சனி, 9 நவம்பர், 2019

பாஜக-சிவசேனா: 35 வருடக் கூட்டணி உடைகிறதா?

பாஜக-சிவசேனா: 35 வருடக் கூட்டணி உடைகிறதா?மின்னம்பலம் : மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், 35 வருட கூட்டணியான பாஜகவும் சிவசேனாவும் உடையும் நிலையில் உள்ளது.
மகாராஷ்டிராவில் 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நடந்த தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜகவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன. ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. ஆட்சியமைக்க போதுமான இடங்கள் பாஜக-சிவசேனா கூட்டணியிடம் இருந்த போதும், கருத்தொற்றுமை இல்லாததால், தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் இந்தக் கூட்டணி ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. சிவசேனாவின் முதல்வர் பதவி பகிர்வு ஒப்பந்தத்திற்கு பாஜக ஒத்துவராததால் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இதனிடையில், தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணியுடன் இணைந்து ஆட்சியமைக்க சிவசேனா முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், அம்முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் புதிய அரசு அமைவதில் முடிவு எட்டப்படாத நிலையில் நேற்றுடன்(நவம்பர் 8) பதவிக் காலம் முடிவதால் முதல்வர் பதவியில் இருந்து தேவேந்திர பட்னாவிஸ் விலகினார். ஆளுநரைச் சந்தித்து ராஜினாமா கடிதத்தை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அளித்தார். அதன் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தேர்தல் பின்பான பேச்சுவார்த்தை தோல்விக்கு சிவசேனா தான் முழுப் பொறுப்பு என விமர்சித்திருந்தார்.
இதுபற்றி சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், ‘‘மகாராஷ்டிர முதல்வர் பதவியில் இருந்து விலகியுள்ள பட்னாவிஸுக்கு எங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதேசமயம் மீண்டும் ஒருமுறை முதல்வராக கனவு காண வேண்டாம். சிவசேனா தலைமையில் தான் மகாராஷ்டிராவில் இனிமேல் ஆட்சியமையும். அடுத்த முதல்வர் எங்கள் கட்சியில் இருந்துதான் பதவியேற்பார்’’ எனக் கூறினார்.
இந்நிலையில், நேற்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, “அதிகாரத்தில் 50-50 ஃபார்முலா என்று பாஜக தலைவர் அமித் ஷா அளித்த வாக்குறுதியை பாஜக மதிக்கவில்லை” என்று உத்தவ் தாக்கரே குற்றம் சாட்டினார்.
மேலும் கூறிய அவர், “ஒரு நாள் சிவசேனா முதலமைச்சர் ஆள்வார் என்று நான் பால் தாக்கரேவுக்கு உறுதியளித்தேன். அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன். அந்த வாக்குறுதியை நிறைவேற்ற அமித் ஷாவோ தேவேந்திர பட்னாவிஸோ தேவையில்லை. கங்கையை சுத்தம் செய்யும் போது அவர்களின் மனமும் மாசுபட்டது மிகவும் வருத்தமாக இருக்கிறது. தவறான நபர்களுடன் நாங்கள் கூட்டணி வைத்தது குறித்து தற்போது மோசமாக உணர்கிறேன்.
நாங்கள் ஒருபோதும் விவாதத்திற்கான கதவுகளை மூடியதில்லை, பாஜக எங்களிடம் பொய் சொன்னார்கள், அதனால் நாங்கள் அவர்களிடம் பேசவில்லை. நாங்கள் இதுவரை தேசியவாத காங்கிரஸ் கட்சி உடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை” எனக் கூறினார்.
நேற்று மாலை ஆளுநரைச் சந்தித்த பின் தேவேந்திர பட்னாவிஸ், “முதல்வர் பதவி தொடர்பாக எந்த முடிவும் பாஜகவுக்கும், சிவசேனாவுக்கும் இடையே எடுக்கப்படவில்லை. முதல்வர் பதவியை பகிர்ந்து கொள்வதாக எங்கும் சொல்லவில்லை. அமித் ஷா மற்றும் நிதின் கட்காரி ஆகியோரும் இதனை கூறியுள்ளனர்” எனக் கூறினார்.
இதற்கு பதில் அளித்த உத்தவ் தாக்கரே, “முதலமைச்சர் பதவி குறித்து பேச்சுவார்த்தை எதுவும் நடத்தப்படவில்லை என்று பாஜக பொய் சொல்கிறது. இதனை அக்கட்சியினர் ஏற்றுக்கொள்ளாத வரை, நான் அவர்களுடன் பேச மாட்டேன். யார் உண்மையை பேசுகிறார்கள் என்பதற்கு பாஜகவிடம் எந்த சான்றிதழும் எனக்குத் தேவையில்லை. நமக்கிடையில் எந்த நம்பிக்கையும் இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்கள். எங்களுக்கும் அமித் ஷா மீதும் அமித் ஷா கூட்டணி மீதும் எந்த நம்பிக்கையும் இல்லை. அமித் ஷா முன்னிலையில் தான் அதிகாரத்தை சமமாகப் பகிர்வது ஒப்புக் கொள்ளப்பட்டது. பாஜகவால் பொய்யர் என்று முத்திரை குத்தப்பட்டதில் நான் அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறேன்” எனக் கூறியுள்ளார்.
35 ஆண்டுகால பயணம்
1984ஆம் ஆண்டிலிருந்து இந்துத்துவா அலையில் ஒன்றாக சவாரி செய்து வரும் இக்கட்சிகள் இன்று கருத்து வேறுபாட்டால் முரண்பட்டு நிற்கின்றன. எல்.கே.அத்வானி மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோரின் பாஜக தலைமையுடன் பால் தாக்கரே உடன்படிக்கைக்கு வந்து 1984 தேர்தலில் பாஜகவின் தேர்தல் சின்னத்தில் சிவசேனா வேட்பாளர்களை நிறுத்தியது.
இந்துத்துவம் அவர்களை ஒன்றிணைத்தது. மகாராஷ்டிராவில் ஒரு சராசரி வாக்காளர் மாநில மற்றும் தேசிய அளவில் சிவசேனாவிற்கும் பாஜகவுக்கும் இடையில் வேறுபாடு காட்டவில்லை, அவர்கள் தனித்தனியாக போட்டியிட்டாலும். அயோத்தி விவகாரம், ஆர்டிக்கள் 370, முத்தலாக், தேர்தல்களில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம், கலாச்சார தேசியவாதம் மற்றும் வெளியுறவுக் கொள்கை போன்ற சர்ச்சைக்குரிய விஷயங்களில் ஒத்த கருத்துக்களையே இவ்விரு கட்சியினரும் கொண்டுள்ளனர்.
இப்படியிருக்கும் பட்சத்தில் கடந்த சில வருடங்களாக இவ்விரு கட்சிகளுக்கும் இடையில் சின்ன சின்ன விரிசல்கள் விழுந்த வண்ணம் இருந்தன. குறிப்பாக சிவசேனாவின் முதல்வர் கனவு எட்டாக்கணியாக இருந்து வருவதை மாற்ற அக்கட்சி பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதனால், இந்தத் தேர்தலில் 50:50 ஃபார்முலாவை கையில் எடுத்தது சிவசேனா.
ஆட்சி மற்றும் அதிகாரத்தில் 50 சதவிகிதப் பங்கு வேண்டும் என்ற வேண்டுகோளுடன்தான் சிவசேனா கட்சி, பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து சட்டசபைத் தேர்தலைச் சந்தித்தது. சிவசேனா கட்சி 56 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக ஆட்சி அமைக்க வேண்டுமென்றால் சிவசேனா கட்சியின் ஆதரவு நிச்சயமாக தேவைப்படுகிறது. ஆனால், பா.ஜ.கவோ முதல்வர் பதவி தேவேந்திர பட்னாவிஸுக்குத்தான் என்பதில் உறுதியாக இருக்கிறது. இதற்கு சிவசேனா கட்சி உடன்படுவதாக இல்லை. முதல்வர் பதவி, ஆட்சியைமைப்பதில் இரண்டரை ஆண்டுகள் பகிர்வு என்பதில் சிவசேனா கட்சி உறுதியாக உள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவசேனா தனது அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் கட்சி தலைமையகத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மூன்று நட்சத்திர ஹோட்டலான ரங்ஷரதாவில் தங்க வைத்துள்ளது. அனைத்து எம்.எல்.ஏ.க்களும் அடுத்த உத்தரவு வரும் வரை ரங்ஷரதா ஹோட்டலில் தங்குமாறு சிவசேனா உத்தரவிட்டிருக்கிறது.
மேலும், நவம்பர் 15ஆம் தேதி வரை எம்.எல்.ஏக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என காவல்துறையினரிடம் கேட்டுள்ளது சிவசேனா. மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வருவதை ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி விரும்பவில்லை என்றாலும், ஆட்சியமைக்க யாரும் உரிமை கோராத பட்சத்தில், மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுவதை தவிர வேறு வழியில்லை என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக