ஞாயிறு, 10 நவம்பர், 2019

ஸ்டாலினின் மிசா சிறை ஆவணங்கள்: வெளியிட்ட திமுக

மிசாவில் ஸ்டாலின் சிறை சென்ற ஆவணங்கள்: வெளியிட்ட திமுகமின்னம்பலம் : மிசாவில் ஸ்டாலின் சிறை சென்றது தொடர்பாக சட்டப்பேரவை ஆவணங்களிலிருந்த குறிப்புகளை கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது தொடர்பாக ஊடக விவாதம் ஒன்றில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியிடம் நெறியாளர் கேள்வி எழுப்ப சர்ச்சை உண்டானது. அதுகுறித்து பேசிய தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ஸ்டாலின் மிசாவில் சிறை செல்லவில்லை என்றும், மேலும் சில கருத்துகளையும் தெரிவித்திருந்தார்.
இதற்கு திமுகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிராக திமுகவினர் பல இடங்களில் அவரது உருவப் பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அமைச்சருக்கு எதிரான போராட்டத்தைக் கைவிடும்படி திமுகவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். மேலும், “மிசாவில் சிறை சென்றதற்கான ஆவணங்கள் சிறைத் துறையில், சட்டப்பேரவை ஆவணங்களில், நீதியரசர் எம்.எம். இஸ்மாயில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தில் நிரம்ப இருக்கின்றன. படிக்கத் தெரிந்தவர்கள், படிக்க மனமிருப்பவர்கள், பார்த்துத்தெரிந்து தெளிவு கொள்ளலாம்” என்றும் அவர் கூறியிருந்தார்.


எனினும் ஸ்டாலின் மிசாவில் சிறை சென்றது குறித்தான ஆவணங்களை வெளியிடாதது ஏன் என மாஃபா பாண்டியராஜன் கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், சிறை சென்றாரா, இல்லையா என்பதற்கான ஆவணங்களை இரண்டு நாட்களில் வெளியிட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மிசாவில் சிறை சென்றதற்கான குறிப்புகள் சட்டப்பேரவை ஆவணங்களில் இடம்பெற்றுள்ளதாகக் கூறி, அந்த ஆவணங்களையும் திமுகவின் அதிகாரபூர்வ தொலைக்காட்சியான கலைஞர் செய்திகள் நேற்று (நவம்பர் 9) வெளியிட்டுள்ளது.
அதில், “ஆவணங்களைத் தேடிப் படிக்க மனதற்ற அதிமுகவினர் தொடர்ந்து அவதூறு பரப்பி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை ஆவணத்தில் இடம்பெற்றுள்ள மிசா தடைச் சட்டத்தில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டது குறித்த குறிப்பைப் பகிர்ந்திருக்கிறோம்” என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக