செவ்வாய், 12 நவம்பர், 2019

புலிகள் இயக்கத்துக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை

மாலைமலர் : விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை விதித்த மத்திய அரசின் உத்தரவை டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி தலைமையிலான தீர்ப்பாயம் உறுதி செய்தது.
புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து இலங்கையை சேர்ந்த விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. அதன்பின்னர் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த தடை நீட்டிக்கப்பட்டு வந்தது. 2014-ம் ஆண்டு மே 14-ந் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து உத்தரவிட்டது.
இந்த ஆண்டு மே மாதமும் மத்திய அரசு விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டது. இந்த தடையை ஆய்வு செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்ட உத்தரவை தொடரலாமா? என்பது குறித்து ஆய்வு செய்ய டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி சங்கீதா பிந்த்ரா செகல் தலைமையில் ஒரு தீர்ப்பாயத்தை மே 27-ந் தேதி மத்திய அரசு அமைத்தது. இந்த தீர்ப்பாயம் டெல்லியிலும், சென்னையிலும் விசாரணை மேற்கொண்டது.

இதில் விடுதலைப்புலிகள் ஆதரவாளரான ம.தி.மு.க. தலைவர் வைகோ உள்ளிட்ட பலர் ஆஜராகி வாதிட்டனர். பின்னர் தீர்ப்பாயம் கடந்த 7-ந் தேதி விடுதலைப்புலிகள் இயக்கம் மீது மத்திய அரசு மேலும் 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டதை உறுதி செய்வது என்ற முடிவுக்கு வந்ததாக டெல்லி ஐகோர்ட்டு வட்டாரங்கள் தெரிவித்தன. தீர்ப்பாயம் தனது உத்தரவை மூடி முத்திரையிட்ட கவரில் வைத்து மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. மத்திய அரசு இதனை அறிவிக்கையாக விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படு கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக