சனி, 16 நவம்பர், 2019

மாற்றப்படும் திமுக மாசெக்களின் பட்டியல்!

மின்னம்பலம் :  மொபைல் டேட்டா ஆன் செய்ததும் வாட்ஸ்அப் ஆன்லைனில் வந்தது.
“உள்ளாட்சித் தேர்தலுக்காக இருபெரும் கட்சிகளான திமுகவும் அதிமுகவும் மிக வேகமாக தயாராகிக் கொண்டிருக்கின்றன. அதேநேரம் உள்ளாட்சித் தேர்தல் எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் உறுதியாக நடக்குமா என்ற சந்தேகமும் இரு கட்சி நிர்வாகிகளிடையே பலமாக பேசப்பட்டு வருகிறது.
இப்போது வந்தாலும் எப்போது வந்தாலும் எதிர்கொள்ள தயார் என்ற ரீதியில்தான் திமுகவும் அதிமுகவும் உள்ளாட்சித் தேர்தல் பணிகளை செய்து வருகின்றன. வரையறைகள் செய்வதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதை சுட்டிக்காட்டி உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப் போடுவதற்கு அதிமுக அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது என்று நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார். அதிமுக தரப்போ, இரண்டு இடைத்தேர்தல் வெற்றி என்ற சூட்டோடு சூடாக உள்ளாட்சித் தேர்தலை அதிகாரபலம் கொண்டு நடத்தி முடித்து விடலாம் என்ற திட்டத்தில் இருப்பதாக தெரிகிறது.

இந்த உள்ளாட்சித் தேர்தல் விவாதங்கள் ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க பொதுக்குழுவுக்கு பிறகு திமுகவின் மாவட்ட செயலாளர்கள் விவகாரத்தில் சில மாற்றங்களை ஸ்டாலின் செய்யப்போவதாக பேச்சு உறுதியாக எழுந்துள்ளது..
இதுபற்றி ஸ்டாலினுக்கு நெருக்கமான திமுக வட்டாரங்கள் பேசியபோது, ‘சில மாவட்டச் செயலாளர்களுக்கு மாநில அளவிலான பொறுப்பு என்ற பெயரில் அவர்களை மாவட்டத்தில் இருந்து விடுவிக்கும் முயற்சியில் இருக்கிறார் ஸ்டாலின். அதேநேரம் உடல்நலம், தீவிர செயல்பாடின்மை ஆகிய காரணங்களை முன்னிட்டு மேலும் சில மாவட்டச் செயலாளர்களை விடுவித்துவிட்டு அந்த இடத்துக்கு புதிய மாவட்ட செயலாளர்களை நியமிக்கும் எண்ணமும் ஸ்டாலினுக்கு வந்துவிட்டது. அதற்கான பட்டியலையும் அவர் தயார் செய்துவிட்டார் என்கிறார்கள்.

உதாரணமாக திருவள்ளூர், கோவை, வேலூர், வடசென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் சில மாவட்டச் செயலாளர்கள் விடுவிக்கப்படுவது உறுதி என்கிறார்கள் ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள். இவர்களுக்கு பதில் புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனப் பட்டியலும் தயாராகவே இருக்கிறது. ஒருவேளை உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டால் இந்தப் பட்டியல் உடனடியாக வெளிவரும். உள்ளாட்சித் தேர்தல் வேக வேகமாக நடத்தி முடிக்கப்படும் சூழ்நிலை உருவானால் உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு இந்த மாவட்ட செயலாளர் மாற்றங்களை ஸ்டாலின் அறிவிக்கக் கூடும்’ என்கிறார்கள்.
இலக்கு வைக்கப்பட்டுள்ள மாவட்டச் செயலாளர்களில் சிலர் மிக மூத்தவர்கள். இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஏற்ற குதிரைகள் வேண்டும் என்ற அடிப்படையில் இந்த மாற்றங்கள் முதல்கட்டமாக நடத்தப்படுகின்றன என்றும் இதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து புகாருக்கு உள்ளான மாவட்டச் செயலாளர்கள் சட்டமன்ற தேர்தலுக்குள் மாற்றப்படுவார்கள் என்றும் ஸ்டாலினுக்கு நெருக்கமான வட்டாரத்தில் கூறுகிறார்கள்.
ஏற்கனவே பலமுறை நிர்வாகிகளிடம் ஆய்வு நடத்தி, நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டறிந்து அதன் மீது நடவடிக்கை எடுக்கிறேன் என்று செயல் தலைவராக இருந்த காலத்திலிருந்தே ஸ்டாலின் வாக்குறுதி அளித்து வருகிறார். ஆனால் கட்சி ரீதியான நடவடிக்கை என்பதில் ஸ்டாலின் மிக மிக நிதானமாகவே செயல்பட்டு வந்திருக்கிறார். இந்த முறை பொதுக்குழு வில் கட்சி நலனுக்காக சர்வாதிகாரியாக மாறுவேன் என ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார். இதன் அறிகுறியாக ஆறு மாவட்ட செயலாளர்கள் மாற்றப்படலாம் என்பதே உள்ளாட்சித் தேர்தலை தாண்டிய திமுகவில் உட்கட்சி அப்டேட்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ்அப்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக