திங்கள், 18 நவம்பர், 2019

ராமேஸ்வரத்தில் பிரம்மாண்ட மணல் அள்ளும் கப்பல்... அச்சுறுத்தும் கடல் அரிப்பு

கடலில் மணல் அள்ள பயன்படுத்தப்பட உள்ள கப்பல்.
கடல் மணல் எடுக்க பயண்படும் குழாய்கள்ராமேஸ்வரம் கோயில்கடலில் மணல் அள்ள பயன்படுத்தப்பட உள்ள கப்பல். ( உ.பாண்டி ) `ரூ.70 கோடி செலவு; வந்தது பிரம்மாண்ட மணல் அள்ளும் கப்பல்!’- 
vikatan.com - இரா.மோகன் : கப்பல் மூலம் கடலில் தோண்டும் மணலினை குழாய்கள் மூலம் கடற்கரை பகுதிக்கு கொண்டு வந்து பின்னர் அவற்றை வாகனங்கள் மூலம் குந்துகால் துறைமுகத்திற்கு கொண்டு செல்லவும் திட்டமிட்டுள்ளனர். ராமேஸ்வரம் கோயில் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் ராமேஸ்வரம் கடலில் இருந்து மணல் எடுப்பதற்கு பொதுமக்கள், மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
பாம்பன் அருகே உள்ள குந்துகாலில் 70 கோடி ரூபாய் செலவில் புதிதாக துறைமுகம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த துறைமுகத்தின் பணிகளுக்கு தரமற்ற மணலினை பயன்படுத்துவதாக மீனவர்கள் குற்றச்சாட்டு கூறி வந்தனர். மேலும் ஒப்பந்தகாரர் பணிகளுக்கு தேவையான மணலினை வெளியில் இருந்து கொண்டு வராமல் குந்துகால் பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் இருந்து எடுப்பதாகவும், இதனால் குந்துகால் பகுதியில் கடல் அரிப்பு ஏற்படும் நிலை உருவாகும் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் கடற்கரையில் இருந்து துறைமுக பாலம் வரை வாகனங்கள் சென்று வரும் பகுதியானது பள்ளமாக உள்ளது. இந்த பள்ளத்தினை நிரப்ப கடற்கரையில் இருந்து பாலம் வரை மணல் கொட்டப்பட வேண்டும். இதற்காக ராமேஸ்வரம் கடலில் இருந்து மணலை எடுத்து செல்ல ஒப்பந்தகாரர்கள் திட்டமிட்டுள்ளனர்.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தின் வடக்கு பகுதியில் ஆழம் குறைந்த நிலையில் காணப்படும் கடல் பகுதியில் இருந்து மண் தோண்டும் கப்பல் மூலம் மணல் எடுக்க திட்டமிட்டுள்ளனர் அவர்கள். கப்பல் மூலம் கடலில் தோண்டும் மணலினை குழாய்கள் மூலம் கடற்கரை பகுதிக்கு கொண்டு வந்து பின்னர் அவற்றை வாகனங்கள் மூலம் குந்துகால் துறைமுகத்திற்கு கொண்டு செல்லவும் திட்டமிட்டுள்ளனர். இதற்கான பணிகளை மேற்கொள்ள மண் தோண்டும் கப்பல், மணல் அள்ளும் வாகனம், கடலில் இருந்து மணலினை கரைக்கு கொண்டு வர பயன்படும் இரும்பு குழாய்கள் ஆகியன ராமேஸ்வரம் கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. துறைமுகத்தின் வடக்கு பகுதியில் இருந்து சில நூறு அடிகளில் ராமநாதசுவாமி கோயிலும், கடற்கரையின் அருகாமையில் ஏராளமான வீடுகளும், தங்கும் விடுதிகளும் உள்ளன. கடல் அரிப்பினால் இவற்றிற்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க ராட்சஷ பாறைகள் மூலம் தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த கடல் பகுதியில் இருந்து பல நூறு டன் அளவில் மணல் அள்ள திட்டமிட்டிருப்பதால் இந்த பகுதியில் கடல் அரிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
இதனால் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள கோயில் உள்ளிட்ட நகர் பகுதி முழுமையும் கடல் கொந்தளிப்பில் சிக்கும் ஆபத்தும் உள்ளது. கடலில் இருந்து எடுக்கப்படும் மணலை கரையோரம் கொட்டி கடல் அரிப்பினை தடுப்பதற்கு பதிலாக, கடலில் பள்ளம் தோண்டி அதன் மூலம் கடல் நீர் ஊருக்குள் புகும் நிலையை ஒப்பந்ததாரர்கள் ஏற்படுத்த உள்ளனர். இதற்கு துறைமுக துறை அதிகாரிகளும் அனுமதி அளித்து துணை போய் உள்ளனர் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ”கரைப்பகுதியில் இருந்து 15 கி.மீ தூரம் உள்ள கடல் பகுதியில் சேது சமுத்திரம் திட்டத்திற்காக கடலினை தோண்ட துவங்கிய போது ராமேஸ்வரம் கோயில் மற்றும் பவளப்பாறைகள் பாதிக்கப்படும் என கூறப்பட்டு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் வெறும் 300 மீட்டருக்கும் குறைவான தூரத்தில் ஆளும் கட்சியினரின் ஆதரவுடன் பல நூறு டன் அளவிலான கடல் மணல் எடுத்து குந்துகால் துறைமுகத்திற்கு கொண்டு செல்வதால் ராமேஸ்வரம் நகரும் கோயிலும் கடல் அரிப்பினால் பாதிக்கப்படும். எனவே ராமேஸ்வரம் கடலில் இருந்து மணல் எடுப்பதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என சி.ஐ.டி.யு கடல் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி கோரியுள்ளார்.
vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக