வியாழன், 28 நவம்பர், 2019

மகாராஷ்டிரா உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி ஏற்பு (வீடியோ)


nakkheeran.in - பா. சந்தோஷ் : மஹாராஷ்டிரா மாநில முதல்வராக
பதவியேற்றார் உத்தவ் தாக்கரே. மும்பை சிவாஜி பூங்கா மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, உத்தவ் தாக்கரேவுக்கு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
பதவியேற்றவுடன் பொதுமக்கள் முன்னிலையில் தரையில் விழுந்து வணங்கினார்.  பதவியேற்பு விழாவில் திமுக கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், திமுகவின் மக்களவை குழுத்தலைவர் டி.ஆர்.பாலு, மஹாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், சிவசேனா கட்சியின்  ஆதித்ய தாக்கரே, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள், மக்களவை உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனிடையே உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழாவில் பங்கேற்க இயலாததற்கு வருத்தம் தெரிவிப்பதாகக்கூறி முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி கடிதம் அனுப்பியுள்ளனர். முதல்வர் உத்தவ் தாக்கரே நவம்பர் 3- ஆம் தேதி சட்டப்பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் கெடு விதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் முதல்வருக்கு 166 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ள நிலையில், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை எளிதில் நிரூபிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக