெளிவாகத் தெரிகிறது” என்று மிகக் கடுமையாக சாடினார்.
இந்தப் பின்னணியில் மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பிய நிலையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தப் பிரச்சினைக்கு தாமாகவே முன் வந்து பதில் அளித்தார்.
“பத்திரிகை செய்தியை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரச்சினையை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அப்போதைய பாதுகாப்புத் துறைச் செயலாளர் அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு எழுதிய அந்தக் குறிப்பைத் தொடர்ந்து, பாதுகாப்புத் துறை அமைச்சரும் அதற்கு விளக்கம் அளித்திருக்கிறார். அதுவும் தன் கைப்பட எழுதியிருக்கிறார்.
’பிரதமர் அலுவலகமும், பிரெஞ்சு அதிபர் அலுவலகமும் இந்த விவகாரத்தின் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதாகத் தெரிகிறது. துறைச் செயலாளர் இதுகுறித்து பிரதமரின் முதன்மைச் செயலாளரிடம் பேசி தீர்வு காணலாம்’ என்று அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் பாரிக்கர் குறிப்பு எழுதியிருக்கிறார். அந்தப் பத்திரிகை உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டுமென்று நினைத்திருந்தால் பாதுகாப்புத் துறை அமைச்சரின் பதிலையும் வெளியிட்டிருக்க வேண்டும்.
பிரதமர் அலுவலகம் ரஃபேல் விவகார பேச்சுவார்த்தையில் அக்கறை கொண்டு விசாரிப்பதை எல்லாம் குறுக்கீடு என எடுத்துக் கொள்ளக் கூடாது” என்று பதில் அளித்தவர் தொடர்ந்து,
“இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் தேவையில்லாமல் கிளப்புகிறார்கள். ரஃபேல் பற்றி ஏற்கனவே போதுமான அளவு விளக்கம் கொடுத்தாகிவிட்டது. ஆனால் செத்துப் போன குதிரையை சவுக்கால் அடித்து எழுப்பிவிடலாம் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்றார்.
இதுகுறித்து அந்தச் செய்தியை அம்பலப்படுத்திய ஹிந்து என். ராமிடம் ஏ.என்.ஐ. சார்பில் அப்போது கேட்கப்பட்டபோது, “என்னுடைய செய்திக்கு துறைச் செயலாளரின் குறிப்புதான் தேவை. பாதுகாப்புத் துறை அமைச்சரின் பதில் குறிப்பை வெளியிடுவது பற்றி நான்தான் முடிவு செய்ய வேண்டும். இப்போது அந்த ஆவணத்தின் தொடர்ச்சியை வெளியிட்டு நான் வெளியிட்ட ஆவணம் அதிகாரபூர்வமான உண்மையான ஆவணம் என்பதை உறுதிப்படுத்திவிட்டார்கள்.
மேலும், பாரிக்கர் அளித்த பதிலில் அவர்கள் கண்காணிக்கிறார்கள் என்று கூறவில்லை. கண்காணிப்பது போல் தெரிகிறது என்று சொல்லியிருக்கிறார். ரஃபேல் விவகாரத்தில் இந்திய அதிகாரபூர்வ குழுவைத் தாண்டி பிரதமர் அலுவலகம் பின்னால் இருந்து ஒரு இணை பேச்சுவார்த்தையைத்தான் நடத்தியிருக்கிறது” என்றார்.
இந்தப் பின்னணியில்தான் இன்று ரஃபேல் வழக்கின் இறுதித் தீர்ப்பும் உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக