வெள்ளி, 22 நவம்பர், 2019

கரூர் பள்ளி மாணவி கோமதி இறப்பில் சந்தேகம் .. மறைக்கப்பட்ட செய்திகள்

பள்ளிக்கூடத்தில் வெறும் ரூ.400 கட்டாததால், தினமும் எல்லார்
முன்னாடியும் திட்டி அவமானப்படுத்துறாங்க. இன்னைக்காச்சு குடுங்களேன்' என கெஞ்சிய 12-ஆம் வகுப்பு பயாலஜி படிக்கும் தனது 17வயது மகள் கோமதியை, டைல்ஸ் ஒட்டும் கூலித்தொழிலாளியான ஆனந்தன் சமாதானம் செய்து பள்ளிக்கு அனுப்பியபோது, மணி காலை 8:45.
அடுத்த 45 நிமிடத்தில் சகோதரன் மணி கண்டனுக்கு, '"கோமதி திடீரென மயக்கம் போட்டு விழுந்துட்டா. அரசு மருத்துவமனைக்கு கொண்டு போறோம்' என செல்போனில் அழைப்பு வந்தது. அப்பாவுக்குத் தகவல் சொல்லிவிட்டு, அம்மா ராஜேஸ்வரியையும் கூட்டிக்கொண்டு விரைந்தார் மணிகண்டன். அதிர்ச்சியும் பதட்டமுமாக நின்றிருந்தவர்களிடம் கோமதி வரும்வழியில் இறந்து விட்டதாக தகவல்சொன்னார் கரூர் மருத்துவக் கல்லூரி டீன் ரோசி வெண்ணிலா.
இதயமே வெடித்ததுபோல் அவர்கள் கதறியழுது கொண்டிருந்த நேரத்தில், கலெக்டர் அன்பழகன், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர்வந்து ஆறுதல் கூறினர். அடுத்த சில மணிநேரங்களில் மாவட்ட எஸ்.பி. பாண்டிய ராஜன், டி.எஸ்.பி. சுகுமார் தலைமையிலான டீமை இறக்கி சடலத்திற்கு எரியூட்டி இறுதிச்சடங்கையும் முடித்தனர்.

இப்படி அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் என எல்லோரும் காட்டும் மும்முரத்தால் சந்தேகமடைந்த கோமதியின் பெற்றோர், மகளின் சாவில் மர்மம் இருப்பதாக புகார் கொடுத்திருக்கின்றனர்.
கோமதியின் தந்தை ஆனந்தனிடம் நாம் பேசினோம், "நல்ல படிப்பாளி புள்ள சார். அரசாங்க வேலைக்குப் போய் எங்களைக் காப்பாத்துவேன்னு அடிக்கடி சொல்லுவா. அதான், அரசாங்கமே எம்பொண்ணை எரிச்சிடுச்சு'' கோவென்று அழுதவர் மீண்டும் பேசத்தொடங்கி, 'சொந்தக்காரங்க வரட்டும். எங்க வழக்கப்படி புதைக்கணும்னு எவ்வளவோ கெஞ்சினோம். கேட்கலையே. இந்த அமைச்சர், அதிகாரிங்கள்லாம் யாரு? எதுக்காக இத்தனை அவசரம்? எம்பொண்ணு செத்துப்போன தகவலையே ஸ்கூல்ல சொல்லலை. என்ன நடந்ததுன்னும் யாருக்கும் தெரியலையே'' என்று கதறியழுதார்.
கோமதியின் பள்ளித்தோழிகளோ, 'அடுத்த வங்களுக்கு கஷ்டம்னா ஓடிவந்து உதவக்கூடிய, தங்கமான பொண்ணு கோமதி. ப்ளஸ் டூ ஸ்பெஷல் க்ளாஸ்க்காக 9 மணிக்கெல்லாம் ஸ்கூல் வந்தவ, கழிவறைக்கு போனபோது, மயங்கி விழுந்துட்டா. ஆசிரியர்கள் மீட்டுத்தான் மருத்துவமனைக்குக் கொண்டுபோனாங்க'' என்றனர் அதிர்ச்சி விலகாமல். 'அதிக ரத்தஅழுத்தம் இருந்ததுதான், கோமதி மயங்கி விழுந்து உயிரிழந்ததற்குக் காரணம்' என உடற்கூராய்வு தகவலில் சொல்லப் பட்டுள்ளது.
"கரூர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை விஜியின் உறவினர்களான சிலர் தலைமைச் செயலகத்தில் மிக உயர்பதவியில் இருக்கின்றனர். அவர்கள் மூலமாக வந்த பிரஷர் தான், கலெக்டர் முதல் அமைச்சர் வரை காட்டிய அவசரத்தின் பின்னணி' என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்!

plus-2-student-died-in-school-at-karur
மாணவி கோமதி - பள்ளியில் திரண்ட உறவினர்கள்
கரூர்
/www.hindutamil.in/ :கரூரில் பிளஸ் 2 மாணவி பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் வடக்கு பசுபதிபாளையத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் டைல்ஸ் ஒட்டும் பணி செய்து வருகிறார். இவர் மகள் கோமதி (17). இவர் கரூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
மாணவி கோமதி இன்று (நவ.11) பள்ளிக்கு வந்த நிலையில் சோர்வாக இருந்துள்ளார். தூங்குவது போல காணப்பட்ட கோமதியை ஆசிரியை முகம் கழுவி வருமாறு கூறியுள்ளார். பாத்ரூமில் முகம் கழுவி விட்டு வகுப்பறைக்குள் நுழைந்த கோமதி மயங்கி விழுந்தார்.
இதையடுத்து, பள்ளி நிர்வாகம் அவரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதித்த நிலையில், மாணவி முன்பே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை முன் திரண்டதால் பாதுகாப்புக்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன், காவல் கண்காணிப்பாளர் இரா.பாண்டியராஜன் ஆகியோர் மருத்துவமனை வந்தனர். அப்போது, பள்ளி முதல்வர் ரோஸிவெண்ணிலா உடனிருந்தார்.
பள்ளியில் நோட்ஸ் வாங்க மகள் கோமதி பணம் கேட்டதாகவும் இன்று வந்து தருவதாக நாங்கள் கூறிய நிலையில் அவர் இறந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி இருப்பதாக பெற்றோர் புகார் தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக