திங்கள், 11 நவம்பர், 2019

வன்னியர் சமுதாய மூத்த தலைவர் ஏ.கே.நடராஜன் காலமானார்: அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்

vannier-community-senior-leader.hindutamil.in/ : சென்னை . வன்னியர் சமுதாயத்தின் மூத்த தலைவர் ஏ.கே.நடராஜன் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
வன்னியர் சமுதாயத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் ஏ.கே.நடராஜன் (86).
காஞ்சிபுரம் மாவட்டம் அரும்புலியூரில் 1936-ம் ஆண்டு பிறந்த நடராஜன், லார்சன் - டூப்ரோ (எல் அண்டு டி) நிறுவனத்தின் நிர்வாகப் பிரிவு உயர்பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர். வன்னியர் அமைப்பை நடத்தி வந்த இவர், 1980-ம் ஆண்டில் 20-க்கும் மேற்பட்ட வன்னிய அமைப்புகளை ஒருங்கிணைத்தார். வன்னிய சங்கத்தின் நிறுவனராக ராமதாஸ் இருந்தார். சங்கத்தின் முக்கியப் பொறுப்பில் இருந்த நடராஜன் போராட்டங்களை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட பணிகளை பார்த்தார். அப்போது ராமதாஸ் - நடராஜனை இரட்டையர்கள் என்று வன்னியர்கள் அழைத்தனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.
ஏ.கே.நடராஜன் ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் நேற்று சென்னையில் காலமானார்.

ஏ.கே.நடராஜனின் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி:
ஏ.கே.நடராஜன் 60 ஆண்டுகளுக்கு மேலாக சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு, பொது வாழ்வில் தன்னையே முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றிய பெருமைக்குரியவர். அவரது மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்:
வன்னியர் சமுதாயம் சமூக, கல்வி முன்னேற்றம் அடைவதற்குப் பெரும் பாடுபட்ட ஏ.கே. நடராஜன், அச்சமுதாயத்தில் உள்ள பல குடும்பங்களை வாழ வைத்தவர். அவரை இழந்து வாடும் அவரதுகுடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாமக நிறுவனர் ராமதாஸ்:
ஏ.கே.நடராஜன் காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்தேன். வன்னியர்களுக்கு 20 விழுக்காடு தனி இடஒதுக்கீடு கோரி தொடக்க காலத்தில் நடத்தப்பட்ட சாலை மறியல்போராட்டத்துக்கு உறுதுணையாக இருந்தவர். எனது மதிப்புக்குரியவர்களில் ஒருவர். அவரைஇழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனதுஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளிலும், சமூக அரங்கிலும், மேன்மை அடைவதற்கு தமது வாழ்க்கையின் பெரும்பகுதியை அர்ப்பணித்தவர் ஏ.கே.நடராஜன். அவரது மறைவால்வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அமமுக பொதுச்செயலாளர் தினகரன்:
ஏ.கே.நடராஜன் மறைந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அந்த சமூக மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது அறிக்கைகளில் ஏ.கே.நடராஜன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக