வியாழன், 28 நவம்பர், 2019

மராட்டிய சிவசேனா கடந்து வந்த பாதை ...

JP Prakash : காங்கிரஸ் கட்சியானது சிவசேனைக்கு ஆதரவு கொடுத்ததை,
ஹிந்துத்வாவுக்கு ஆதரவு போன்று சிலர் திரிகிறார்கள்.. சிவசேனை ஒன்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பால் உருவாக்கப்பட்ட ஹிந்துத்துவா கட்சி கிடையாது..
சங்பரிவார் என்று அழைக்கப்படும் ஆர்எஸ்எஸ் பிஜேபி பஜ்ரங்தள் விஹெச்பி போன்ற இயக்கங்களின் பட்டியலில் சிவசேனை கிடையாது..
சங்பரிவார் அமைப்புகளின் ஒரே குறிக்கோள் பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவது..
ஆனால், சிவசேனையை பால்தாக்கரே ஆரம்பித்தது மகாராஷ்டிராவில் மராட்டிய மக்களுக்கான உரிமைகளுக்காக போராட.. குறிப்பாக மும்பை மாநகரில் அதிகளவில் குஜராத்திகள் மார்வாடிகள் மற்றும் தென்னிந்தியர்கள் குடியேறி, வேலைவாய்ப்புகளில் சொந்த மாநில மராட்டிய மக்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையில் அவர்களின் உரிமைகளுக்காக போராட பால்தாக்ரேவால் துவக்கப்பட்டது தான் சிவசேனை..
பிஜேபி RSS போன்ற சங்பரிவார் அமைப்புகளின் மேல்மட்ட தலைவர்களாக பிராமணர்கள் மட்டும் தான் இருப்பார்கள், ஆனால், சிவசேனா கட்சியை உருவாக்கிய பால்தாக்கரே மற்றும் அதன் முக்கியத் தலைவர்களும் பிராமணர்கள் கிடையாது, மராட்டிய மாநில ஓபிசி பிரிவு மக்கள் தான் அதிகளவில் சிவசேனையில் இருக்கிறார்கள்..

இடையில், சில சமயங்களில் மதரீதியான கலவரங்களில் சிவசேனா தொண்டர்கள் ஈடுபட்டது உண்டு.. குறிப்பாக மும்பையில் முஸ்லிம் நிழல் உலக தாதாக்கள், ஹாஜி மஸ்தான், தாவுத் இப்ராஹிம் போன்றோர் செல்வாக்கு செலுத்திய காலங்களில்…
ஒருவேளை சிவசேனை மதரீதியான அடையாளத்தை கையில் எடுக்காமல், முழுக்க முழுக்க இனரீதியான, மொழி ரீதியான அடையாளத்தை கையிலெடுத்து, அம்மாநில முஸ்லிம்கள் மற்றும் பட்டியல் பிரிவு மக்களை சேர்த்து போராடியிருந்தால், மகாராஷ்டிராவில் தனிப்பெரும் கட்சியாக சிவசேனை எப்போதோ உருவாகி இருக்கக்கூடும்.. சிவசேனையினர் உயர்வாகக் கருதும் சத்ரபதி சிவாஜியின் அமைச்சரவையிலும் அவரின் மராத்தா ராணுவத்தில் தளபதிகளாகவும் போர் வீரர்களாகவும் பல முஸ்லிம்கள் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..

இப்பொழுது கூட முதல்வர் பதவிக்கு சிவசேனை வரவிடாமல் பிஜேபியினர் தடுப்பதாக செய்திகள் பரவியதும், மும்பை மாநகரில் உள்ள குஜராத்தி மற்றும் மார்வாடி பெரும் தொழிலதிபர்கள் அச்சமடைந்து, பிஜேபிக்கு அழுத்தம் கொடுத்து தேவையற்ற பிரச்சினைகளை இங்கே உருவாக்காதீர்கள், என்று கேட்டுக் கொண்டதாக செய்தி உண்டு..
சிவசேனையினர் மிரட்டுகிறார்கள் என பிஜேபியின் தேவேந்திர பட்னாவிஸ் குறிப்பிட்டது இதைத்தான்..
வருங்காலத்தில் சிவசேனை, தங்களது மத அபிமானங்களை குறைத்து, மராட்டிய மாநில மக்களின் உரிமைகளுக்காக, மராத்திய மொழி வளர்ச்சிக்காக உழைத்து, அனைத்து தரப்பினரின் ஆதரவையும் பெறும்மா என்பதை பொறுத்துத்தான் பார்க்கவேண்டும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக