திங்கள், 25 நவம்பர், 2019

நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் .. வீடியோ


மாலைமலர் :  மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியமைத்ததை எதிர்த்து சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சியமைக்கும் அளவிற்கு பெரும்பான்மை  கிடைக்கவில்லை. கூட்டணி ஆட்சியமைப்பதிலும் கட்சிகளிடையே கருத்து வேறுபாடு நிலவியதால் ஜனாதிபதி ஆட்சி  அமல்படுத்தப்பட்டது.
இதையடுத்து சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டு கூட்டணி ஆட்சி  அமைப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீர் திருப்பமாக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றார். தேசியவாத  காங்கிரசின் அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். பாஜகவுடன் சேர்ந்து ஆட்சியமைத்த அஜித் பவாருக்கு தேசியவாத  காங்கிரஸ் தலைமை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அவரது சட்டமன்ற கட்சி தலைவர் பதவியை பறித்தது. மேலும், மகாராஷ்டிரா மாநிலத்தில் தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து  சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு தொடர்பான  விசாரணை நடைபெற்று வருகிறது. 


இந்நிலையில், மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியமைத்ததை கண்டித்து சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள்  பாராளுமன்ற வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஜனநாயக படுகொலை என்ற வாசகங்கள் எழுதிய பேனர்களுடனும் பதாகைகளுடனும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக  ஆட்சியமைக்க ஒப்புதல் அளித்த ஆளுநரின் முடிவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.   

இதையடுத்து மகாராஷ்டிரா விவகாரம் காரணமாக பாராளுமன்றத்திலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.  இதன் காரணமாக இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக