புதன், 20 நவம்பர், 2019

ஐடி துறையில் 40,000 பேர் வேலையிழப்பு?

ஐடி துறையில் 40,000 பேர் வேலையிழப்பு?மின்னம்பலம் : வளர்ச்சி குறைந்து வருவதால் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் இந்த ஆண்டு 30,000 முதல் 40,000 நடுத்தரப் பிரிவு ஊழியர்களை வெளியேற்றக்கூடும் என்று தகவல் தொழில்நுட்பத் துறை வல்லுநரான டி.வி.மோகன்தாஸ் பாய் கருத்து தெரிவித்துள்ளார்.
மற்றொரு பெரிய அளவிலான பணி நீக்கங்கள் இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையைத் தாக்கும் என எச்சரிக்கைகள் வர தொடங்கியிருக்கின்றன. 10-15 வருட அனுபவம்கொண்ட, நடுத்தரப் பிரிவு ஊழியர்களாக வகைப்படுத்தப்பட்ட 30,000 முதல் 40,000 மூத்த ஊழியர்கள் வரை, வேலைவாய்ப்பை இழக்கும் நிலையை எதிர்கொள்வார்கள் எனத் தொழில்நுட்பத் துறை வல்லுநரான டி.வி.மோகன்தாஸ் பாய் கூறியுள்ளார்.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரியாக (சிடிஓ) பணியாற்றி தற்போது மணிபால் குழுமக் கல்வி நிறுவன தலைவராக இருக்கும் மோகன்தாஸ் பாய், “ஐடி துறையைச் சேர்ந்த 40,000க்கும் மேற்பட்ட மூத்த ஊழியர்களை எதிர்வரும் மாதங்களில் ஐடி நிறுவனங்கள் வெளியேறச் சொல்லலாம்” என்று எச்சரித்துள்ளார்.
முன்னதாக, இன்ஃபோசிஸின் தலைமை நிதி அதிகாரியாக இருந்த வி.பாலகிருஷ்ணன், பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களைச் சேர்ந்த அனைத்து நடுத்தரப் பிரிவு ஊழியர்களில் 5 முதல் 10 சதவிகிதம் பேரை வெளியேற்றலாம் என்று கணித்துள்ளார்.
மோகன்தாஸ் பாய் கூறும்போது, “தற்போது நடுத்தரப் பிரிவில் உள்ள பணியாளர்கள்தான் அதிலும் குறிப்பாக தங்களது தகுதியை மேம்படுத்திக் கொள்ளாதவர்கள்தான் வேலையை இழக்க நேரிடும். தாங்கள் பெறும் ஊதியத்துக்கு ஏற்ப தங்களது திறமையை வளர்த்துக் கொள்ளாதவர்கள்தான் இதுபோன்ற ஆட்குறைப்பு நடவடிக்கையில் பணிகளை இழப்பர்.
நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்படும்போது பதவி உயர்வு அளிப்பது என்பது வழக்கமான நிகழ்வாக இருக்கும். அதேசமயம் தேக்கநிலை நிலவும்போது அதிக ஊதியம் பெறுவோரைத்தான் முதலில் வேலையிலிருந்து எடுக்க நேரிடும்” என்று அவர் கூறினார்.
மேலும், ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி அடிப்படையில் இத்தகைய நிகழ்வு ஐடி துறையில் நடந்து கொண்டுதானிருக்கும். பணியிழப்பவர்களில் திறமையானவர்கள் இருந்தால் அவர்களுக்கு வேறு நிறுவனங்களில் வேலை நிச்சயம் கிடைக்கும். அந்தவகையில் 80 சதவிகிதம் பேருக்கு வேலை கிடைத்து விடுவதாக அவர் கூறினார்.
முன்னதாக, ஐடி துறையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் இன்ஃபோசிஸ் 10,000 ஊழியர்களையும், காக்னிஸண்ட் 6,000க்கும் அதிகமான ஊழியர்களையும், ஐபிஎம் 2,000 ஊழியர்களையும் அதிரடியாகப் பணி நீக்கம் செய்தது. இதைத் தொடர்ந்து, தற்போது இந்த அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக