திங்கள், 4 நவம்பர், 2019

மாஞ்சா நூல் விபத்து .. சிறுவன் உயிரிழப்பு ...மாஞ்சா நூல் பட்டம் விற்றால் குண்டர் சட்டம்!

மாஞ்சா நூலில் பட்டம் விற்றால் குண்டர் சட்டம்! மின்னம்பலம் : சென்னை கொருக்குப் பேட்டையில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் 3 வயது சிறுவன் அபினேஷ்வரன் உயிரிழந்தான். தடை செய்யப்பட்ட மாஞ்சா நூலை பயன்படுத்தியதன் விளைவாக தாய் தந்தை கண் முன்னே 3 வயது குழந்தை உயிரிழந்தது சென்னைவாசிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட ஆர்.கே.நகர் போலீசார், காற்றாடி பறக்க விட்டதாக காமராஜ் நகரை சேர்ந்த நாகராஜ் மற்றும் 15 வயது சிறுவன் உட்பட இருவரை அழைத்து சென்றுள்ளனர்.
அவர்கள் மீது ஐ.பி.சி. 304/1 மற்றும் மாநகர காவல் சட்டப்பிரிவு 71/14 ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் தினகரன், ”மாஞ்சா நூலை விற்பனை செய்வதோ, பயன்படுத்துவதோ சட்டப்படி தவறு. சென்னையில் மாஞ்சா நூலுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மாஞ்சா நூல் விற்பனை குறித்து ஆய்வு செய்ய 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாஞ்சா நூலை விற்பனை செய்வது, மற்றும் பயன்படுத்துவது தெரியவந்தால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும். சென்னையில் இனி இதுபோன்று ஒரு சம்பவம் நடைபெறாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. நேற்று நடந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளது. அதனடிப்படையிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. குழந்தை மாஞ்சா நூல் மாட்டி உயிரிழந்த விவகாரத்தில் இதுவரை 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் மாஞ்சா நூல் எங்கு வாங்கப்பட்டது? இதனை விற்பனை செய்தது யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
ஆன்லைனில் விற்கப்படும் மாஞ்சா நூலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாஞ்சா நூலை பயன்படுத்தியவர்கள், அதனை விற்பனை செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அபினேஷ்வரனின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக