திங்கள், 11 நவம்பர், 2019

சந்தையூர் சுவரின் புனிதத்துக்காக போராடியவர்கள் ..இன்று பாபர் மசூதி மதசார்பற்ற மாணிக்கங்களாக காட்சி ...

LRJ : “தெளிவான/உறுதியான/நேர்மையான” இந்துத்துவ எதிர்ப்பென்பது
தொலைதூர உத்தரப்பிரதேசத்து பாபர் மசூதி விவகாரத்தில் மட்டும் வெளிப்படுவதல்ல; நம் தமிழ்நாட்டின் சந்தையூர் கோவில் சுவர் விவகாரத்திலும் காட்டப்படவேண்டிய கறார்த்தனம் தான்.
சந்தையூர் அம்மன்கோவில் சுவர் புனிதமானது; இடிக்கப்படவே கூடாத இந்துமத நம்பிக்கை என்று தெருவுக்கு வந்து போராட்டம் நடத்தியவர்களிடமும் அதற்காக உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்கு நடத்தியவர்களிடமும் இந்துத்தவம் உறைந்தே இருக்கிறது. உள்ளுறை பொருளாய் மட்டுமல்ல அவர்களை இயக்கும் அடிப்படை அரசியல் உந்துசக்தியாகவும்.
இதற்கெல்லாம் சமகால சாட்சியமாய் இருந்து பார்த்துப்பழகியவர்களுக்கு நேரத்துக்கேற்ற கோஷங்களில், அதுவும் காரியத்தேவைக்கேற்ற “கொளுகை” நிலைப்பாடுகளில், வீராவேச வாய்ச்சவடால்களில் பூரிக்கவோ, புளகாங்கிதப்படவோ, பூஜிக்கவோ பெரிதாய் ஒன்றுமில்லை.
பெரும்பான்மை தமிழர்கள் முன் இருக்கும் அரசியல் தேர்வுகளில் எது கூடுதல் நன்மை; குறைந்த தீமை என்று பகுத்தாய்ந்து ஏற்பதைத்தவிர.
உலக அரசியலில் இது post-truth era என்கிறார்கள்.


அது இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் கூடுதலாய் பொருந்தும். கடந்த தமிழக சட்டமன்றத்தேர்தலில் கலைஞருக்கு எதிராக வீணாய்ப்போன விஜயகாந்த்தையெல்லாம் முதல்வராக்க அவருக்கும் அவரது மனைவிக்கும் சேர்த்து பல்லாக்குதூக்கிய “முற்போக்காளர்கள்”, சந்தையூர் அம்மன் கோவில் சுவற்றின் “புனிதம்” காக்க சட்டப்போர் நடத்தி சன்னதம் வந்து ஆடியவர்கள் இன்று திடீரென பாபர் மசூதி தீர்ப்பை எதிர்க்கும் மதசார்பின்மை மாணிக்கங்களாக ஒளிர முடிவதெல்லாம் நம் தமிழ்நாட்டில் மட்டுமே சாத்தியம்.

ஏனெனில் உலக அரசியலில் இன்று பெரிதாய் பேசப்படும் post-truth era என்பதெல்லாம் இங்கே 1977 முதலே அரங்கேறி அரியாசனமும் ஏறி ஆட்சியும் செய்து அதன் அந்திமக்காலத்தில் வந்து நிற்கிறது.
2016 இல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு அரசியலை 50 ஆண்டுகாலம் பின்னோக்கி இழுக்க ஒத்துழைத்த trojan horseகளை மூன்றே ஆண்டுகளில் உங்களால் பாபர் மசூதி இடிப்பை எதிர்க்கும் சமரசமற்ற அரசியல் தலைமைகள் என்று கொண்டாட முடியும் என்றால் ரஜினிகாந்தும் கமலஹாசனும் தமிழ்நாட்டில் நல்லாட்சி தருவார்கள் என்று நம்பும் அவர்களின் ரசிகர்களை குறைசொல்ல ஒன்றுமில்லை.
இறுதியாக இது உண்மைகளுக்கான காலமல்ல என்பதைப்போலவே உன்னதங்களுக்கான காலமும் அல்ல. உன்னதங்களின் காலம் முடிந்துவிட்டது என்கிற நிதர்சனக் கசப்பை தொண்டைக்குள் தாங்கித் தடுத்துக்கொண்டு, உயிரை கையில் பிடித்தபடி இருப்பதையேனும் இழக்காமலிருக்க என்ன வழி என்பது மட்டுமே இனி யதார்த்த அணுகுமுறையாக இருக்கமுடியும்.
அரசியலில். திடீர் குபீர் புரட்சிகளின் பேரால் இருப்பதையும் பறிகொடுப்பதில் எந்த பயனுமில்லை. ஏனெனில் இவற்றை அடைய இந்த தமிழ்சமூகம் ஏராளமான விலை கொடுத்திருக்கிறது. அவர்களை வழிநடத்த ஆனப்பெரிய தலைமைகளை காலம் கொடையளித்தது.

முற்றாய் விலைபோன சமூகமும் போதுமான வலுவற்ற தலைமைகளுமான இன்றையை தமிழ் சூழலில் இனி “மெரீனா புரட்சிகள்” மட்டுமே சாத்தியம். அதனால் ஹிப் ஹாப் ஆதிகளுக்கும் ஆர் ஜே பாலாஜிகளுக்கும் வேண்டுமானால் சினிமா வாய்ப்புகிட்டலாமே தவிர அரசியலில் ஐந்து பைசாவுக்கு பிரயோஜனமில்லை.
Mani Mathivannan : தலைவரே ஒடுக்கப்பட்ட மக்கள் சிறுபான்மையினரைக் கட்சியின் உட்கூறிலிருந்து தவிர்த்து விட்டால் கட்சி ஆதிக்க இடைச்சாதியினரின் கட்சியாகவே மிஞ்சும். கொளுகை, உன்னதம் எல்லாம் இல்லையென்றால் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் வித்தியாசமே இல்லாமல் போய்விடும். இருக்கிறது என்பதனால்தான் இக்கேள்விகள் எழுகிறது. சந்தையூர்க்காரர்களை விட்டு விடுங்கள் கேள்வியெழுப்பும் இஸ்லாமியருக்கு பதில் சொல்லுங்கள். அய்யா திராவிடர் இயக்க அடையாளமென்பது இந்துத்துவ எதிர்ப்பை தனது டிஎன்ஏவில் கொண்டது. வைகை சுரேஷ் : உண்மை. இதோ பாஜகவின் பார்வை அதனு அடுத்த அஜன்டாவான "பொது சிவில் சட்டம் " மீது திரும்பி உள்ளது. ஏறத்தாழ இந்த மத சட்டதிட்டங்களையே பொது சட்டங்களாக மாற்ற துடிக்கிறது. உண்மையில் போராட வேண்டியதும், எதிர்க்க வேண்டியதும் இத்தகைய விசயங்களைத்தான் சுந்தர்சுந்தர் : பதிவில் தொக்கி நிற்கும் சோகம் விரக்தி புரிந்துகொள்ள முடிகிறது.நாட்டை, மனிதனை நேசிப்பவர்கள்,உண்மைக்கு நெருக்கமாக இருப்பவர்கள் இவர்களின் வலியை பிரதிபலித்துள்ளீர்கள்.ஒளியின்றி வீதிகளில் இருள் படரும் காலம் வராதிருக்க பிரார்த்திபதைத் தவிர வேறொன்று இருப்பதாகத் தோன்றவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக