புதன், 27 நவம்பர், 2019

திருப்தி தேசாய் சபரிமலை செல்ல பாதுகாப்பு வழங்க முடியாது!' - கைவிரித்த கொச்சி போலீஸ்?


சபரிமலை செல்ல வந்த திருப்தி தேசாய் சிந்து ஆர் - விகடன்  : சபரிமலையில் அமைதியாக நடக்கும் மண்டல மகரவிளக்கு காலத்தை அலங்கோலப்படுத்த சிலர் நினைக்கிறார்கள். அதற்கு கேரள அரசு இடம் கொடுக்காது. சட்டம் - ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த வேண்டும் என சிலர் விரும்புவதாக இதன்மூலம் புரிந்துகொண்டோம். சபரிமலை சந்நிதானத்தில் தரிசனம் செய்வதற்காக சமூக செயற்பாட்டாளர் திருப்தி தேசாய் விமானம் மூலம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கொச்சி வந்தடைந்தார். அவருடன் ஹாயா பாண்டே, காம்ப்லர் ஹரிநாக்‌ஷி, மீனாக்‌ஷி ஷிண்டே, மனிஷா ஆகியோர் வந்துள்ளனர். கடந்தமுறை சபரிமலை சந்நிதானத்தில் தரிசனம் செய்த கேரளத்தைச் சேர்ந்த பிந்து அம்மிணியும் விமான நிலையத்திலிருந்து திருப்தி தேசாயுடன் சேர்ந்துகொண்டார். சபரிமலை செல்லுவதற்கான உச்ச நீதிமன்ற ஆணை தங்களிடம் உள்ளதாக பிந்து அம்மிணி தெரிவித்தார். இந்த நிலையில், கொச்சி சிட்டி போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் பிந்து அம்மிணியின் முகத்தில் ஒருவர் திடீரென மிளகாய்ப் பொடி ஸ்ப்ரே அடித்தார். ஹிந்து ஹெல்ப் லைன் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீநாத் மிளகாய் ஸ்ப்ரே அடித்ததாக போலீஸார் பிடித்து விசாரணை நடத்திவருகின்றனர்.



பிந்து



பிந்து
இந்த நிலையில், கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,``பி.ஜே.பி ஆட்சி நடக்கும் மஹாராஷ்டிராவிலிருந்து ஒரு பெண்கள் குழு சபரிமலை செல்வதற்காக கொச்சி வந்துள்ளது. அதை முன்பே அறிந்தது போன்று ஒரு கூட்டம் கொச்சியில் காத்திருக்கிறது. அவர்கள், பெண் மீது மிளகாய் ஸ்ப்ரே அடிக்கிறார்கள். ஒரு பெண் மீது மிளகாய் ஸ்ப்ரே அடித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. பொது வெளியில் பெண்ணின் மீது மிளகாய் ஸ்ப்ரே அடிக்க அவருக்கு என்ன உரிமை இருக்கிறது?





அங்கு நடந்த நிகழ்வுகளைப் பார்க்கும்போது இது ஏற்கெனவே திட்டமிட்ட திரைக்கதை என நாங்கள் கருதுகிறோம். இதன் மூலம் சபரிமலையில் அமைதியாக நடக்கும் மண்டல மகரவிளக்கு காலத்தை அலங்கோலப்படுத்த சிலர் நினைக்கிறார்கள். அதற்கு கேரள அரசு இடம் கொடுக்காது. சட்டம் - ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த வேண்டும் என சிலர் விரும்புவதாக இதன்மூலம் புரிந்துகொண்டோம். திருப்தி தேசாய் வருவது குறித்து காவல்துறைக்குக் கூட தெரியவில்லை. இவர்களுக்கு எப்படி தெரிந்தது? சபரிமலையில் 2015-2016 காலகட்டத்தில் வந்ததைவிட அதிகமான பக்தர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு அசெளகர்யத்தை ஏற்படுத்தவே இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேற்றப்படுகின்றன" என்றார்.



கடகம்பள்ளி சுரேந்திரன்



கடகம்பள்ளி சுரேந்திரன்
இதற்கிடையில், திருப்தி தேசாய் குழுவினர் சபரிமலை செல்ல பாதுகாப்பு வழங்க இயலாது என போலீஸார் தங்களிடம் தெரிவித்ததாக கொச்சி கமிஷனர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய ஐயப்ப கர்மசமிதியினர் தெரிவித்தனர். இதனால், தங்கள் போராட்டத்தைக் கைவிடுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். போராட்டம் நடப்பதால் பிரச்னை பெரிதாவதாகக் கூறி போலீஸார் பாதுகாப்பு மறுத்ததாகக் கூறப்படுகிறது. அதே சமயம் கொச்சி விமான நிலையம் செல்ல பாதுகாப்பு வழங்குவதாக போலீஸார் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக