ஞாயிறு, 10 நவம்பர், 2019

வெள்ளை வேன் கடத்தல் ; 300 பேர் கடத்தப்பட்டு சித்திரவதைகளுக்குள்ளாகி கொல்லப்பட்டனர் ; இரகசியத்தை போட்டுடைத்த வெள்ளை வேன் சாரதி

வெள்ளை வேன் கடத்தல் ; 300 பேர் கடத்தப்பட்டு சித்திரவதைகளுக்குள்ளாகி கொல்லப்பட்டனர் ; இரகசியத்தை போட்டுடைத்த வெள்ளை வேன் சாரதிவீரகேசரி : முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் இடம்பெற்ற வெள்ளைவேன் கடத்தல் விவகாரத்தின் பிரதான சூத்திரதாரியாக செயற்பட்டவர் கோத்தாபய ராஜபக்ஷவே என்றும் இவ்வாறு அண்ணளவாக 300 பேர் கடத்தப்பட்டு சித்திரவதைகளுக்கு உட்படுத்தி கொல்லப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு கடத்தப் பயன்படுத்திய வெள்ளை வேன் ஒன்றின் சாரதியாக பணியாற்றியதாக கூறப்படும் ஒருவர் தெரிவித்தார்.
கிருலப்பனையில் அமைந்துள்ள ஜனநாயக தேசிய அமைப்பு காரியாலயத்தில் இன்று அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் தலைமையில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதில் கலந்துக்கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பட்டார்.
வெள்ளை வேன் கடத்தலுடன் தனக்கு தொடர்பில்லை என்று கோத்தாபய தற்போது தெரிவித்து வருகின்றார். ஆனால் அவரே இதன் பிரதான சூஸ்திரதாரியாக செயற்பட்டவர். இவ்வாறு கடத்த பயன்படுத்திய வேன்களின் ஒன்றினது சாரதியாக நானும் பணிபுரிந்துள்ளேன். இந்த கடத்தலுக்கு பொலிஸாரும் , இராணுவத்தினரும் பெரிதும் ஒத்துழைப்புகளை வழங்கினர்.
கடத்தல் தொடர்பில் கோத்தாபய பிரேகேடியர் ஒருவருக்கும் , மேஜர் ஒருவருக்கும் ஆலோசனைகளை வழங்குவார். அவர்களே இதனை வெற்றிகரமாக செயற்படுத்துவர். இதன் போது நபர்களை கடத்துவதற்கு வாகனமொன்று பயன்படுத்தப்படுவதுடன் , அவரை மறைத்து வைத்து சித்திரவதைகளுக்கு உட்படுத்தும் இடத்திற்கு பிரிதொரு வாகனத்திலேயே அழைத்துச் செல்வார்கள். இந்த இடங்களில் அவர்கள் மறைத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படுவார்கள். பின்னர் மேலதிக தகவல்களை பெறுவதற்காக அவர்கள் சித்திரவதைகளுக்கும் ஆளாக்கப்படுவார்கள். இவ்வாறு பல கொடுமைகள் செய்த பின்னர் அவர்கள் கொலைச் செய்யப்படுவார்கள். பின்னர் சடலத்தில் உள் உறுப்புகளை அகற்றிவிட்டு மொணராகலை – சீத்தாவக்கை காட்டுப் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் போடுவார்கள். அந்த குளத்திலே 100 க்கும் அதிகமாதன முதலைகள் வாழுகின்றன. இன்றும் கூட நீங்கள் அந்த குளத்தை சோதனையிட்டால் மனித எலும்பு கூடுகள் கிடைக்கப்பெறும்.நான் இவர்களுடன் இணைந்து செயற்பட்ட போது இருவர் இவ்வாறு கடத்தப்பட்டு கொலைச் செய்யபட்டனர். அதில் இரண்டாவது நபரான 60 வயதுடைய ஒருவரை கடத்தும் போது இவரது பிள்ளை கதறியதை பார்த்ததும் எனக்கு அங்கிருக்க மனவர்த்தமாக இருந்தது. பின்னர் இங்கிருந்து சென்று விகாரையொன்றில் வாழ்ந்து வந்தேன். ஆனால் மக்களை காப்பாற்ற வேண்டும் என்று பின்னர் இவர்களுக்கு எதிராக முறைபாடளிக்க நடவடிக்கை எடுத்தேன். இந்த விவகாரம் தொடர்பில் மிரிஹான பொலிஸ் நிலையத்தில் முறைபாடளித்த போது , நிலையப் பொறுப்பதிகாரியாகவிருந்தவர் அதனை விசாரணைக்குட்படுத்தாமல் மறைத்து விட்டார். பின்னர் ஊடகங்களுக்கு தெரிவிக்கலாம் என்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது ஊடகங்களும் இதனை வெளியிட மறுத்து விட்டன.
இந்நிலையிலே அமைச்சர் ராஜித்த  இந்த விடயம் தொடர்பில் அக்கறை கொண்டுள்ளதாக தெரியவந்ததை அடுத்து அவரிடம் தெரிவித்தேன். பின்னர் அவர் எனுக்கு உதவுவதாக கூறினார். அதற்காகவே இன்று ஊடக சந்திப்பை மேற்கொண்டு தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக